நம் ஊழியம்—உண்மை அன்பின் ஒரு வெளிக்காட்டு
1நம்முடைய ஊழியத்தின் மூலமாக, இரண்டு மிகப்பெரிய கட்டளைகளுக்கான கீழ்ப்படிதலை நாம் காட்டுகிறோம். (மத். 22:37-39) யெகோவாவிடம் நமக்குள்ள அன்பு அவரைப் பற்றி நல்லவிதமாக பேசும்படி நம்மைத் தூண்டுகிறது. அயலார்மீது நாம் வைத்திருக்கும் அன்பு கடவுளுடைய சித்தத்தையும் நோக்கங்களையும் பற்றிய அறிவை அடைவதற்கு அவர்களை உற்சாகப்படுத்தும்படி நம்மைத் தூண்டுகிறது; அப்போதுதான், அவர்களும், நம்மைப்போல யெகோவாவை நேசிக்கவும் நித்திய ஜீவ பரிசை பெறுவதற்கான வரிசையில் சேர்ந்துகொள்ளவும் முடியும். எனவே, நம்முடைய ஊழியத்தின் மூலமாக, நாம் கடவுளுடைய பெயரைக் கனப்படுத்தி, விலைமதிப்பற்ற ராஜ்ய நம்பிக்கையை நம்முடைய அயலாருடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆம், நம்முடைய ஊழியம் கடவுளிடமும் மனிதனிடமும் நமக்குள்ள உண்மையான அன்பின் ஒரு வெளிக்காட்டு.
2 எல்லா சூழமைவுகளிலும் எல்லா வகையான மக்களிடமும் பேசும்படி நம்முடைய அன்பு நம்மைத் தூண்டுகிறது. (1 கொ. 9:21-23) இதை விளக்க: விமானம் ஒன்றில் பயணம் செய்கையில் ஒரு கிறிஸ்தவ மூப்பர், ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரின் அருகில் உட்கார்ந்தார். ஒருசில சாதுரியமான கேள்விகளைக் கேட்பதன்மூலம் அந்த மூப்பர் பாதிரியை மனம்விட்டு பேச வைத்தார்; கொஞ்ச நேரத்தில் உரையாடலை ராஜ்யத்தினிடமாக திருப்பினார். பாதிரி விமானத்தைவிட்டு இறங்கி செல்லுகையில், நம்முடைய புத்தகங்களில் இரண்டு அவர் கையில் இருந்தன. அந்த மூப்பர் தன் அயலானிடம் காட்டிய உண்மையான அன்புக்கு எத்தகைய சிறந்த பலன்!
3 உண்மை அன்பு நம்மை பிரசங்கிக்கத் தூண்டுகிறது: ஊழியத்தில் துணைப் பயனியர்களாகவும் முழுநேர பயனியர்களாகவும் ஈடுபடுகிறவர்கள் நிச்சயமாகவே கடவுளிடமும் அயலாரிடமும் உண்மையான அன்பை காட்டுகிறார்கள். பயனியர்கள் ஆவிக்குரியவிதமாக மற்றவர்களுக்கு உதவ தினந்தோறும் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்கிறார்கள். இதை செய்வதற்கு எது அவர்களைத் தூண்டுகிறது? ஒரு பயனியர் இவ்வாறு சொன்னார்: “அன்பு கடவுளுடைய ஆவியின் ஒரு கனி என்று எனக்கு தெரியும். அதனால் அது இல்லாமல் நான் சத்தியத்திலேயே இருந்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் ஒரு பயனியராகவும் வெற்றியடைந்திருக்க முடியாது. அன்பு, என்னை மக்கள்மீது அக்கறையுள்ளவளாக, அவர்களுடைய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவளாக இருக்கச் செய்கிறது; அதோடு மக்கள் அன்புக்கு பிரதிபலிக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.” இயேசு மக்களிடம் இதேபோன்ற அன்பைக் காட்டினார். ஒரு சமயம், அவரும் களைப்படைந்திருந்த அவருடைய சீஷர்களும், “சற்றே இளைப்பாறும்படி” ஓரிடத்திற்கு போனபோது மக்கள் கூட்டத்தினர் அவர்களுக்கு முன்னதாகவே அங்கு போய்விட்டிருந்தனர். இயேசு என்ன செய்தார்? அவர் ‘அவர்கள்மேல் மனதுருகியதால்,’ தம்முடைய சொந்த காரியங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.”—மாற். 6:30-34.
4 நாம் சொல்லும் நற்செய்தியை மக்கள் புறக்கணித்தாலும்கூட, நாம் அன்பால் உந்துவிக்கப்பட்டு, அவர்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்திருக்கிறோம் என்பதை அறிவதால் உள்ளான மகிழ்ச்சி அடைகிறோம். நாம் அனைவரும் கடைசியில் கிறிஸ்துவால் நியாயந்தீர்க்கப்படுகையில், ‘நம் ஊழியத்தை நிறைவேற்றுவதன் மூலம்’ உண்மையான அன்பை காட்டியிருக்கிறோம் என்பதால் பெருமகிழ்ச்சி அடைவோம்.—2 தீ. 4:5.