ஆர்வமுள்ள அனைவர்பேரிலும் உண்மையான அக்கறை காண்பியுங்கள்
1 உலகளாவிய ராஜ்ய அறிவிப்பு வேலை சீக்கிரத்தில் முடிவிற்கு வரும், அதன்பின் “தேவனை அறியாத” அனைவரும் அழிக்கப்படுவார்கள். (2 தெ. 1:7-9) இவ்வாறு, மற்றவர்களது உயிரின்பேரிலுள்ள உண்மையான அக்கறை, முடிந்தளவுக்கு ராஜ்ய செய்தியை அனைவருக்கும் பிரசங்கிக்கும்படி யெகோவாவின் மக்களைத் தூண்டுகிறது.—செப். 2:3.
2 ஒவ்வொரு மாதமும், ‘நற்காரியங்களின் சுவிசேஷத்தை’ கேட்க விருப்பப்படுவோரை தேடி கண்டுபிடிப்பதற்காக லட்சக்கணக்கான மணிநேரங்கள் செலவிடப்படுகிறது. (ஏசா. 52:7) தற்போதைய பிரசுர அளிப்பிற்கு பிரதிபலிப்பவர்களாய், அநேக நபர்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப் பிரதிகளையோ அவற்றிற்கான சந்தாக்களையோ பெற்றிருக்கின்றனர், அல்லது கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களிடமான உண்மையான அக்கறை, இவர்கள் அனைவரையும் சென்று சந்திக்கும்படி நம்மைத் தூண்ட வேண்டும்.—நீதி. 3:27.
3 திருத்தமான பதிவுகளை வைத்திருங்கள்: ஆர்வம் காண்பித்தவர்களைக் குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரசுரங்களைக் குறித்தும் முழுமையான, திருத்தமான பதிவுகளை வைத்திருந்தால் நீங்கள் அதிகத்தைச் சாதிக்கலாம். வீட்டுக்காரரின் பெயர், விலாசம், நீங்கள் சந்தித்த தேதி மற்றும் நேரம், அளிக்கப்பட்ட பிரசுரம், கலந்தாலோசிக்கப்பட்ட பொருள் போன்ற தகவல்கள், நீங்கள் அவர்களை மறுபடியும் சந்திக்கும்போது அதிக திறம்பட்ட விதத்தில் பேச உதவும். மேலும், முதல் சந்திப்பில் வீட்டுக்காரர் சொன்ன சில குறிப்புகளை நீங்கள் எழுதி வைத்தால், மறுசந்திப்பின்போது நீங்கள் அவற்றைப் பார்ப்பதன் மூலம் பலன்தரத்தக்க விதத்தில் கலந்தாலோசிப்பைத் தொடரலாம்.
4 மறுசந்திப்பு செய்வதை தள்ளிப்போடாதீர்கள்: சென்ற மாதம் உங்களிடமிருந்து பிரசுரங்களைப் பெற்றுக்கொண்ட எத்தனைபேரை நீங்கள் மறுபடியும் சந்திக்க முயற்சித்திருக்கிறீர்கள்? பல வாரங்கள் சென்றபின்னும் நீங்கள் அவர்களை சந்திக்காமலேயே இருக்கிறீர்களா? அவர்களது நித்திய நலனின்பேரிலான உண்மையான அக்கறை, முடிந்தளவு சீக்கிரத்தில் அவர்களை சென்று சந்திக்கும்படி உங்களைத் தூண்ட வேண்டும். கலந்தாலோசிப்பு நினைவில் இருக்கும்போதே, அதாவது ஒருசில நாட்களுக்குள் அவர்களை மீண்டும் சந்திப்பது பலன்தரும். அவர்களது அக்கறையைத் தூண்டுவதற்கு காலந்தாழ்த்தாமல் மறுசந்திப்பு செய்வதன் மூலம், சாத்தான் ‘வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுவதற்கு’ முன் அவனது முயற்சிகளை உங்களால் தடை செய்ய முடியும்.—மாற். 4:15.
5 தயாரிப்பு அவசியம்: நீங்கள் மறுசந்திப்புகள் செய்வதில் எவ்வளவு திறம்பட்டவர்களாய் இருக்கிறீர்கள் என்பது, நீங்கள் எந்தளவுக்கு நன்றாக தயாரிக்கிறீர்கள் என்பதன்பேரில் நேரடியாக சார்ந்திருக்கிறது. நீங்கள் எப்படி அணுகப்போகிறீர்கள் என்பதை, செல்வதற்கு முன்பே திட்டமிடுங்கள். நீங்கள் சந்தாக்களையோ தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளிக்கும்போது பயன்படுத்துவதற்கு பலன்தரத்தக்க அநேக பிரசங்கங்களை ஏப்ரல் 1997 நம் ராஜ்ய ஊழிய-த்தின் பின்பக்கம் அளிக்கிறது. அடுத்தது, நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் சொல்வதற்கான சில குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆர்வம் காட்டியவர்களை மறுசந்திப்பு செய்கையில் என்ன சொல்லலாம்? எவ்வாறு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்?
6 பூமியை சுத்திகரித்து, அதை ஒரு மேம்பட்ட வாழ்விடமாய் மாற்றுவதற்கு என்ன தேவைப்படும் என்ற கலந்தாலோசிப்பைத் தொடருகையில், நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
◼ “சென்றமுறை, பூமி சமாதானமான பரதீஸாக மாற்றப்படுவதற்கு பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதைக் குறித்து நாம் பேசினோம். இந்த வேலையை செய்வதற்குத் தேவையான அனைத்தும் மனிதர்களிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] மனித விவகாரங்களில் கடவுள் தலையிடும்போது என்ன நடக்கும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.” ஏசாயா 35:1-ஐ வாசியுங்கள். பின் அறிவு புத்தகத்தில் முதல் அதிகாரத்திற்குத் திருப்பி, 11-16 பாராக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்தி, கடவுள் எதை நிறைவேற்றப்போகிறார் என்பதை காண்பியுங்கள். இந்தப் புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பைத் துவங்குவதாகச் சொல்லி தொடர்ந்து சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.
7 முதல் சந்திப்பில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசி, “தேவைப்படுத்துகிறார்” சிற்றேட்டை நீங்கள் அளித்திருந்தால், மறுசந்திப்பின்போது இப்படிச் சொல்லலாம்:
◼ “போனமுறை நாம் சந்தித்தபோது, கடவுளுடைய ராஜ்யம் என்பது முழு பூமியையும் ஆளப்போகும் மெய்யான ஒரு அரசாங்கம் என்பதை அறிந்துகொண்டோம். இயேசு கிறிஸ்து அந்த அரசாங்கத்தின் அரசராக இருப்பாரென பைபிள் சொல்கிறது. இப்படிப்பட்ட அரசாங்கத்தையும் அரசரையும் கொண்டிருப்பதால் கிடைக்கப்போகும் நன்மைகளை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை 6-வது பாடத்திற்கு திருப்புங்கள். 6, 7-வது பாராக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளையும் 13-வது பக்கத்திலுள்ள படத்தையும் பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யம் எதிர்காலத்தில் மனிதவர்க்கத்துக்கு என்ன செய்யப்போகிறதென்பதை காண்பியுங்கள். தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்; பொருத்தமாயிருந்தால் அறிவு புத்தகத்தை அறிமுகப்படுத்தி பைபிள் படிப்பை அளியுங்கள்.
8 உலக மதங்கள் மனிதவர்க்கத்திற்கு பிரச்சினைகளையே உண்டுபண்ணியிருக்கின்றன என ஒத்துக்கொள்ளும் எவரையாவது நீங்கள் சந்தித்திருந்தால், மறுசந்திப்பின்போது இப்படிக் கேட்கலாம்:
◼ “எந்த மதத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார், அதை நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற இந்தச் சிற்றேடு, உண்மை மதத்தை அடையாளங்காட்டும் குறிப்புகளை அளிக்கிறது.” 13-வது பாடத்திற்கு திருப்பி, 3-7 பாராக்களில் நேரெழுத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குறிப்புகளை சிறப்பித்துக் காண்பியுங்கள். இப்படிச் சொல்லி நீங்கள் தொடரலாம்: “உண்மையான மதத்தை தெரிந்துகொள்வதோடுகூட, தனிப்பட்ட விதமாக கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.” யோவான் 4:23, 24-ஐ வாசியுங்கள். இதைக் குறித்து இன்னுமதிகம் கலந்துபேசுவதாக சொல்லுங்கள். சிற்றேட்டை பாடம் 1-க்கு திருப்பி நாம் பைபிள் படிப்பு நடத்தும் முறையை செய்துகாண்பியுங்கள்.
9 குடும்ப மகிழ்ச்சியைப் பற்றி தொடர்ந்து கலந்தாலோசிக்க நீங்கள் மீண்டும் செல்லும்போது, கீழ்காண்பவற்றைப் போன்ற எதையாவது நீங்கள் சொல்லலாம்:
◼ “நாம் முதன்முதலில் சந்தித்தபோது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையைப் பின்பற்றுவதே குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என நான் உங்களுக்குச் சொன்னேன். நவீன குடும்பத்தின் தேவைகளை எடுத்துக்கொள்கையில், பைபிள் பழமையானது என நினைக்கிறீர்களா அல்லது நம் காலத்திற்கு ஏற்றது என நினைக்கிறீர்களா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். அறிவு புத்தகத்தை அளியுங்கள். 2-வது அதிகாரத்திற்குத் திருப்பி, 13-வது பாராவில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை வாசியுங்கள். 3-வது பாராவிலுள்ள குறிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு குடும்ப பைபிள் படிப்பை அளியுங்கள்.
10 திருத்தமான பதிவுகளை வைத்துக்கொள்வதன் மூலமும், தேவைப்படும் தயாரிப்பைச் செய்வதன் மூலமும், அக்கறையைத் தூண்டுவதற்கு காலந்தாழ்த்தாமல் மறுசந்திப்பு செய்வதன் மூலமும், இரட்சிப்பின் வழிக்கு அவர்களை கவர்ந்திழுக்கும் வகையான அன்பை நாம் காண்பிக்கலாம்.—மத். 22:39; கலா. 6:10.