சபைக் கூட்டங்களுக்குத் தயார்செய்து அவற்றை அனுபவியுங்கள்
1 ஒரு சகோதரக் கூட்டுறவாக, நாம் நம்முடைய வாராந்தர கூட்டங்களுக்கு தவறாமல் ஞானமாகக் கூடிவருகிறோம். (1 தீ. 4:15, 16) நாம் எவ்வாறு அவற்றை அனுபவித்து அவற்றிலிருந்து முழுமையான நன்மையைப் பெறமுடியும்?
2 கூட்டங்களுக்கு தயார் செய்வதற்காக ஒரு ஒழுங்கான அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படவேண்டும். சிலர் மற்றவர்களைக்காட்டிலும் அதிக நேரத்தைத் தயாரிப்பில் செலவிடமுடிந்தவர்களாய் இருக்கலாம். இருந்தபோதிலும், எவ்வளவு வேலையுள்ளவர்களாக நாம் இருந்தாலும், கூட்டங்களுக்கு தயார் செய்வதற்காக சிறிது நேரத்தைக் கண்டடைவது ஞானமுள்ளதாகும். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து தயாரிப்பது முக்கியமாகப் பிரயோஜனமுள்ளது.—எபே. 5:15, 16.
3 தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்காக: வாராந்தர பைபிள் வாசிப்பு அட்டவணையைத் தொடர்ந்து பின்பற்ற கடுமுயற்சி செய்யுங்கள். (யோசு. 1:8) சிந்திக்கப்போகும் பகுதியை மறுபார்வை செய்யுங்கள், மேலுமாக பேச்சாளர்களோடு சேர்ந்து பின்பற்றுவதற்கேதுவாகத் தேவையான பிரசுரங்களைக் கொண்டு வாருங்கள். இந்தத் தகவலை நீங்கள் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான வழிகளைக் குறித்து சிந்தியுங்கள்.
4 ஊழியக் கூட்டத்திற்காக: நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலைப் பாருங்கள். கலந்தாலோசிக்கப்படப்போகிற கட்டுரைகளை வாசியுங்கள். ஒரு காவற்கோபுர கட்டுரையிலிருந்தோ அல்லது வேறொரு பிரசுரத்திலிருந்தோ எடுக்கப்பட்டப் பகுதி சிந்திக்கப்படுமேயானால், அதையும் எடுத்துப் பார்த்து வாசியுங்கள். வெளி ஊழிய அளிப்புகள் நடித்துக் காண்பிக்கப்படுமேயானால், உங்களுடைய ஊழியத்தில் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக அவற்றை முன்கூட்டியே மறுபார்வை செய்யுங்கள்.
5 காவற்கோபுர படிப்பிற்காக: பாடத்தை முன்கூட்டியே வாசித்து, கேள்விகளுக்கான பதில்களைக் குறித்து வையுங்கள். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வேதவசனங்களை எடுத்துப்பார்ப்பது ஒரு சிறந்த புரிந்துகொள்ளுதலைப் பெற உங்களுக்கு உதவிசெய்யும். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் காரியங்களோடு இந்தப் பாடம் எவ்வாறு பொருந்துகிறதென்பதைக் குறித்து தியானிப்பது உங்களுடைய அறிவை விரிவாக்கும். ஒன்று அல்லது இரண்டு பாராக்களின்பேரிலாவது சுருக்கமான பதில்களைத் தயாரிப்பதன் மூலமாக படிப்பின்போது பங்குகொள்ளத் திட்டமிடுங்கள். “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடு”வதற்கு இது ஒரு முக்கியமான வழி.—எபி. 10:23.
6 சபை புத்தகப் படிப்பிற்காக: முதலில், அந்தப் பகுதியைப் பார்வையிடுங்கள்; அந்த அதிகாரத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகளைக் கவனியுங்கள். பின்பு, நீங்கள் வாசிக்கும்போது, முக்கியமான கருத்துக்களை நோக்குங்கள். அதை ஆதரிக்கும் பைபிள் வசனங்களை எடுத்துப் பாருங்கள். உங்களுடைய சொந்த வார்த்தையில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் அந்தப் பாடத்தைத் தயார் செய்த பிறகு, உங்களுடைய மனதில் அதை மறுபார்வை செய்யுங்கள். முக்கியமான குறிப்புகளையும் நியாயங்காட்டிப் பேசப்பட்ட விதத்தையும் ஞாபகப்படுத்திப் பார்க்க முயலுங்கள்.—2 தீ. 2:15.
7 கூட்டங்களை அனுபவியுங்கள்: கூட்டங்களை முழுமையாக அனுபவிக்க, குறித்த நேரத்தில் அங்கேயிருக்க வேண்டியது முக்கியம். யெகோவாவின் ஆவிக்காக கேட்டுச் செய்யக்கூடிய ஆரம்ப ஜெபத்தில் பங்குகொள்வதற்காக இது அவசியம். புத்துணர்ச்சியூட்டக்கூடிய ராஜ்ய பாடல்களிலிருந்தும் நீங்கள் பயனடைகிறீர்கள். மன்றத்தின் பின்புறத்தில் உட்காருவதற்கு உங்களுக்கு சிறுபிள்ளைகள் அல்லது மற்ற காரணங்களில்லாதபோது, மன்றத்தின் முன்புறத்தில் உட்காருவீர்களானால் குறைவான கவனச்சிதறல்களிருப்பதையும் நிகழ்ச்சிநிரலிலிருந்து அதிகப் பயன்பெறுவதையும் அநேகமாக நீங்கள் காண்பீர்கள். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது வெளியிலே கொண்டுபோகப்படவேண்டிய பிள்ளைகளையுடைய பெற்றோர்கள் வழியருகேயும் பின்புறமாகவும் உட்காருவதன் மூலமாக கவனச்சிதறலைக் குறைக்கலாம்.
8 வாசிக்கப்படும் வசனங்களை எடுத்துப் பார்க்க முயற்சி செய்யுங்கள். கேட்பவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள இது உங்களுக்கு உதவும். நீங்கள் கற்றுக்கொள்பவற்றை உங்களுடைய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேசுவது உங்கள் மனதில் தகவலைப் பதியவைக்கும். இந்த ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பது கூட்டங்களை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாகவும் அனுபவிக்கத்தகுந்ததாகவும் ஆக்கும். மேலுமாக அவை உண்மையாகவே ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நம்மை ஏவும்.’—எபி. 10:24, 25.