முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—செயலர்
1 ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படுவதை’ உறுதி செய்துகொள்வதில் சபையின் செயலர் முக்கிய பங்கு வகிக்கிறார். (1 கொ. 14:40) அவர் சபை ஊழியக் குழுவின் உறுப்பினர்; சபையின் கடிதப் போக்குவரத்துக்களையும் முக்கிய பதிவுகளையும் கவனித்துக் கொள்கிறார். மற்ற மூப்பர்களின் வேலையைப்போல் செயலரின் வேலை வெளிப்படையாக தெரிவதில்லை; இருந்தாலும் அவருடைய சேவை நமக்கு அதிகம் தேவை; அதோடு பாராட்டுக்குரியவை.
2 சங்கத்திடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கடிதங்கள் வரும்போது, அவற்றை வாசித்து தேவையானதற்கு பதிலளிக்கிறார். வரும் கடிதங்களை மூப்பர்களின் பார்வைக்கு அனுப்பிய பிறகு, மறுபடியும் எடுத்துப் பார்ப்பதற்காக ஃபைலில் வைக்கிறார். பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகியவற்றின் ஆர்டர் நமூனாக்களை சரிபார்த்து சங்கத்திற்கு அனுப்புகிறார். சபை கணக்குவழக்குகளையும் சந்தாக்களையும் கையாளுபவர்களை நேரடியாக மேற்பார்வையிடுகிறார். மாநாடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் இவர் கவனித்துக் கொள்கிறார்.
3 செயலர் சபையின் மாதாந்தர ஊழிய அறிக்கையை அடுத்த மாதத்தின் ஆறாம் தேதிக்குள் சங்கத்திற்கு அனுப்பவேண்டும்; எனவே, நாம் ஒவ்வொருவரும் மாதக் கடைசியில் தாமதிக்காமல் ஊழிய அறிக்கையை கொடுத்துவிட வேண்டும். செயலர் சபையின் பப்ளிஷர் கார்டுகளில் ஊழிய அறிக்கைகளை பதிவு செய்கிறார். பிரஸ்தாபிகளில் யாராவது தங்களுடைய பப்ளிஷர் கார்டைப் பார்க்க விரும்பினால் செயலரிடம் கேட்கலாம்.
4 ஒரு பிரஸ்தாபி வேறு சபைக்கு மாறிச் செல்கிறார் அல்லது உங்களுடைய சபைக்கு புதிதாக வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது செயலர் அந்த மற்ற சபையின் மூப்பர்களிடம் இந்தப் பிரஸ்தாபியின் பப்ளிஷர் கார்டைக் கேட்டுக் கடிதம் எழுதுவார், அல்லது இவருடைய பப்ளிஷர் கார்டையும் ஒரு அறிமுக கடிதத்தையும் அனுப்பி வைப்பார்.—நம் ஊழியம், பக். 104-5.
5 பயனியர்களின் ஊழிய நடவடிக்கைகளை செயலர் மறுபார்வை செய்கிறார். பயனியர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்பட்டால், அவற்றை மூப்பர்களுடைய, முக்கியமாக ஊழியக் கண்காணியினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லுகிறார். இவர் வெளி ஊழியத்தில் ஒழுங்கற்றவர்களாக இருக்கும் பிரஸ்தாபிகளைக் குறித்து புத்தக படிப்பு நடத்துபவர்களிடம் பேசுவார். செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்ய எடுக்கப்படும் முயற்சிகளை முன்நின்று நடத்துவதில் செயலரும் ஊழிய கண்காணியும் சேர்ந்து செயல்படுகின்றனர்.—நம் ராஜ்ய ஊழியம் (ஆங்கிலம்), டிசம்பர் 1987, பக்கம் 1.
6 செயலருடைய வேலைகளை நாம் உயர்வாய் மதிப்போமாக. அவருடைய கண்காணிப்பு வேலையை இலகுவாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக.—1 கொ. 4:2