கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
மறுசந்திப்பு செய்யவும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கவும் உதவுகிற ஒரு புதிய சிற்றேடு
1. மறுசந்திப்பு செய்யவும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கவும் உதவுகிற எந்தச் சிற்றேடு ‘இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!’ மாநாட்டில் வெளியிடப்பட்டது?
1 ‘இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!’ மாவட்ட மாநாட்டில் கடவுள் சொல்லும் நற்செய்தி! என்ற சிற்றேட்டை பெற்றுக்கொண்டபோது நாம் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம் இல்லையா? மறுசந்திப்பு செய்யவும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கவும் இது பேருதவியாக இருக்கும். இந்தச் சிற்றேடு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை மாற்றீடு செய்கிறது. அதில் உள்ளதைப் போலவே இந்தப் புதிய சிற்றேட்டிலும் பாடங்கள் சுருக்கமாக இருக்கின்றன; அதனால், வாசற்படியில் நின்றே பைபிள் படிப்பு எடுக்க சுலபமாக இருக்கும். கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற மற்றும் புதிய மாணாக்கர்களுக்கு ஏற்றுக்கொள்ள கடினமாகத் தோன்றுகிற விஷயங்கள் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் விளக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய சிற்றேட்டில் பைபிளிலுள்ள நற்செய்திக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது.—அப். 15:35.
2. நற்செய்தி சிற்றேடு எதற்காகத் தயாரிக்கப்பட்டது?
2 இது எதற்காகத் தயாரிக்கப்பட்டது? மக்களைச் சத்தியத்தின் பக்கம் கவர்ந்திழுக்கவும், அதைத் தொடர்ந்து பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் அவர்களுக்குப் படிப்பை ஆரம்பிக்கவும் உதவுகிற ஒரு எளிமையான பிரசுரம் வேண்டுமென உலகெங்கும் உள்ள நம் சகோதரர்கள் கேட்டு வந்தார்கள். நிறைய வீட்டுக்காரர்கள் ஒரு புத்தகத்திலிருந்து படிப்பதற்குத் தயக்கம் காட்டலாம், ஆனால் பெரும்பாலும் சிறிய சிற்றேட்டிலிருந்து படிக்க ஆர்வம் காட்டலாம். அதுமட்டுமல்ல, சிற்றேடாக இருந்தால் அதை ஏராளமான மொழிகளில் மொழிபெயர்ப்பது சுலபம்.
3. மற்ற படிப்புப் பிரசுரங்களிலிருந்து இந்தச் சிற்றேடு எப்படி வித்தியாசப்படுகிறது?
3 எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது: நம்மிடமுள்ள பெரும்பாலான பிரசுரங்கள் ஒருவருடைய உதவி இல்லாமல் வீட்டுக்காரரே படித்து சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சிற்றேடு அப்படியில்லை. ஒருவருடைய உதவியோடு படிக்கும் விதத்தில்தான் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை வீட்டுக்காரருக்குக் கொடுக்கும்போது ஓரிரு பாராக்களைக் கலந்துபேசுவது நல்லது. பாராக்கள் சிறியதாக இருப்பதால் வீட்டு வாசற்படியிலேயே அல்லது வேலை செய்யும் இடத்திலேயே பைபிள் படிப்பை நடத்துவது சுலபம். பொதுவாக, பாடம் 1-லிருந்து படிப்பை ஆரம்பிப்பது நல்லது என்றாலும், எந்தப் பாடத்திலிருந்தும் நாம் படிப்பை ஆரம்பிக்கலாம்.
4. பைபிளிலிருந்து நேரடியாகக் கற்றுக்கொடுக்க இந்தச் சிற்றேடு நமக்கு எப்படி உதவுகிறது?
4 நம்முடைய பெரும்பாலான பிரசுரங்களில், கேள்விகளுக்கு பாராவிலிருந்தே பதிலைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இந்தப் பிரசுரத்திலுள்ள கேள்விகளுக்கு முக்கியமாக பைபிளில்தான் பதில்களைக் கண்டுபிடிக்க முடியும். அநேகர் ஒரு பிரசுரத்திலிருந்து கற்றுக்கொள்வதைவிட பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளத்தான் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வசனம் கொடுக்கப்படாமல், வசன எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வசனங்களை பைபிளிலிருந்து அவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான், படிக்கும் விஷயங்கள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறதெனப் புரிந்துகொள்வார்கள்.—ஏசா. 54:13.
5. படிப்பு நடத்துபவர் ஒவ்வொரு முறையும் படிப்பிற்கு நன்கு தயாரிப்பது ஏன் முக்கியம்?
5 இந்தச் சிற்றேடு எல்லா வசனங்களுக்கும் விளக்கமளிப்பதில்லை. ஏன்? ஏனென்றால், மாணாக்கர் கேள்வி கேட்பதற்குத் தூண்டும் விதத்திலும், கற்றுக்கொடுப்பவர் தன் கற்பிக்கும் திறனைப் பயன்படுத்தும் விதத்திலும் இந்தச் சிற்றேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு முறையும் படிப்பிற்கு நன்கு தயாரிப்பது முக்கியம். தயவுசெய்து கவனிக்கவும்: படிப்பு நடத்தும்போது அளவுக்கதிகமாகப் பேசாதீர்கள். வசனங்களை விரிவாக விளக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம்தான். என்றாலும், அந்த வசனத்திலிருந்து வீட்டுக்காரர் என்ன புரிந்துகொண்டார் என விளக்கும்படி அவரிடமே கேட்பதுதான் சிறந்தது. சாதுரியமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் ஒவ்வொரு வசனத்தின் விளக்கத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வீட்டுக்காரருக்கு நம்மால் உதவ முடியும்.—அப். 17:2.
6. இந்தச் சிற்றேட்டை எப்படிப் பயன்படுத்தலாம்: (அ) கடவுளையும் பைபிளையும் மதிக்காதவர்களிடம் பேசும்போது. (ஆ) வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது. (இ) முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்கும்போது. (ஈ) மறுசந்திப்பு செய்யும்போது.
6 மற்ற படிப்புப் பிரசுரங்களைப் போலவே இந்தச் சிற்றேட்டையும் எப்போது வேண்டுமானாலும் நாம் ஊழியத்தில் கொடுக்கலாம், அந்த மாதத்திற்கான பிரசுர அளிப்பாக இல்லாவிட்டால்கூட கொடுக்கலாம். இந்தச் சிற்றேட்டைப் பயன்படுத்தி, முதல் சந்திப்பிலேயே வாசற்படியில் நின்றவாறு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது நிறையப் பேருக்குச் சுலபமாக இருக்கும். அதோடு, மாவட்ட மாநாட்டில் சொல்லப்பட்டதுபோல் ‘மறுசந்திப்பு செய்வதற்கு இது உண்மையிலேயே அருமையான கருவி!’—பக்கங்கள் 6-8-லுள்ள பெட்டிகளைப் பாருங்கள்.
7. இந்தச் சிற்றேட்டைப் பயன்படுத்தி நீங்கள் எப்படி ஒரு பைபிள் படிப்பை நடத்தலாம்?
7 படிப்பை எப்படி நடத்துவது: முதலாவதாக, தடித்த எழுத்திலுள்ள கேள்வியை வாசியுங்கள். அடுத்ததாக, அந்தப் பாராவையும் சாய்வெழுத்திலுள்ள வசனத்தையும்/வசனங்களையும் வாசியுங்கள். வசனத்தின் அர்த்தத்தைப் புரிய வைக்க வீட்டுக்காரரிடம் சாதுரியமாகக் கேள்விகள் கேளுங்கள். அடுத்த பகுதிக்குச் செல்வதற்குமுன் தடித்த எழுத்திலுள்ள கேள்வியைத் திரும்பவும் கேட்டு வீட்டுக்காரர் புரிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். முதல் சில வாரங்களுக்கு ஒரு கேள்விக்கான பதிலை மட்டும் சிந்திப்பது சிறந்தது. போகப் போக, முழு பாடத்தையும் ஒரேசமயத்தில் சிந்திக்கலாம்.
8. வசனங்களை வாசிப்பதற்குமுன் என்ன சொல்வது நல்லது, ஏன்?
8 “வாசியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களில்தான் கேள்விக்கான நேரடி பதில் இருக்கும். வசனங்களை வாசிப்பதற்குமுன் “அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதியிருக்கிறார்” என்றோ “எரேமியா என்ன சொல்கிறார் எனக் கவனியுங்கள்” என்றோ சொல்லாதீர்கள். ஏனென்றால், வெறும் மனிதர்களுடைய கருத்துகளைத்தான் வாசிக்கிறோமென வீட்டுக்காரர் நினைத்துக்கொள்வார். எனவே, “கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது” என்றோ “பைபிள் என்ன சொல்கிறது எனக் கவனியுங்கள்” என்றோ சொல்வது நல்லது.
9. கொடுக்கப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் வாசிக்க வேண்டுமா?
9 கொடுக்கப்பட்டுள்ள எல்லா வசனங்களையும் வாசிக்க வேண்டுமா அல்லது “வாசியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை மட்டுமே வாசிக்க வேண்டுமா? சூழ்நிலைக்கு ஏற்ப இதைத் தீர்மானியுங்கள். சொல்லப்பட்டுள்ள தகவல் பைபிளில் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே வசனங்கள் கொடுக்கப்படவில்லை. கலந்தாலோசிக்க வேண்டிய அருமையான விஷயங்கள் அவை ஒவ்வொன்றிலும் இருக்கின்றன. ஒருவேளை வீட்டுக்காரருக்கு நேரம் இல்லாவிட்டால், ஆர்வம் இல்லாவிட்டால், அல்லது சரளமாக வாசிக்க முடியாவிட்டால் “வாசியுங்கள்” வசனங்களை மட்டுமே வாசிக்கலாம்.
10. எந்தச் சமயத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் படிப்பை ஆரம்பிக்கலாம்?
10 பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் எப்போது படிப்பை ஆரம்பிக்கலாம்: பல முறை கலந்துரையாடிய பிறகு, நற்செய்தி சிற்றேட்டிலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பித்து, அதைத் தவறாமல் நடத்திக்கொண்டிருக்கும் சமயத்தில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் படிப்பை ஆரம்பிக்கலாம் அல்லது அந்தப் புதிய சிற்றேட்டை முடிக்கும்வரை அதிலிருந்தே படிப்பைத் தொடரலாம். பிரஸ்தாபிகள்தான் இதை விவேகமாகத் தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் படிப்பை ஆரம்பித்தால், முதல் அதிகாரத்திலிருந்துதான் படிக்க வேண்டுமா? இதற்கு எந்தச் சட்டமும் இல்லை. ஒவ்வொரு மாணாக்கரைப் பொறுத்து அதைத் தீர்மானிக்கலாம். இருந்தாலும், நற்செய்தி சிற்றேட்டில் படித்த விஷயங்களை மீண்டும் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் விளக்கமாகப் படிப்பது மாணாக்கர்களுக்கு நன்மையைத்தான் அளிக்கும்.
11. இந்தச் சிற்றேட்டை நாம் ஏன் நன்றாகப் பயன்படுத்த வேண்டும்?
11 நல்ல செய்தியைக் கேட்பதே அரிதான இந்த உலகத்தில் மிகச் சிறந்த செய்தியை அறிவிக்கிற மாபெரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆம், தற்போது பரலோகத்தில் ஆட்சிசெய்கிற கடவுளுடைய அரசாங்கம் விரைவில் இந்தப் பூமியை நீதி குடிகொண்டுள்ள புதிய பூமியாக மாற்றப்போகிறதென்ற நல்ல செய்தியை அறிவிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். (மத். 24:14; 2 பே. 3:13) இந்தச் செய்தியைக் கேட்கும் அநேகர் இப்படிச் சொல்வார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” (ஏசா. 52:7) எனவே, நம் பிராந்தியத்தில் இந்தப் புதிய சிற்றேட்டைப் பயன்படுத்தி ஆன்மீகத் தாகத்திலுள்ள மக்களுக்குக் கடவுள் சொல்லும் நற்செய்தியை அறிவிப்போமாக!
[பக்கம் 6-ன் படம்]
கடவுளையும் பைபிளையும் மதிக்காதவர்களிடம் பேசும்போது:
● சில பகுதிகளில் ஆட்களிடம் பேசும்போது “கடவுள்,” “இயேசு,” “பைபிள்” என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே ‘எனக்கு விருப்பமில்லை, வேண்டாம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களை முதல் முறை சந்திக்கும்போது அவர்களுடைய பகுதியில் இருக்கும் சில பிரச்சினைகளைப் பற்றி, நல்ல அரசாங்கத்தைப் பற்றி, குடும்பத்திற்கு உதவும் நடைமுறை ஆலோசனைகளைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றிப் பேசலாம். அவரை அடுத்தடுத்து சந்திக்கும்போது, கடவுள் உண்மையில் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சிகளையும், பைபிளை முழுமையாக நம்புவதற்கான ஆதாரங்களையும் பற்றிப் பேசலாம், அதன்பின் நற்செய்தி சிற்றேட்டைக் கொடுக்கலாம்.
[பக்கம் 7-ன் படம்]
வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது:
● “நம்முடைய கஷ்டங்களை எல்லாம் கடவுள் நீக்கிவிடுவார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதைப் பற்றி பைபிளிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள்.] அந்தக் கேள்விக்கு பைபிளில் எங்கே பதிலைப் பார்க்கலாமென இந்த புரோஷரில் கொடுக்கப்பட்டுள்ளது. [அவரிடம் இந்தச் சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு முதல் பாடத்தில் பாரா 1-ஐயும் எரேமியா 29:11-ஐயும் வாசியுங்கள்.] நாம் சந்தோஷமாக, சமாதானமாக வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது இல்லையா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] விருப்பப்பட்டால் இந்த புரோஷரை நீங்களே வைத்துக்கொள்ளலாம். அடுத்த முறை நான் வரும்போது, ‘கஷ்டங்களுக்குக் காரணமாக இருப்பவற்றைக் கடவுள் எப்படி நீக்கப்போகிறார்’ என்ற கேள்விக்கு பைபிளிலிருந்து பதிலைப் பார்க்கலாம்.” முதல் சந்திப்பில் வீட்டுக்காரருக்கு நேரம் இருப்பது தெரிந்தால், இரண்டாவது பாராவையும் கொடுக்கப்பட்டுள்ள மூன்று வசனங்களையும் வாசித்துக் கலந்தாலோசிக்கலாம். இரண்டாவது கேள்விக்கான பதிலை அடுத்த முறை வரும்போது பார்க்கலாம் என்று சொல்லி மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
● “நிறையப் பேர் கடவுளிடம் ஜெபம் செய்கிறார்கள், அதுவும் பிரச்சினைகள் வந்தால் கேட்கவே வேண்டாம். நீங்கள் கடவுளிடம் ஜெபம் செய்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] எல்லோருடைய ஜெபங்களையும் கடவுள் கேட்கிறாரென நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதைப் பற்றி பைபிளிலிருந்து சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லட்டுமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள்.] என்னிடம் ஒரு புரோஷர் இருக்கிறது. இந்தக் கேள்விக்கு பைபிளில் எங்கே பதில் இருக்கிறது என்று இது காட்டும். [அவரிடம் இந்தச் சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு பாடம் 12-லுள்ள முதல் பாராவையும் “வாசியுங்கள்” என்ற வசனங்களையும் சிந்தியுங்கள்.] நம்முடைய ஜெபத்தைக் கடவுள் ஆர்வமாகக் கேட்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது சந்தோஷமாக இருக்கிறது இல்லையா? ஆனால், ஜெபத்தின் மூலமாக நமக்கு இன்னும் நிறைய நன்மை கிடைக்க வேண்டுமென்றால், கடவுளைப் பற்றி நாம் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும். [பாடம் 2-க்குத் திருப்பி அதிலுள்ள உபதலைப்புகளைக் காட்டுங்கள்.] நீங்கள் விரும்பினால் இந்த புரோஷரை வைத்துக்கொள்ளலாம். நான் அடுத்த முறை வரும்போது இந்தக் கேள்விகளுக்கு பைபிளிலிருந்தே பதிலைப் பார்க்கலாம்.”
● “இன்று உலகம் போகும் போக்கைப் பார்க்கும்போது இதெல்லாம் எங்கு போய் முடியப்போகிறதோ என்று நிறையப் பேர் கவலைப்படுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உலக நிலைமை சரியாகுமா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதைப் பற்றி பைபிளிலிருந்து சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லட்டுமா? [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள்.] நம்பிக்கை அளிக்கும் நற்செய்தி பைபிளில் இருப்பதைப் பார்த்து அநேகர் ஆச்சரியப்படுகிறார்கள். பைபிள் பதில் அளிக்கிற சில கேள்விகளைப் பாருங்கள்.” அவரிடம் இந்தச் சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு கடைசி பக்கத்திலுள்ள எந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள விருப்பமெனக் கேளுங்கள். பிறகு அந்தப் பாடத்தை எடுத்துக்கொண்டு, பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். அடுத்த முறை வரும்போது அடுத்த கேள்வியைச் சிந்திக்கலாம் எனச் சொல்லி மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
[பக்கம் 8-ன் படம்]
நேரடி அணுகுமுறை (பைபிளை மதிப்பவர்களிடம் பேசும்போது):
● “ஒரு புதிய பைபிள் படிப்புத் திட்டத்தைப் பற்றிச் சொல்வதற்காக வந்திருக்கிறேன். இந்த புரோஷரில் 15 பாடங்கள் இருக்கின்றன. முக்கியமான கேள்விகளுக்கு பைபிளில் எங்கே பதில் இருக்கிறது என்று இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். [அட்டைப்படத்தையும் கடைசி பக்கத்தையும் காட்டுங்கள்.] பைபிளைப் படித்து புரிந்துகொள்ள நீங்கள் எப்போதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதிலுள்ள பாடங்களெல்லாம் எவ்வளவு எளிமையாக இருக்கிறது என்று நான் உங்களுக்குக் காட்டுகிறேன். [3-வது பாடத்திலுள்ள மூன்றாவது கேள்வியின் முதல் பாராவைச் சிந்தியுங்கள். வெளிப்படுத்துதல் 21:4, 5 வாசியுங்கள். சூழ்நிலையைப் பொறுத்து அடுத்த பாராவையும் “வாசியுங்கள்” என்ற வசனங்களையும் சிந்தியுங்கள்.] நீங்கள் விரும்பினால் இந்த புரோஷரை உங்களுக்குக் கொடுக்கிறேன். இந்த புரோஷரிலிருந்து ஒரு முறையாவது என்னோடு சேர்ந்து படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம். அடுத்த முறை நான் வரும்போது முதல் பாடத்தைப் படிக்கலாம். பாருங்கள், இது ஒரேவொரு பக்கம்தான் இருக்கிறது.”
[பக்கம் 8-ன் படம்]
மறுசந்திப்பு செய்யும்போது:
● “உங்களை மறுபடியும் பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம். உங்களுக்காக இந்த புரோஷரை எடுத்து வந்திருக்கிறேன். ஆர்வத்தைத் தூண்டும் நிறையக் கேள்விகளுக்கு பைபிளிலிருந்து இது பதில் அளிக்கிறது. [அவரிடம் சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு கடைசி பக்கத்தைப் பார்க்கும்படி சொல்லுங்கள்.] இதில் எந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள். பின்பு, அவர் தேர்ந்தெடுத்த பாடத்திற்குத் திருப்புங்கள்.] பைபிள் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இந்த புரோஷரை எப்படிப் பயன்படுத்தலாம் என உங்களுக்குக் காட்டுகிறேன்.” ஓரிரு பாராக்களையும் “வாசியுங்கள்” என்ற வசனங்களையும் பயன்படுத்தி பைபிள் படிப்பை நடத்திக் காட்டுங்கள். பைபிள் படிப்பை நடத்துவது எவ்வளவு சுலபம் இல்லையா? வீட்டுக்காரரிடம் சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு திரும்ப சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பாடத்தை நடத்திய பிறகு வீட்டுக்காரர் தேர்ந்தெடுக்கும் அடுத்த பாடத்தை நடத்துங்கள் அல்லது ஆரம்பத்திலிருந்து நடத்துங்கள்.