நம்முடைய பொருத்தனையைத் தினந்தோறும் நிறைவேற்றுதல்
1 சங்கீதக்காரனாகிய தாவீது யெகோவாவிடம் இவ்வாறு சொல்லும்படி உள்ளத்தில் தூண்டப்பட்டார்: “தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.” (சங். 61:8) ஒரு பொருத்தனை செய்வது முற்றிலும் தன்விருப்பார்ந்த காரியம் என்று தாவீது அறிந்திருந்தார். எனினும், தான் ஒரு பொருத்தனை செய்தால், அதை நிறைவேற்றுவதற்குக் கடமைப்பட்டிருந்ததையும் அவர் உணர்ந்திருந்தார். இருப்பினும், தினந்தோறும் தன் பொருத்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்காக அவர் யெகோவாவைத் துதித்தார்.
2 நாம் யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தபோது, அவருடைய சித்தத்தைச் செய்வதாக மனமுவந்து பொருத்தனைபண்ணினோம். நம்மைநாமே சொந்தம் கைவிட்டு, யெகோவாவைச் சேவிப்பதையே வாழ்க்கையில் நம்முடைய முதன்மையான ஈடுபாடாக்கினோம். (லூக். 9:23) ஆகையால், நாமுங்கூட தினந்தோறும் நம் பொருத்தனையைச் செலுத்த வேண்டும். (பிர. 5:4-6) “இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” என்பதை நாம் அறிந்திருப்பதால், தண்ணீர் முழுக்காட்டின்போது யாவரறிய நாம் அறிக்கை செய்தது, நம் வாழ்க்கை முழுவதிலும் பிரதிபலிக்க வேண்டும். (ரோ. 10:10) இது நற்செய்தியைப் பிரசங்கிப்பதையும் உட்படுத்துகிறது. (எபி. 13:15) தனிப்பட்டவருடைய சூழ்நிலைகள் வெகுவாக வேறுபடுகின்றன, எனினும் தினந்தோறும் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்துக்கு நாம் எல்லாரும் தனிப்பட்ட கவனம் செலுத்தலாம்.
3 தினந்தோறும் பிரசங்கிப்பதற்கு வாய்ப்புகளை உண்டாக்கிக்கொள்ளுங்கள்: எவருடனாவது நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியுள்ள ஓர் அனுபவமாக இருக்கிறது. இதைத் தினந்தோறும் செய்வதற்கு, நம்முடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கிறபோதெல்லாம் பிரசங்கிப்பதற்கு வாய்ப்புகளை நாம் உண்டாக்கிக்கொள்ள வேண்டும். வேலை செய்யுமிடத்தில் அல்லது பள்ளியிலுள்ள ஆட்களுக்கும் சுற்றுப்புறத்தாருக்கும் அல்லது ஒவ்வொரு நாளும் தாங்கள் எதிர்ப்படும் மற்றவர்களுக்கும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு முன்முயற்சி எடுத்தவர்கள், சந்தோஷமான பல அனுபவங்களைப் பெற்று மகிழ்ந்திருக்கின்றனர். கடிதங்கள் எழுதுவது அல்லது தொலைபேசியைப் பயன்படுத்துவதுங்கூட, மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதற்கான வழிவகைகளாக இருக்கலாம். இந்த வழிவகைகளையெல்லாம் பயன்படுத்துவதும், இவற்றோடு, வீடுவீடாகச் சாட்சிகொடுப்பதற்கும் மறுசந்திப்புகள் செய்வதற்கும் தவறாமல் நேரத்தை ஒதுக்கி வைப்பதும், வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்துவதிலிருந்து வரும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு வழிநடத்தலாம். ஆம், பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளை நாம் ஒவ்வொரு நாளும் உண்டாக்கிக்கொள்ளக் கூடியோராக இருக்கலாம்.
4 தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தை ஒரு சகோதரி தன்னுடைய இடை ஓய்வு நேரத்தில் வாசிக்கத் தொடங்கினார்கள். தன்னுடன் வேலைசெய்யும் தோழி ஒருவரையும் தினவாக்கியத்தைத் தன்னோடு சேர்ந்து வாசிக்கும்படி அழைத்தார்கள். அது அந்த அம்மாளுடன் பைபிள் படிப்பு நடத்துவதற்கு சீக்கிரத்தில் வழிநடத்தினது. ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமாக, வாரத்தில் ஐந்து நாட்கள் அவர்கள் படித்தார்கள். அவர்களுடைய அன்றாட படிப்பை, வேலைத்தோழர் மற்றொருவர் கவனித்தார். முடிவில் அவர், தான் செயலற்ற ஒரு சகோதரன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். அந்தச் சகோதரியின் ஆர்வத்தால் தூண்டியெழுப்பப்பட்டு, மறுபடியும் செயல்படுபவராகும்படி ஒரு மூப்பரிடம் சென்றார். இவ்வாறு இந்தச் சகோதரி, தன் பொருத்தனையைத் தினந்தோறும் நிறைவேற்றினதன்மூலம் வேறு இரண்டு ஆட்களின் வாழ்க்கையை நன்மைபயக்கும் முறையில் பாதித்தார்கள்.
5 யெகோவா நமக்குச் செய்திருக்கிற எல்லா நல்ல காரியங்களுக்காகவும் நன்றியுணர்வோடு பொங்கும் இருதயத்தால் நாம் தூண்டியெழுப்பப்படுகையில், நம்முடைய ஒப்புக்கொடுத்தல் பொருத்தனையைத் தினந்தோறும் நம்மால் முடிந்தளவு மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றி வருவது, மகிழ்ச்சியையும் மனத்திருப்தியையும் நமக்குக் கொண்டுவரும். சங்கீதக்காரனைப்போல், நாம் இவ்வாறு சொல்லலாம்: “என் கடவுளாகிய யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிக்கிறேன், வரையறையில்லா காலமளவும் உமது பெயரை நான் மகிமைப்படுத்துவேன்.”—சங். 86:12, NW.