ஒழுங்கான பயனியர் சேவைக்கு அதிக சகோதரர் தேவைப்படுகின்றனர்
1 ‘கர்த்தரின் வேலையில் செய்வதற்கு மிகுதியானதை எப்போதும் உடையோராக இருக்கும்படி’ பவுல் நம்மை ஊக்குவித்தார். (1 கொ. 15:58, NW) பலருக்கு இது, ஒழுங்கான பயனியர் சேவையை ஏற்பதைக் குறிக்கிறது. இந்தியாவில் ஒழுங்கான பயனியர் அணிகளில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 100 ஆட்கள் கூட்டப்பட்டு வருகின்றனர்!
2 தற்போது, இந்த நாட்டில் ஒழுங்கான பயனியர்களாகச் சேவிப்பவர்களில் மூன்றில் ஒரு பாகமானவர்கள் சகோதரிகளாக இருக்கின்றனர். (சங். 68:11, NW) அதிகப்படியான சகோதரர்கள் முழுநேர ஊழியர்களின் அணிகளைச் சேர்ந்துகொள்ளக் கூடுமானால் சபைக்கு எத்தகைய மகிழ்ச்சியாயிருக்கும்! (சங். 110:3) உலகப்பிரகாரமான மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட முக்கிய கடமைகளைச் சகோதரர் பலர் கவனிக்க வேண்டியதாக உள்ளதென்பது புரிந்துகொள்ளத்தக்கதே. சபையின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனிப்பதற்கும் மற்றவர்கள் கடினமாக உழைக்கின்றனர். ராஜ்யத்தின் சார்பாகத் தங்களைக் கடின முயற்சியில் ஈடுபடுத்தும் இந்த ஆட்களை நாங்கள் நன்றியோடு மதிக்கிறோம்.—1 தீ. 4:10, NW.
3 இருப்பினும், சகோதரரே உங்களில் இன்னும் அதிகமானப் பேர் ஒழுங்கான பயனியர் சேவையை ஏற்க முடியுமா? உங்கள் மனைவி பயனியர் ஊழியத்தைச் செய்துகொண்டிருந்தால், நீங்கள் அவர்களோடு சேர்ந்துகொள்ளக்கூடுமா? நீங்கள் வேலையினின்று ஓய்வு பெற்றவர்களானால், முழுநேர ஊழியத்தில் உங்கள் நேரத்தைச் செலவிடுவதைப் பார்க்கிலும் அதிகத் திருப்தி தரக்கூடிய வேறொன்றும் இல்லை என்பதை ஒப்புக்கொள்வீர்களல்லவா? நீங்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் தறுவாயிலிருந்தால், கூடுதலான ஊழிய சிலாக்கியங்களுக்கு வழியாக, ஒழுங்கான பயனியர் சேவையை ஏற்பதற்கு ஊக்கத்துடனும் ஜெபத்துடனும் சிந்தனை செய்திருக்கிறீர்களா?—எபே. 5:15-17.
4 ஒரு சகோதரன், ஒழுங்கான பயனியராக தான் சேவிக்கக்கூடும்படி, தன் லாபகரமான வியாபாரத்தை விற்றுவிட்டு, பகுதிநேர வேலையை ஏற்றார். அவருடைய சிறந்த வழிகாட்டுதலின்பேரில், அவருடைய நான்கு பிள்ளைகளில் மூவர், தங்கள் பள்ளி படிப்பை முடித்தவுடனே ஒழுங்கான பயனியர்கள் ஆனார்கள். நான்காவது பிள்ளை அவர்களைச் சேர்ந்துகொள்ள ஆவலாக இருந்தான். இந்தச் சகோதரனும் அவருடைய குடும்பத்தினரும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்.
5 ஒரு பெரிய கதவு திறந்திருக்கிறது: ஒழுங்கான பயனியர் சேவை ‘சுறுசுறுப்பான செயலுக்கு வழிநடத்துகிற ஒரு பெரிய கதவைத்’ திறக்கக்கூடும். (1 கொ. 16:9, NW) ஒழுங்கான பயனியர்களாக இருக்கிற சகோதரரை சபையில் பெருமளவு பயன்படுத்தலாம். ஆர்வமுள்ள வெளி ஊழிய நடவடிக்கை அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியோடு மேலும் கூட்டி, அவர்களுடைய தேவராஜ்ய முன்னேற்றத்துக்கு உதவிசெய்கிறது. ஒழுங்கான பயனியர் சேவை, கூடுதலான ஊழிய சிலாக்கியங்களுக்கு வழியைத் திறக்கலாம். பயனியர் செய்த முதல் ஆண்டுக்குப் பின், பயனியர் சேவை பள்ளியில் பங்குகொள்ளும் ஆசீர்வாதம் உள்ளது. மணமாகாத உதவி ஊழியர்களும் மூப்பர்களும் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் செல்ல முன்னேறலாம். இறுதியில் சகோதரர்கள், பிரயாண சேவைக்குத் தகுதியுள்ளவர்களாய் ஆகக் கூடும். ஆம், ஒழுங்கான பயனியர் ஊழியம், யெகோவாவின் அமைப்பில், இந்த மேலுமதிகமான ஊழிய சிலாக்கியங்களுக்குக் கதவைத் திறக்கிறது.
6 ஒழுங்கான பயனியர் சேவை செய்வதற்குத் தங்கள் விவகாரங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ளக்கூடிய சகோதரர், அதிகமாய்க் கொடுப்பதிலிருந்து வரும் மேலுமதிகமான சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.—அப். 20:35.