தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து படிப்பை ஆரம்பித்தல்
1 கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேடு மக்களுக்கு சத்தியத்தை கற்பிப்பதற்கு சக்திவாய்ந்த கருவி. இதுவே எட்டு திக்குகளிலிருந்தும் வரும் அறிக்கை. இந்தச் சிற்றேட்டை பயன்படுத்தி ஒவ்வொரு வாரமும் ஆயிரமாயிரம் பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்தச் சிற்றேட்டில் படிப்பை ஆரம்பித்து நடத்துவதில் நீங்கள் வெற்றி கண்டிருக்கிறீர்களா?
2 நிறைய பேர் மிக எளிதாக இந்த சிற்றேட்டை ஊழியத்தில் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு படிப்பை துவங்க என்ன சொல்ல வேண்டும் என தெரியாமல் சிலர் தவிக்கிறார்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பயன்படுத்தி பைபிள் படிப்புகளை துவங்குவதில் எந்த முறை அநேகருக்கு பலன் தந்திருக்கிறது? இதோ, உங்களுக்காக சில ஆலோசனைகள்:
3 படிப்பு நடத்தும் முறையை செய்துகாட்டுவதாக சொல்லுங்கள்: முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ, உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு நடத்தட்டுமா என்று கேட்பதற்கு பதிலாக, பைபிள் படிப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதைச் செய்து காட்டலாம். “படிப்பு” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அநேக வீட்டுக்காரர்களுடைய மனதில் எழும்பும் புதிரையும் அதனால் வருகிற பயத்தையும் அது போக்கிவிடும். இவ்வாறு செய்துகாட்ட கற்றுக் கொண்டோமானால், எளிய முன்னுரையுடன் ஒரு பைபிள் படிப்பை நம்மால் துவங்க முடியும்.
4 தயாரிப்பே திறவுகோல்: நாம் எவ்வளவு நன்றாக தயாரித்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான நம் ஆர்வமும் இருக்கும். பைபிள் படிப்பை ஆரம்பிக்க நமக்கு ஏற்படும் எந்தவித தயக்கத்தையும் களைந்துபோட முன்கூட்டியே தயாரிப்பது உதவும். நாம் தயாரித்திருக்கும் பேச்சுப்பொருளை பலமுறை பழகிப் பார்த்துக் கொண்டால் சரளமாக உரையாட முடியும். அதோடு இயல்பாகவும் சொந்த வார்த்தைகளிலும் பேச முடியும். நல்ல நிதானமாக பேசுவதற்கு நமக்கு உதவுவதோடு வீட்டுக்காரரும் ஆற அமர உட்கார்ந்து கேட்பதற்கு வழிவகுக்கும்.
5 பழகிப் பார்க்கும்போதே அதற்கு ஆகும் நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அதைச் செய்து காண்பிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை வீட்டுக்காரருக்கு தெரிவிக்க முடியும். ஒரு சகோதரர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு இவ்வாறு சொல்கிறார்: “வீட்டுக்கே வந்து நாங்க எல்லாருக்கும் இலவசமாக பைபிள கற்றுக்கொடுக்கிறோம். அதுக்குத்தான் உங்க வீட்டுக்கும் வந்தோம். அதுக்கு சும்மா அஞ்சு நிமிஷம்தான் ஆகும். உங்களால அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியுமா?” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் உள்ள பாடம் 1-ஐ படிக்கும் முறையை செய்துகாட்ட ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த நேரத்துக்குள் முடிப்பதற்கு சில வசனங்களை மட்டுமே வாசிக்க முடியும் என்பது உண்மைதான்; ஆனால் முதல் பாடத்தை குறுகிய நேரத்தில் முடிப்பதால், வீட்டுக்காரருக்கு முதல் படிப்பை படித்த அனுபவம் கிடைத்துவிடுகிறது. பாடம் 2-ஐ நடத்த வருகையில், அதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என அவரிடம் சொல்லுங்கள்.
6 பின்வரும் முறை பலன் தந்திருக்கிறது:
◼ “சுலபமான முறையில், குறுகிய காலத்துக்குள் வீட்டிலேயே பைபிள் படிப்பை எப்படி நடத்தலாம் என்று உங்களுக்கு நடித்துக்காட்ட விரும்புகிறோம்; அதற்கு இந்தச் சிறிய புத்தகத்தை, அதாவது கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்பதை பயன்படுத்துகிறோம். ஒரு வாரத்தில் 15 நிமிஷத்தை ஒதுக்கினால் போதும், 16 வாரங்களுக்குள் முக்கியமான பைபிள் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை நீங்க தெரிஞ்சிக்கலாம்; இப்படித்தான் நிறையபேர் தெரிஞ்சிக்கிட்டாங்க.” பொருளடக்கத்தை சுருக்கமாக விளக்குங்கள். பாடம் 1-க்கு திருப்பி, இவ்வாறு சொல்லுங்கள்: “அஞ்சு நிமிஷம் ஒதுக்கினீங்கனா, இதை எப்படி படிப்பது என்பதை நாங்க இப்போ உங்களுக்கு செய்து காண்பிப்போம். முதல் பாடத்தின் தலைப்பு என்னன்னா, ‘கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்று நீங்கள் எப்படி கண்டறியலாம்.’ ” அடுத்து, மூன்று கேள்விகளையும் வாசியுங்கள். அடைப்புக் குறியிலுள்ள எண்களைப் பற்றி விளக்குங்கள். முதல் பாராவை வாசித்து, பதிலை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை வீட்டுக்காரருக்கு காட்டுங்கள். வீட்டுக்காரரை 2-வது பாராவை வாசிக்கச் சொல்லுங்கள். பிறகு, “நீங்க வாசித்த இந்த தகவலை வைத்து, இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வீங்க?” என கேளுங்கள். [கேள்வியை மீண்டும் வாசித்து, வீட்டுக்காரர் பதில்சொல்ல அனுமதியுங்கள்.] “ஒவ்வொரு பாராவிலும் வசனங்கள் இருப்பதை கவனிச்சிருப்பீங்க. இந்த கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதிலைப் பார்ப்பதற்கு அவை உதவியா இருக்கும். உதாரணத்திற்கு 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ நாம் வாசிக்கலாம். பைபிளின் எழுத்தாளர் யார் என்று நீங்க சொன்னீங்க, அதைப் பற்றி பைபிள் என்ன சொல்லுதுன்னு பார்க்கலாமா?” பாரா-3-ஐ வாசித்து, கேள்வியைக் கேட்டு, யோவான் 17:3-ஐ வாசியுங்கள். பிறகு, பாடம் 1-ஐ மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் வீட்டுக்காரர் எந்தளவுக்கு தெரிந்துகொண்டார் என்பதற்கு கவனத்தைத் திருப்புங்கள். இந்தக் கட்டத்தில் பாடம் 2-க்கு திருப்பி, “கடவுளைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய இரண்டு வழிகள் யாவை” என்ற கடைசி கேள்வியை வாசியுங்கள். பிறகு இவ்வாறு கேளுங்கள்: “பாடம் 2-ஐ படித்து நாம் இந்தக் கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ளலாம், அதற்காக எப்போ உங்களால் ஒரு 15 நிமிஷம் ஒதுக்க முடியும்?”
7 உரையாடலை எளிமையாக வைப்பதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுக்காரரை பாராட்டுவதும் மிக முக்கியம். மற்றொரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்போது, ‘இப்படி தொடர்ந்து படிக்க உங்களுக்கு விருப்பமா?’ என கேட்பதற்கு பதிலாக, அடுத்த பாடத்தையும் நாம் இதேபோல படிக்கலாம் என உற்சாகப்படுத்துங்கள். அவரை மீண்டும் சந்திக்க அதிக ஆவலாயிருப்பதை தெரிவியுங்கள். திரும்பவும் அவர்களை நேரில் சந்திப்பது கடினமாக தோன்றியபோது, சில பிரஸ்தாபிகள் போனிலேயே ஒரு பாடத்தை நடத்தியிருக்கின்றனர். சிற்றேட்டை பத்திரமாகவும், அடுத்தமுறை சந்திக்கும்போது உடனே எடுப்பதற்கு வசதியாகவும் உள்ள ஒரு இடத்தில் வைக்கும்படி மாணவரை உற்சாகப்படுத்துங்கள்.
8 தீர்மானமாயிருங்கள்: தயாரிப்பே வெற்றிக்கான திறவுகோல் என்றாலும், மீண்டும் சந்திக்க தீர்மானமாயிருக்க வேண்டும். ஒருசில மணித் துளிகளில், ஒரு பாடத்தை கற்பிப்பது சவாலான விஷயம்தான். எனவே, படிப்பை நடித்துக் காட்டும்போது சரளமாக பேசுவதற்கு வசதியாக, அதை ஒரு தடவைக்கு பல தடவை பழகிப் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வீடு ஊழியமோ சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலோ தொலைபேசி உரையாடலோ, எப்பொழுதுமே எல்லாரிடமும் படிக்கும் முறையை நடித்துக்காட்ட முயலுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிப்பது உங்களுக்கு எட்டாக் கனியாக இருந்தால், மனம் தளரவிடாதீர்கள். மற்றவர்களுக்கு சத்தியத்தை கற்பிப்பதற்கான உறுதியோடும் மனப்பூர்வமான ஆசையோடும் இருப்பதிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிப்பதன் வெற்றி சார்ந்திருக்கிறது.—கலா. 6:9.
9 இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தினால், ஜீவனுக்கான பாதையில் அடியெடுத்து வைக்க பிறருக்கு உதவும் பாக்கியம் உங்களுடையதாகும். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பைபிள் படிப்பை ஆரம்பித்து நடத்துவதன்மூலம் இதைப் பெறலாம்.—மத். 7:14.