நற்செய்தி சிற்றேட்டை பயன்படுத்தி சொல்லிக்கொடுங்கள்
1. நற்செய்தி சிற்றேடு எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது?
1 ஊழியத்தில் அடிக்கடி பயன்படுத்துகிற முக்கியமான கருவிகளை பற்றி ஜூலை நம் ராஜ்ய ஊழியத்தில் படித்தோம். அதில் ஒன்றுதான் கடவுள் சொல்லும் நற்செய்தி சிற்றேடு. இந்த சிற்றேட்டில் வசனங்களின் எண்கள் மட்டும்தான் இருக்கும். வசனங்களின் வரிகள் இருக்காது. வசனங்களை பைபிளிலிருந்தே படிப்பதற்காகத்தான் இப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடமுள்ள பெரும்பாலான புத்தகங்கள் ஒருவருடைய உதவி இல்லாமல் தானாகவே படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் சிற்றேடு அப்படியில்லை. ஒருவருடைய உதவியோடு படிக்கும் விதத்தில்தான் இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த சிற்றேட்டை ஊழியத்தில் கொடுக்கும்போது பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடித்துக்காட்ட முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்தால், பைபிளிலிருந்து எவ்வளவு நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.—மத். 13:44.
2. நற்செய்தி சிற்றேட்டை ஊழியத்தில் எப்படி கொடுக்கலாம்?
2 எப்படி பேசலாம்? ஊழியத்தில் இந்த சிற்றேட்டை கொடுக்கும்போது இப்படி பேசலாம்: “இன்னைக்கு நிறைய பேர் இந்த உலகம் போற போக்கை நினைச்சு ரொம்ப கவலப்படுறாங்க. என்னைக்காவது இந்த உலகம் நல்ல நிலமைக்கு மாறுமா? [பதில் சொன்ன பிறகு] ரொம்ப சீக்கிரம் மாறப்போகுதுனு கடவுள் சொல்றார். அது சம்பந்தமா நிறைய கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில பதில் இருக்கு. [கடைசி பக்கத்தை காட்டி] இதில இருக்கிற எந்த கேள்விக்கு நீங்க பதில் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறீங்க?” அவர் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்த பாடத்தின் முதல் பாராவை கலந்து பேசுங்கள். இந்தச் சிற்றேட்டை இன்னொரு விதத்திலும் கொடுக்கலாம். நீங்களே ஏதாவது ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுத்து அதை பற்றி ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியைக் கேட்கலாம். அந்தக் கேள்விக்கு கடவுள் சொல்லும் பதிலை இந்த சிற்றேட்டிலிருந்து கலந்துபேசலாம். ஒருவேளை அந்த பாடத்திற்குப் பொருத்தமான வீடியோ jw.org வெப்சைட்டில் இருந்தால் அதையும் படிப்பு எடுக்கும்போது நீங்கள் போட்டுக்காட்டலாம். சில சகோதர சகோதரிகள் அப்படி செய்கிறார்கள்.
3. நற்செய்தி சிற்றேட்டிலிருந்து எப்படி பைபிள் படிப்பு எடுக்கலாம்?
3 பைபிள் படிப்பு எப்படி எடுக்கலாம்? (1) தடித்த கருப்பு எழுத்துகளில் இருக்கும் கேள்விகளை முதலில் படியுங்கள். அந்த பாடத்தில் இருக்கும் முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும். (2) பிறகு அந்தக் கேள்விக்கான பாராவை படியுங்கள். (3) வாசியுங்கள் என்று போட்டிருக்கும் வசனங்களை படியுங்கள். அந்த வசனங்களிலிருந்து அவரே பதில் கண்டுபிடிக்க உதவியாக சில கேள்விகளை கேட்கலாம். (4) அந்தக் கேள்விக்கு இன்னொரு பாரா இருந்தால், 2, 3-ல் உள்ள குறிப்புகளை திரும்பவும் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் படிக்கும் கேள்விக்குப் பொருத்தமான வீடியோவை அதுவரை காட்டவில்லையென்றால் அதை போட்டுக்காட்டுங்கள். (5) கடைசியாக, அந்தக் கேள்விக்கு அவர் என்ன பதிலை தெரிந்துகொண்டார் என்று கேளுங்கள்.
4. இந்தச் சிற்றேட்டை நன்றாகப் பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
4 ஊழியத்திற்கு உதவும் இந்தக் கருவியை நன்றாக பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தச் சிற்றேட்டை பயன்படுத்துங்கள். பைபிள் படிப்பிற்கு போவதற்கு முன்பு, பைபிள் படிப்பவரை பற்றி நன்றாக யோசித்து பாருங்கள். படிக்கும் விஷயத்தை அவருக்கு எப்படி புரிய வைப்பது என்றும், வசனங்களை எப்படி விளக்குவது என்றும் யோசியுங்கள். (நீதி. 15:28; அப். 17:2, 3) போகப் போக, இந்த சிற்றேட்டை பயன்படுத்தி பைபிள் செய்தியை மக்களுக்கு சொல்லிக்கொடுப்பது உங்களுக்கு கை வந்த கலையாகிவிடும்!