எனக்கு ஒரு பைபிள் படிப்பு வேண்டும்!
1 நம்மில் அநேகருக்கு பைபிள் படிப்பு வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அது நல்லதுதான். பைபிள் படிப்பு நடத்தினால்தான் புதிய சீஷர்களை உண்டுபண்ணும் நம்முடைய குறிக்கோளை எட்டமுடியும். (மத். 28:19, 20) சத்தியத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதால் கிடைக்கும் விவரிக்க முடியாத சந்தோஷத்தை ஒருமுறைகூட ருசிக்க முடியாமலேயே நம்மில் பலருக்கு மாதங்களோ, வருடங்களோ உருண்டோடியிருக்கலாம். இந்த நவம்பரில் அதற்காக நாம் என்ன செய்யலாம்? இந்த மாதம் ஊழியத்தில் அறிவு புத்தகத்தை நாம் அளிக்கிறோம். எனவே புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுப்போமாக.
2 வார இறுதிநா(ட்க)ளில் ஊழியத்திற்குச் செல்ல நேரம் ஒதுக்குங்கள்: இந்த மாதத்தில் புதிய பைபிள் படிப்பு ஒன்றை துவங்குவதற்காக ஊழியத்தில் அதிக நேரத்தை ஒதுக்கும்படி நாங்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறோம். இதற்காகவே வார இறுதிநாளை அல்லது நாட்களை ஒதுக்குவதற்கு சபைப் புத்தகப் படிப்பு நடத்துனர்கள் திட்டமிட வேண்டும்; அவர்கள், தங்களுடைய தொகுதியினர் மறுசந்திப்பு செய்யும் வேலையில் முழு மூச்சாக இறங்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
3 இதுபோல் ஊழியத்திற்கான கூட்டத்திற்கு செல்லுகையிலும் உங்களுடைய மறுசந்திப்பு பதிவுச் சீட்டுகளையும் மறக்காமல் கொண்டுவாருங்கள். விருப்பம் காட்டியவர்களோ, பிரசுரங்களை வாங்கியவர்களோ, கூட்டங்களுக்கு வந்தவர்களோ இருந்தால் அவர்கள் அனைவரையும் தவறாமல் சென்று சந்தியுங்கள். பைபிள் படிப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஒவ்வொரு மறுசந்திப்பையும் செய்யுங்கள்.
4 பைபிள் படிப்பு நடத்துவதை நடித்துக் காட்டுங்கள்: மறுசந்திப்பில் பைபிள் படிப்பை ஆரம்பிப்பது எப்படி என்பதைக் காட்டும் சிறந்த நடிப்பை குறிப்பிட்ட சில ஊழியத்திற்கான கூட்டங்களில் ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு கேட்கலாம்: “இன்னைக்கு அநேகரிடத்திலே பைபிள் இருக்கு. ஆனா வாழ்க்கைல நாம் எதிர்ப்படும், பதில் கிடைக்காத முக்கியமான கேள்விகளுக்கு அதுலதான் பதில் இருக்குன்னு அவங்களுக்குத் தெரியறதில்ல. [அறிவு புத்தகத்திலுள்ள பொருளடக்கத்தை காட்டுங்கள்; 3, 5, 6, 8, 9 ஆகிய அதிகாரங்களின் தலைப்பை வாசியுங்கள்.] வாரத்திலே அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ ஒதுக்கினா இந்தப் புத்தகத்திலிருந்து அடிப்படை பைபிள் சத்தியத்தை சில மாசத்துக்குள்ளவே கத்துக்கலாம். இதுல ஏதாவது ஒரு அதிகாரத்தை தேர்ந்தெடுங்க, எப்படி படிப்பு நடத்தறோங்கிறத இப்ப செய்து காட்றேன்.” நேரமே இல்லாத காரணத்தால் படிப்பதற்கு ஒருவர் தயங்கினால், சுருக்கமாக படிப்பதற்கு வழி இருப்பதையும் அவரிடம் சொல்லுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள்; வாரத்தில் 15-30 நிமிடத்தில் ஒரு பாடத்தை அவரோடு படிப்பதாக சொல்லுங்கள்.
5 படிப்புகளை ஆரம்பிப்பதற்கு நம் அனைவரின் கூட்டு முயற்சியும் தேவை. அதோடு அந்த முயற்சிகளுக்கு யெகோவா உதவும்படி அவரிடம் ஜெபிக்கவும் வேண்டும். அதன்பின் புதிய பைபிள் படிப்புகள் கிடைக்கிறதா இல்லையா என்றுதான் பாருங்களேன்! (1 யோ. 5:14, 15) உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆசை என்றால் அதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம்.