முன்னேறும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துதல்
1 டான்ஜானியாவிலுள்ள ஒரு நர்ஸ், அர்ஜன்டினாவிலுள்ள ஒரு இளம் பெண், லாட்வியாவிலுள்ள ஒரு தாய்—இவர்களுக்குள் பொதுவாக இருப்பது என்ன? இவர்கள் மூவரும் அறிவு புத்தகத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒருதடவைக்கும் அதிகமாக படிக்க விருப்பப்பட்டதால் தங்களது வீட்டு பைபிள் படிப்புகளில் வேகமாக முன்னேற்றம் காண்பித்தார்கள் என 1997 வருடாந்தர புத்தகம் ([ஆங்கிலம்] பக். 8, 46 மற்றும் 56) சொல்கிறது. முடிந்தபோதெல்லாம், ஒவ்வொரு படிப்பின்போதும் புத்தகத்திலிருந்து ஒரு முழு அதிகாரத்தையும் கலந்தாலோசிக்க பிரஸ்தாபிகள் முயற்சி எடுக்க வேண்டுமென சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனாலும் அப்படிச் செய்வதை சிலர் ஒரு சவாலாக காண்கிறார்கள். சூழ்நிலையும் ஒவ்வொரு மாணாக்கருடைய கிரகிக்கும் திறனும் முக்கிய பங்கு வகித்தாலும், அனுபவம்வாய்ந்த போதனையாளர்கள் கீழ்கண்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றிகண்டிருக்கின்றனர்.
2 ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் கலந்தாலோசிக்கப்பட்டிருந்ததுபோல், உங்கள் மாணாக்கர்களை படிப்பிற்காக தயார்செய்யும்படி பயிற்றுவிப்பது முக்கியம். துவக்கத்தில், இதைப் பற்றி விளக்கி, எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை செய்துகாண்பிப்பது நல்லது. உங்கள் சொந்த அறிவு புத்தகத்தை அவர்களிடம் காண்பியுங்கள். முதல் பாடத்தை ஒன்றுசேர்ந்து தயாரியுங்கள். அச்சிடப்பட்டுள்ள கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கும் முக்கிய வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களைக் கண்டுபிடித்து, பின் அடிக்கோடிடுவதற்கு அல்லது குறித்துவைப்பதற்கு மாணாக்கர்களுக்கு உதவுங்கள். இதற்காக சில பிரஸ்தாபிகள் தங்களது மாணாக்கர்களுக்கு ஹைலைட்டரைக் கொடுத்திருக்கின்றனர். படிப்பிற்காக தயாரிக்கும்போது எல்லா வேதவசனங்களையும் எடுத்துப் பார்க்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உண்மையில் அவர்களை சபை புத்தகப் படிப்பிற்கும் காவற்கோபுர படிப்பிற்கும்கூட பயிற்றுவித்துக்கொண்டிருப்பீர்கள்.—லூக். 6:40.
3 ஒரு நல்ல போதகர், மாணாக்கரை மனம்திறந்து பேச விடுவார், தானே அதிகம் பேசிக்கொண்டிருக்கமாட்டார். சின்னச் சின்ன விஷயங்களுக்காக, பேசப்படும் தலைப்பிலிருந்து விலகிச்செல்லாமல் இருப்பார். தேவையில்லா விஷயங்களை அவர் சொல்லமாட்டார். அதற்கு மாறாக, அவர் பாடத்தின் முக்கிய குறிப்புகளை வலியுறுத்திச் சொல்வார். கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக மாணாக்கர்களுக்கு கூடுதலான மற்ற பிரசுரங்களை சிலர் அளித்திருக்கின்றனர். மேலும், சபை கூட்டங்களுக்கு வருவதன் மூலம் கூடுதலான விவரங்களை ஆர்வமுள்ள நபர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
4 பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேதவசனங்களையும் எடுத்துப்பார்ப்பது தேவையில்லை. பாராவில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வசனங்களிலுள்ள சில முக்கிய குறிப்புகளை விளக்கலாம். மறுபார்வையின்போது, கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய வசனங்களை வலியுறுத்தி, அவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள்.
5 படிப்பு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?: படிப்பு ஒரு மணிநேரத்திற்கு மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. சில மாணாக்கருக்கு நேரம் இருப்பதால் இன்னும் அதிகநேரம் படிக்க விருப்பப்படலாம். அல்லது வாரத்தில் ஒருமுறைக்கும் அதிகமாக படிக்க விரும்பலாம். அவ்வாறு செய்ய முடிந்தவர்களுக்கு இது பிரயோஜனமாயிருக்கும்.
6 ஏசாயா 60:8 வர்ணிக்கும் விதமாக, இன்று யெகோவாவைத் துதிக்கும் ஆயிரக்கணக்கான புதியவர்கள் அவரது வணக்கத்தாரின் சபைகளுக்குள் ‘மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிறார்கள்.’ செம்மறியாடு போன்ற மக்களை யெகோவா விரைவாக கூட்டிச்சேர்க்கையில், அவரோடு நெருக்கமாக வேலைசெய்ய நம் பங்கில் தேவைப்படுவதை நாம் அனைவரும் செய்வோமாக.—ஏசா. 60:22.