ஒரு பயனியராக யெகோவாவை நீங்கள் சேவிக்க முடியுமா?
1 பேச்சாளர் “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டில் ஒரு பேச்சில் இதை கேட்டார்: “நீங்கள் பயனியர் சேவை செய்ய முடியுமா? நீங்கள் பயனியர் சேவை செய்வீர்களா?” அர்மகெதோன் மிக அருகாமையிலிருப்பதன் காரணமாக இத்தகைய கேள்விகள் பொருத்தமான கேள்விகளாகவே இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். எப்பொழுதையும்விட இந்தப் பிரசங்க வேலை மிகவும் அவசரமாக செய்துமுடிக்கப்படவேண்டும் என்று இது காட்டுகிறது.—1 கொரி. 7:29எ.
2 பயனியர் சேவை கடினமான வேலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது சுய சிட்சையையும் நல்ல ஒழுங்கமைப்பையும் கேட்கிறது. என்றாலும் ஊழியத்தில் நாம் படுகிற பிரயாசம் “விருதாவாயிராது.” (1 கொரி. 15:58) நாம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கும் நேரத்தையும் ஆற்றலையும் உறிஞ்சிக்கொள்கிற மற்ற நடவடிக்கைகளையுங்குறித்து அப்படியே சொல்ல முடியுமா? அவருடைய சேவையில் வைராக்கியத்தோடு ஈடுபடுவதற்கு யெகோவாவிடமிருக்கும் அன்புதானே கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது, யெகோவாவுடைய சேவையில் வைராக்கியம் கொண்டிருப்பது அநேகரைப் பயனியர் வேலையில் ஈடுபடுவதற்கு வழிநடத்தியிருக்கிறது.—1 யோவான் 5:3; வெளி. 4:11.
3 உயர்நிலைப் பள்ளியை முடித்திருக்கும் அநேக யெகோவாவின் இளம் ஊழியர்கள் பயனியர் சேவையில் ஈடுபடுவதைக் குறித்து உள்ளார்ந்த அக்கறையோடு யோசிக்கின்றனர். அது முற்றமுழுக்க பொருத்தமானது. முழுநேர ஊழியத்தைக் காட்டிலும் எந்த வேலை அவ்வளவு முக்கியமானதாயிருக்கக்கூடும்? (மத். 6:33) கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படவேண்டும்; இது யெகோவாவுடைய வேலையாயிருக்கிறது, ஒருவர் தன்னுடைய இளம் பருவமுதல் அதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது என்னே ஒரு சிலாக்கியம்!—மத். 24:14.
4 உங்களுடைய பிள்ளைகள் இந்த முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்கு பெற்றோராகிய நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா? அவர்கள் இந்தப் பயன்மிகுந்த வேலையில் தங்கள் முழு இருதயத்தையும் ஆத்துமாவையும் மனதையும் பலத்தையும் பயன்படுத்துவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்களுடைய பிள்ளைகள் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்களா? (மாற்கு 12:30) தங்கள் பள்ளி வருடங்களில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துணைப் பயனியர்களாக பங்குகொள்வதன் மூலம் அநேக இளம் பிரஸ்தாபிகள் தங்களை ஒழுங்கான பயனியர் ஊழியத்திற்கு ஆயத்தம் செய்கிறார்கள். இப்படி யெகோவாவிடம் கொண்டுள்ள பக்தி அவருடைய இருதயத்தை அனலூட்டுகிறது!—நீதி. 27:11.
5 பயனியர் சேவையில் ஈடுபடுவதற்கு எல்லோருக்கும் அவர்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிப்பதில்லையென்பது உண்மைதான். என்றாலும், விவாகமானவராயிருந்தாலும் விவாகமின்றியிருந்தாலும், இளைஞராயிருந்தாலும் வயதில் முதிர்ந்தவராயிருந்தாலும், யெகோவாவைச் சேவிப்பதில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பயனியர் ஊழியராக இருப்பதற்கு உள்ளார்ந்த அக்கறையோடும் ஜெபசிந்தையோடும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? (கொலோ. 3:23) விவாகமான அநேக இளம் தம்பதிகள் தங்களில் யாராகிலும் ஒருவரோ அல்லது இரண்டு பேருமாக சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய தங்கள் ஊழியத்தை விரிவாக்குவதற்கு உழைக்கின்றனர்.
6 ஒருவேளை தற்போது நீங்கள் ஒழுங்கான பயனிராக சேவை செய்ய முடியவில்லையென்றால், ஒரு துணைப் பயனியராக சேவிக்க முடியுமா? ஒருவேளை உங்களுடைய சபையில் இருக்கும் அநேக பிரஸ்தாபிகள் ஏப்ரல் மாதத்தின்போது அதைச் செய்வதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். நீங்களும் அவர்களோடு சேர்ந்துகொள்ள முடியுமா? யெகோவாவுடைய உண்மையுள்ள ஊழியர்கள் யாவரும் ஆசீர்வாதங்களைப் பெற்றபோதிலும், செம்மறியாட்டைப் போன்ற ஆட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ராஜ்ய சேவையில் அதிக நேரத்தை செலவிடும் நிலையிலிருப்பவர்களுக்குக் கூடுதலான ஆசீர்வாதங்கள் வர காத்திருக்கின்றன.—அப். 20:35.