பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல்
1 இயேசு இவ்வாறு கூறினார்: “அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” முதல் நூற்றாண்டில் ஊழிய பிராந்தியம் பெரியதாக இருந்தது. ஆனால் அறுப்பு வேலைக்கு ஒருசில ஆட்களே இருந்தனர். நிறைய ஆட்களுக்கு நற்செய்தி கிடைக்கவேண்டும் என்பதற்காக இயேசு அவர்களை தனித்தனியாக அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் “அவர்களை . . . இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” (லூக். 10:1, 2) எதற்காக இரண்டிரண்டு பேராக அனுப்பினார்?
2 அந்தப் புதிய சீஷர்களுக்கு அவ்வளவாக அனுபவம் இல்லை. அவர்கள் ஒன்றுசேர்ந்து ஊழியம் செய்யும்போது ஒருவர் மற்றவரிடத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதோடு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருக்க முடியும். சாலொமோன் இவ்வாறு கூறினார்: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்.” (பிர. 4:9, 10) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பிறகும்கூட, உடன் விசுவாசிகள் ஊழியம் செய்தபோது, பவுலும், பர்னபாவும், இன்னும் பலரும் அவர்களுக்குத் துணையாகப் போனார்கள். (அப். 15:35) அத்தகைய திறமையானவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் பயிற்சியைப் பெற்ற ஒருசிலர் உண்மையில் பாக்கியம் செய்தவர்களே!
3 ஒரு நல்ல பயிற்சி திட்டம்: முதல் நூற்றாண்டு சபையை ஒத்த நவீன நாளைய கிறிஸ்தவ சபையும் பிரசங்கித்துவரும் ஓர் அமைப்பாகும். இது நமக்கு பயிற்சி அளிக்கிறது. நற்செய்தியை எவ்வளவு திறமையாக பிரசங்கிக்க முடியுமோ அவ்வளவு திறமையாக பிரசங்கிக்க வேண்டும் என்ற ஆசை நம் ஒவ்வொருவரின் மனதிலும் கொழுந்துவிட்டு எரியவேண்டும். அப்படியென்றால் நிறைய பிரஸ்தாபிகள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உதவியும் தரப்படுகிறது.
4 பயனியர்கள் மற்றவர்களுக்கு ஊழியத்தில் உதவ ஒரு திட்டத்தை சமீபத்தில் நடந்த ராஜ்ய ஊழியப் பள்ளியில் சங்கம் அறிவித்தது. இப்படி உதவ தேவை இருக்கிறதா? கண்டிப்பாக. கடந்த மூன்று வருடங்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரஸ்தாபிகள் முழுக்காட்டுதல் எடுத்துள்ளனர். பிரசங்க ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்றால் இவர்களில் நிறையப்பேருக்குப் பயிற்சி தேவை. இவ்வாறு பயிற்சி அளிக்க யாரை தேர்ந்தெடுப்பது?
5 முழுநேர பயனியர்களால் உதவ முடியும். பயனியர்களுக்கு நிறைய ஆலோசனைகளையும் பயிற்சியையும் யெகோவாவின் அமைப்பு அளிக்கிறது. இரண்டு வார பயனியர் ஊழியப் பள்ளியில் அவசியமான போதனை பயனியர்களுக்குக் கிடைக்கிறது. வட்டார, மாவட்டக் கண்காணிகள் நடத்தும் கூட்டங்களிலிருந்தும், மூப்பர்கள் தரும் வழிநடத்துதலிலிருந்தும் பயனியர்கள் பயனடைகிறார்கள். எல்லா பயனியர்களும் பவுலையும் பர்னபாவையும் போல அனுபவம் மிக்கவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவர்கள் பயனுள்ள பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள சந்தோஷப்படுவார்கள்.
6 யார் பயனடையலாம்? இந்தப் பயிற்சி திட்டம் புதியவர்களுக்கும் அல்லது புதியதாக முழுக்காட்டுதல் எடுத்தவர்களுக்கும் மட்டுமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சிறுவர்களுக்கும், பல வருடங்களாக சத்தியத்தில் இருக்கும் வயதானவர்களுக்கும் உதவி தேவை. ஊழியத்தின் ஒருசில அம்சங்களில் இவர்களுக்கு உதவி கிடைத்தால் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். பிரசுரங்களை அளிப்பதில் ஒருசிலர் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் மறுசந்திப்பு செய்வதென்றாலோ பைபிள் படிப்புகளை துவங்குவதென்றாலோ அவர்களுக்கு மகா கஷ்டம். இன்னும் சிலர் பைபிள் படிப்பை ரொம்ப சுலபமாக தொடங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களுடைய மாணாக்கர்கள் முன்னேற்றம் செய்யவில்லையே என்று கவலைப்படுவார்கள். மாணாக்கர்களுக்கு எது தடையாக இருக்கிறது? இப்படிப்பட்ட பல்வேறு அம்சங்களில் உதவிசெய்யும்படி அனுபவம்வாய்ந்த பயனியர்களை கேட்கலாம். ஒருசில பயனியர்கள் ஆர்வத்தை தூண்டி, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, புதிய மாணாக்கர்களை அமைப்பினிடம் வழிநடத்துவதில் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அனுபவம் இப்புதிய திட்டத்தில் உதவியாக இருக்கும்.
7 சபை வழக்கமாக ஊழியத்திற்கு கூடிவரும்போது, நீங்கள் எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் உங்களால் போக முடியவில்லையா? உங்களோடு ஊழியம்செய்ய மற்ற பிரஸ்தாபிகள் இல்லாதபோது, ஒரு பயனியர் வந்து ஊழியம் செய்வார்.
8 நல்ல ஒத்துழைப்பு தேவை: பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல் என்ற திட்டத்திலிருந்து தனிப்பட்டவிதமாக பயனடைய விரும்பும் பிரஸ்தாபிகளுக்காக தேவையான ஏற்பாடுகளை வருடத்தில் இருமுறை மூப்பர்கள் செய்வார்கள். இத்தகைய திட்டத்திலிருந்து உதவியைப் பெற நீங்கள் ஒத்துக்கொண்டால், உங்களுக்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கும் பயனியராக இருக்கும் பிரஸ்தாபியோடு ஒன்றுசேர்ந்து ஊழியத்தில் ஈடுபடுவதற்காக ஒரு நடைமுறையான அட்டவணையைப் போட்டு, அதன்படி செய்யுங்கள். சொன்ன நேரத்தில் சொன்னபடி டாணென்று போய்விடுங்கள். நீங்கள் ஒன்றாக ஊழியம் செய்யும்போது, நற்செய்தியை எப்படியெல்லாம் திறமையோடு அளிக்கிறார் என்பதை கவனியுங்கள். ஒருசில அணுகுமுறைகளுக்கு மாத்திரம் ஏன் கைமேல் பலன்கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனியராக இருக்கும் பிரஸ்தாபி, உங்களது அணுகுமுறையில் முன்னேற்றம் செய்துகொள்ள தரும் ஆலோசனைகளை சிந்தித்துப்பாருங்கள். கற்ற விஷயங்களை எல்லாம் நடைமுறையில் செயல்படுத்துவீர்கள் என்றால், வெளி ஊழியத்தில் நீங்கள் செய்திருக்கும் முன்னேற்றத்தை நீங்களே தெரிந்துகொள்வீர்கள். மற்றவர்களுக்கும் அது தெரியவரும். (1 தீமோத்தேயு 4:15-ஐக் காண்க.) முடிந்தவரை அடிக்கடி ஒன்றுசேர்ந்து, சந்தர்ப்பசாட்சி கொடுத்தல் உட்பட, ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் வேலைசெய்யுங்கள். குறிப்பாக உங்களுக்கு எந்த அம்சத்தில் உதவி தேவையோ அதில் அதிகமாக உழையுங்கள்.
9 நீங்கள் செய்யும் முன்னேற்றத்தில் ஊழியக் கண்காணிக்கு அக்கறை இருக்கும். இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் எந்தளவுக்கு பயனடைகிறீர்கள் என்பதை சபை புத்தகப் படிப்பு கண்காணியிடமிருந்து அடிக்கடி கேட்டு தெரிந்துகொள்வார். அதேபோல் வட்டாரக் கண்காணி உங்கள் சபைக்கு வரும்போது உங்களுக்கு உதவுவார்.
10 யெகோவா தம்முடைய மக்கள் நல்ல பயிற்சி எடுத்தவர்களாய், ‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படி’ விரும்புகிறார். (2 தீ. 3:16) கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்காக திறமையை வளர்த்துக்கொள்ள ஆசை உள்ளவர்கள், “பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல்” என்ற திட்டத்தை தங்களுக்கு உதவும் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதவேண்டும். அதில் பங்குகேற்பது நீங்கள் செய்த பாக்கியம். அதை நன்றியோடும், மனத்தாழ்மையோடும், சந்தோஷமாய் செய்யுங்கள்.