உங்கள் ஊழியத்தில் திறம்பட்டவர்களாய் இருங்கள்
1 வானம் கருக்கிறது; அச்சமேற்படுத்தும் சத்தம், காதே கிழிந்துவிடும் அளவுக்கு வர வர அதிகரிக்கிறது. புகைமூட்டத்தைப் போன்ற மேகம் அப்படியே தரையிறங்குகிறது. இதெல்லாம் என்ன? தேசத்தை முழுமையாய் பாழாக்க லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளின் பட்டாளம் வருவதன் விவரிப்பே இது! யோவேல் தீர்க்கதரிசி விவரித்த இந்தக் காட்சி, கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களும் அவர்களுடைய தோழர்களான திரள் கூட்டத்தாரும் செய்யும் பிரசங்க ஊழியத்தில் இன்று அப்படியே நிறைவேறி வருகிறது.
2 1998, மே 1, தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கம் 11, பாரா 19 இவ்வாறு குறிப்பிட்டது: “கடவுளுடைய நவீனகால வெட்டுக்கிளி சேனை, கிறிஸ்தவமண்டல ‘பட்டணம்’ எங்கும் சென்று முற்றும் முழுமையான சாட்சிகொடுத்திருக்கிறது. (யோவேல் 2:9) . . . அவை யெகோவாவின் செய்தியை அறிவிக்கையில், தொடர்ந்து எல்லா தடைகளையும் தாண்டிச்சென்று கோடிக்கணக்கானோருடைய வீடுகளுக்குள் நுழைகின்றன, தெருவிலுள்ள ஆட்களை அணுகுகின்றன, அவர்களிடம் தொலைபேசியில் பேசுகின்றன, இவ்விதமாய் சாத்தியமான எல்லா வழியிலும் அவர்களை தொடர்புகொள்கின்றன.” கடவுள் ஒப்படைத்திருக்கும் இந்த வேலையில் பங்குகொள்வது பெருமையாக இல்லையா?
3 வெட்டுக்கிளிகளைப் பொருத்தவரை வயிறு நிறைவதே அவற்றின் ஒரே குறிக்கோள். ஆனால் யெகோவாவின் ஊழியர்களாகிய நாமோ அவ்வாறில்லை. நாம் பிரசங்கிக்கிற ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நலனிலும் கரிசனை காட்டுகிறோம். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் அடங்கியுள்ள மகத்தான சத்தியத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோம்; அதை அவர்கள் மனமார ஏற்று அதற்கேற்ப செயல்படுகையில் நித்தியமாக இரட்சிக்கப்படுவதற்கு அது அவர்களை வழிநடத்துகிறது. (யோவா. 17:3; 1 தீ. 4:16) எனவே நம்முடைய ஊழியத்தை பலன்தரத்தக்க விதத்தில் நாம் செய்ய வேண்டும். அதற்கு பலதரப்பட்ட ஊழிய முறைகள் இருக்கின்றன. எந்த வகையான ஊழியத்தில் ஈடுபடுகையிலும் ஒரு காரியத்தை நம் மனதில் வைக்கவேண்டும். அது, சரியான விதத்திலும் செய்யப்படவேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் அபாரமான பலனைக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும். “இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது” என்பதால் நாம் ஊழியம் செய்யும் முறைகளையும், அணுகும் முறைகளையும் பரிசீலினை செய்ய வேண்டும்; ஊழியம் பலன்தரத்தக்கதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவசியம்.—1 கொ. 7:31, பொ.மொ.
4 நாம் பலதரப்பட்ட ஊழிய முறைகளை முயற்சி செய்கிறபோதிலும் வீட்டுக்கு வீடு ஊழியமே நம்முடைய பிரதான ஊழிய முறை. ஊழியத்தில் அடிக்கடி பூட்டிக்கிடக்கும் வீடுகளையோ அல்லது ஆட்கள் தூங்கிக் கொண்டிருப்பதையோ நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதல்லவா? இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்?
5 வளைந்து கொடுப்பவராகவும் நியாயமானவராகவும் இருங்கள்: முதல் நூற்றாண்டு இஸ்ரேல் நாட்டில், ராத்திரி நேரத்தில்தான் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஏன்? அது அவர்களுக்கு செளகரியமான நேரமாக இல்லைதான், ஆனாலும் எக்கச்சக்கமான மீன்களைப் பிடிப்பதற்கு அதுவே ஏற்ற சமயம். சொல்லப்போனால், அவர்களுக்கு மீன்களை வாரிவழங்கிய சமயம் அதுதான். இந்தப் பழக்கத்தைக் குறித்து 1992, செப்டம்பர் 15-ன் காவற்கோபுரம் இவ்வாறு குறிப்பிட்டது: “அப்படியே நாமும்கூட நம்முடைய பிராந்தியத்தை கவனித்து ஆராய வேண்டும். மீன்பிடிப்பதை போலவே பெரும்பாலான ஆட்கள் வீட்டில் இருக்கக்கூடிய நேரங்களில், அதாவது நாம் சொல்வதற்கு அவர்கள் செவிசாய்க்கும் சமயங்களில் மனுஷரைப் பிடிக்கச் செல்லலாம்.” புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் இருப்பவர்கள் பொதுவாக வீட்டில் எப்போது இருப்பார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் சனி, ஞாயிறுகளில் காலை நேரத்தில் இருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்; ஆனால் அந்தச் சமயத்தில் நாம் ஊழியம் செய்யலாம் என எண்ணி அவர்களுடைய வீட்டின் கதவைத் தட்டினால் பொதுவாக நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள். உங்களுடைய பிராந்தியத்திலும் இதே நிலைதான் என்றால், காலையில் கொஞ்சம் நேரங்கழித்தோ அல்லது மதிய வேளையிலோ ஊழியத்திற்கு செல்ல முடியுமா? இது நம்முடைய ஊழியத்தை அதிக பலன்தரத்தக்கதாக்க உதவும். இப்படி செய்வது நம்முடைய அயலாருக்கு நாம் காட்டும் கரிசனையாகவும், மெய் கிறிஸ்தவர்களின் அன்பை படம்பிடித்துக் காட்டுவதாகவும் இருக்கும்.—மத். 7:12.
6 ‘நம்முடைய நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும் தெரிந்திருக்க’ வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 4:5-ல் (NW) நமக்கு நினைப்பூட்டுகிறார். இந்த பைபிள் புத்திமதிக்கு இசைவாக, வைராக்கியத்தோடும் உற்சாகத்தோடும் நம்முடைய ஊழியத்தை செய்வோம். அப்போது நம் அணுகுமுறைகளில் சமநிலையுள்ளவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்க முயற்சி செய்வோம். எதையும் ‘மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உபதேசம் பண்ண’ விரும்புகிறோம்; ஆயினும் எந்த நேரத்தில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுகிறோம் என்பதை கவனத்தில் வைக்கவேண்டும்; அது பொருத்தமானதாகவும் பலன்தரத்தக்கதாகவும் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். (அப். 20:20) முதல் நூற்றாண்டில் இஸ்ரவேலிலிருந்த மீனவர்களைப் போலவே நாமும் பலன்தரத்தக்க விதத்தில் ஊழியம் செய்வதற்கு சாதகமான நேரத்தில் ‘மீன்பிடிக்கச்’ செல்வதிலேயே விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறோம்; நமக்கு செளகரியமான நேரத்தில் செல்வதில் அல்ல.
7 இதற்கு என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? சாதாரணமாக ஊழியத்திற்கான கூட்டங்கள், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:00 மணிக்கு அல்லது 9:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன; இதற்குப்பின் உடனடியாக எல்லாரும் பிரிந்து வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காக பிராந்தியத்திற்குச் செல்கின்றனர். என்றபோதிலும், குடியிருப்புப் பகுதிகளில் ஊழியத்திற்காக போவதற்கு முன், தெரு ஊழியம், வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்தல், அல்லது மறுசந்திப்புகள் செய்தல் போன்ற ஊழியத்தின் பலதரப்பட்ட அம்சங்களில் பிரஸ்தாபிகள் பங்குகொள்ள சில மூப்பர் குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர். சில சபைகள் காலை 10 மணிக்கோ 11 மணிக்கோ அல்லது நண்பகல் 12 மணிக்கோ ஊழியத்திற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்கின்றன. அதன்பிறகு, குழுவினர் நேரடியாக வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு செல்கின்றனர்; மதியம் வெகு நேரம் வரை ஊழியத்தில் ஈடுபடுகின்றனர். சில பிராந்தியங்களில், காலையில் ஊழியத்திற்குச் செல்வதைக் காட்டிலும் மதியம் ஊழியத்திற்கு செல்வதே பிரயோஜனமானதாக இருக்கிறது. இத்தகைய மாற்றங்களைச் செய்வது வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அமோக விளைச்சலை வாரிவழங்கும்.
8 பகுத்துணர்கிறவர்களாகவும் சாதுரியமுள்ளவர்களாகவும் இருங்கள்: வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஆட்களை சந்திக்கும்போது நம்முடைய செய்திக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் பிரதிபலிக்கின்றனர். சில வீட்டுக்காரர்கள் சந்தோஷமாக சொல்வதை கேட்கின்றனர், இன்னும் சிலர் பாரா முகம் காட்டுகின்றனர், ஒரு சிலர் விதண்டாவாதம் செய்கின்றனர் அல்லது வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுகின்றனர். இப்படி விவாதிப்பவர்களை எதிர்ப்படுவதைக் குறித்ததில், “சத்தியத்தை மதியாத ஆட்களுடன் ‘தர்க்கங்களில் வெற்றிபெறுவதற்கு’ ” நாம் வழிதேடக்கூடாது என வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 7 சொல்கிறது. வீட்டுக்காரர் விருப்பம் காட்டவில்லை என்றால் அடுத்த வீட்டுக்குச் செல்வது நல்லது. ஆட்கள் நம்மோடு பேச வேண்டும் என்றோ நம்முடைய கருத்தை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அவர்களிடம் எதிர்த்து நிற்கக்கூடாது. நம்முடைய செய்தியை அவர்கள் கேட்டே தீரவேண்டும் என மல்லுக்கு நிற்கக்கூடாது. நியாயமானவர்களாக நடந்துகொள்ளவில்லை என்றால் மற்ற சாட்சிகளுக்கும் பிரச்சினை ஏற்படுத்துவோம், ஏன் பொதுவில் நம்முடைய பிரசங்க ஊழியத்திற்கே பிரச்சினை உண்டாக்கிவிடுவோம்.
9 பிராந்தியத்தில் ஊழியத்தைத் தொடங்குவதற்குமுன் வீட்டுக்காரர்களில் யாராவது தங்களுடைய வீட்டுக்கு வரக்கூடாது என சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய பிராந்திய அட்டையை பாருங்கள். அப்படிப்பட்ட வீடுகள் ஏதேனும் இருந்தால், அந்தத் தெருவில் ஊழியம் செய்யவிருக்கும் ஒவ்வொரு பிரஸ்தாபியிடமும் அதை சொல்லி வையுங்கள். ஊழியக் கண்காணி சொல்லாமல் யாரும் தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டு இப்படிப்பட்ட வீடுகளுக்கு ஊழியம் செய்ய செல்லக்கூடாது.—ஜனவரி 1994, நம் ராஜ்ய ஊழியத்தில் கேள்விப் பெட்டியைக் காண்க.
10 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் நாம் பகுத்தறிகிறவர்களாக இருப்பதன் மூலம் பலன்தரத்தக்க முறையில் படிப்படியாக முன்னேறலாம். ஒரு வீட்டை அணுகும்போது அதை கவனித்து பாருங்கள். ஸ்கிரீன் எல்லாம் மூடப்பட்டிருக்கிறதா அல்லது ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருக்கிறதா? ஆள் அரவம் இல்லாத வீடுபோல் தெரிகிறதா? அப்படியென்றால் அந்த வீட்டுக்காரர் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்தலாம். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் சற்று நேரம் கழித்து அந்த வீட்டுக்குப் போனால் அவர் ஒருவேளை நல்லவிதமாக உரையாடலாம். அந்த வீட்டின் கதவைத் தட்டாமல் வீட்டு நம்பரை மாத்திரம் குறித்துக் கொண்டு பின்பு சென்று சந்திப்பது சிறந்தது. அன்றைய ஊழியத்தை முடித்துவிட்டு செல்லும் முன்பு அந்த வீட்டை மறுபடியும் சென்று சந்திக்கலாம் அல்லது வேறொரு சமயத்தில் சென்று சந்திப்பதற்கு வேண்டி குறித்து வைத்துக் கொள்ளலாம்.
11 ஆனாலும் தூங்கிக் கொண்டிருக்கும் சிலரை தவறுதலாக எழுப்பிவிடுகிறோம் அல்லது தொந்தரவு செய்துவிடுகிறோம். அப்போது வீட்டுக்காரர் எரிச்சலோ கோபமோ அடையலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எப்படி சமாளிக்கலாம்? “விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்” என நீதிமொழிகள் 17:27 புத்திமதி கொடுக்கிறது. சந்தர்ப்பம் தெரியாமல் அவர்களை தொந்தரவு செய்துவிட்டதற்காக நாம் நிச்சயமாகவே அவர்களிடம் வருத்தத்தை தெரிவித்தாலும் நம் ஊழியத்திற்காக நாம் அவர்களிடம் வருத்தம் தெரிவிக்க மாட்டோம். வேறொரு சமயத்தில் வந்தால் சௌகரியமாக இருக்குமா என்று சாமர்த்தியமாக கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பு சென்று சந்தியுங்கள். அவர் மீதுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் நம்முடைய மென்மையான பேச்சே எரிச்சலடைந்தவரைக்கூட உச்சிகுளிரச்செய்துவிடும். (நீதி. 15:1) வீட்டுக்காரர் எப்போதுமே நைட் ஷிப்ட் பார்ப்பவர் என்று தெரிவித்தால் பிராந்திய அட்டையில் அதை குறித்து வைப்பது நல்லது; இது பின்னொருமுறை அவரை சந்திக்கச் செல்பவர்கள் அவருக்கு சௌகரியமான சமயத்தில் செல்ல உதவும்.
12 நம்முடைய பிராந்தியத்தை முழுமையாக செய்து முடிக்க விரும்புவதால் நாம் பகுத்துணர்வுடன் செயல்படுவது பொருத்தமானதே. முதன்முறை நாம் ஆட்களை சந்திக்க வீடுகளுக்குச் செல்கையில் அநேகர் வீடுகளில் இல்லாதிருப்பதால் இரட்சிப்பின் செய்தியை அறிவிக்க மீண்டும் சென்று சந்திப்பதற்கு முயற்சி செய்ய வேண்டியது அவசியம். (ரோ. 10:13) பிரஸ்தாபிகள் ஒரே நாளில் பலதடவை அதே வீட்டுக்குச் சென்று ஆட்களை சந்திக்க முயற்சி செய்கின்றனர் என அறிக்கைகள் காட்டுகின்றன. அப்படி செல்கையில் அக்கம்பக்கத்தார் நம்மை கண்டிப்பாக கவனிப்பார்கள். யெகோவாவின் சாட்சிகள் ‘எப்பப்பார்த்தாலும்’ தங்கள் தெருக்களிலேயே அலைந்துகொண்டிருக்கின்றனர் என்பதாக அவர்கள் நினைத்தால் அதனால் நம்மீது தவறான எண்ணம் ஏற்படலாம். இதை எப்படித் தவிர்ப்பது?
13 பகுத்துணர்வோடு நடந்துகொள்ளுங்கள். வீட்டிலில்லாதவர்களை மீண்டும் சென்று சந்திக்கையில் வீட்டில் யாராவது இருப்பதாக தெரிகிறதா? அவ்வீட்டின் தபால் பெட்டியில் தபால்களோ பேப்பர்களோ துருத்திக்கொண்டிருந்தால் வீட்டுக்காரர் இன்னும் வரவில்லை என்பது தெளிவாக தெரியும்; எனவே திரும்பவும் அப்போது செல்வதால் பயனில்லை. அதே நாளில் சாயங்காலமோ வேறொரு சமயத்திலோ சென்றும் அந்நபரை சந்திக்க முடியவில்லை என்றால் அந்த வீட்டுக்காரரோடு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்யலாம். அப்படியும் முடியவில்லை என்றால், அடிக்கடி ஊழியம் செய்யும் பிராந்தியமாக இருக்கையில் ஒரு துண்டுப்பிரதியையோ கைப்பிரதியையோ மற்றவர்கள் கையில் கிடைக்காதபடி அவர்கள் வீட்டில் போட்டுவிட்டு வரலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மறுமுறை அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் அந்நபரை சென்று சந்திப்பது சிறந்ததாக இருக்கும்.
14 தட்பவெப்பநிலை மோசமாக இருக்கையில் கதவருகே நின்றுகொண்டு நெடுநேரம் வீட்டுக்காரரோடு பேசிக்கொண்டிருக்கக்கூடாது. உள்ளே வரும்படி அழைத்தால் அவர்களுடைய வீட்டுக்குள் செல்கையில் காலிலுள்ள தூசியால் வீட்டை மண்ணாக்கிவிடாதீர்கள். திடீரென்று குரைக்கும் நாய் பாய்ந்துவருகையில் புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்ளுங்கள். அடுக்குமாடி கட்டடங்களில் ஊழியம் செய்கையில், மெல்லப் பேசுங்கள். குடியிருக்கும் மற்றவர்களை தொந்தரவு செய்யாமலிருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் வந்திருப்பதை உங்கள் சத்தமே சொல்லாமல் சொல்லிவிடும்.
15 ஒழுங்குள்ளவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் இருங்கள்: ஊழியம் செய்ய சபையாக பிராந்தியத்திற்கு செல்லும்போது கும்பல் கும்பலாக கூடுவதை தவிர்க்க சிறந்த திட்டமிடுதல் அவசியம். கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் அல்லது வேன்கள் என வாகனங்களில் அநேக பிரஸ்தாபிகள் வந்து கும்பலாக இறங்கினால் சில வீட்டுக்காரர்கள் பயந்துவிடுவார்கள். குடியிருப்பு பகுதிகளுக்குள் நாம் “படையெடுக்கிறோம்” என்ற நினைப்பை அவர்களுக்கு ஏற்படுத்திவிடக்கூடாது. ஊழியத்திற்கான கூட்டத்திலேயே பிராந்தியத்தில் யார்யார் எங்கெங்கே ஊழியத்திற்கு செல்வது என்பதை தீர்மானித்து பிரித்துவிட வேண்டும். ஒரு பகுதிக்கு ஒரு குடும்பத்தை அனுப்பலாம். சிறு குழுக்களாக அனுப்பப்படுகையில் வீட்டுக்காரர்களும் பயந்துவிடமாட்டார்கள்; ஊழியத்திற்குப் பிரித்துவிடுவதிலும் பிரச்சினை இருக்காது.
16 பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நடந்துகொள்ளும் விதத்தை கண்காணிப்பதும் ஒழுங்குள்ளவர்களாக இருப்பதில் உட்பட்டிருக்கிறது. ஊழியத்தில் பெரியவர்களோடு பிள்ளைகளும் செல்லுகையில் சரியான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இஷ்டத்திற்கு அங்குமிங்கும் உலாத்திக்கொண்டு இருக்க சின்னஞ்சிறுசுகளை விடக்கூடாது; அதேசமயத்தில் வீட்டுக்காரர்களின் அல்லது வழியில் செல்பவர்கள் கவனத்தைத் திசைதிருப்பும் விதத்தில் விளையாடிக்கொண்டிருக்கவும் விடக்கூடாது.
17 அநாவசியமாக டீ, காபி குடிப்பதற்கு வேண்டி ஊழியத்திற்கு இடை இடையே அதிக நேரத்தை செலவழிக்காதீர்கள். இதற்கு சமநிலை தேவை. 1995 ஜூன் நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3 இவ்வாறு குறிப்பிட்டது: “நாம் வெளி ஊழியத்தில் இருக்கும்போது, அருமையான நேரத்தை தேநீர் இடைவேளைகளில் இழக்கக்கூடும். என்றாலும், வானிலை கடுமையாக இருக்கும்போது, சிறிய இடைவேளையானது வேலையைத் தொடரும்படி புத்துணர்ச்சி அளிக்கும். இருந்தாலும், அனேகர், ஊழியத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற நேரத்தில் சகோதரர்களுடன் சேர்ந்து தேநீர் இடைவேளைகளைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, மக்களுக்குச் சாட்சிபகருவதில் சுறுசுறுப்பாய் இருப்பதைத் தெரிந்துகொள்கின்றனர்.” இதுபோல ஏதாவது சாப்பிடுவதற்காக இடையே போவது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் சில சமயங்களில் ஊழியத்தின் இடையே சகோதர சகோதரிகள் டீ குடிப்பதற்கோ ஹோட்டலுக்கோ பெரும் கும்பலாக செல்வது கவனிக்கப்பட்டிருக்கிறது. அவ்விடங்களில் அவ்வளவு பேரையும் கவனித்து அனுப்புவதற்கு அதிக நேரம் ஆகும்; அதோடு இப்படி கும்பலாக செல்வது அங்கு சாப்பிட வரும் மற்றவர்களுக்குக்கூட பயத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சில சமயங்களில், காலை ஊழியத்தின் சம்பவங்களை சப்தமாக பேசிக்கொள்வதானது நம்முடைய ஊழியத்தின் கண்ணியத்தையும் பலனையும் குறைத்துவிடும். ஒரே இடத்திற்கு இப்படி கும்பலாக போவதை பிரஸ்தாபிகள் தவிர்ப்பது புத்திசாலித்தனமாக இருக்கும்; அதோடு ஊழியத்திற்கான நேரத்தை அநாவசியமாக வீணாக்காமலும் இருப்போம்.
18 தெருக்களில், வாகன நிறுத்தங்களில், பொதுவிடங்களில் என ஆட்கள் தென்படும் இடங்களிலெல்லாம் சாட்சி கொடுப்பதனால் அநேகர் அக்கறையோடு கேட்கிறவர்களை சந்தித்திருக்கிறார்கள். இதுபோன்ற இடங்களிலும்கூட நம்முடைய பேச்சில் மாத்திரமல்ல நம்முடைய நியாயத்தன்மையும் மற்றவர்களுக்கு தெரியும் விதத்தில் சாட்சி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சபையிலுள்ள பிரஸ்தாபிகளும் தங்கள் தங்கள் பிராந்தியத்தில் ஊழியம் செய்ய வேண்டும். இது, வியாபார இடங்களில், பஸ் ஸ்டான்ட் அல்லது ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருக்கும் பொது ஜனங்களை அநாவசியமாக தொந்தரவு செய்வதை தவிர்க்க உதவும்; அதோடு 24 மணிநேரமும் இயங்கும் பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் வேலை செய்யும் ஆட்களையும் தொந்தரவு செய்வதைத் தவிர்ப்போம். ஒழுங்கான, கண்ணியமான விதத்தில் ஊழியத்தை நாம் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நம்முடைய பிராந்தியத்தில் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும். மற்றொரு சபையிலுள்ள சபை ஊழிய குழு உதவும்படி கேட்டு அதற்காக சபை ஏதேனும் ஊழிய ஏற்பாட்டை செய்திருந்தால் மட்டுமே அப்பிராந்தியத்தில் ஊழியம் செய்யலாம்.—2 கொரிந்தியர் 10:13-15-ஐ (NW) ஒப்பிடுக.
19 பொது ஜனங்கள் அதிகம் வரும் இடங்களை சில சபைகள் பிராந்தியங்களாக பிரித்திருக்கின்றன. இந்தப் பிராந்தியத்திற்கான அட்டை ஒரு பிரஸ்தாபியிடமோ அல்லது ஒரு தொகுதியிடமோ கொடுக்கப்படும். இந்த ஏற்பாடு பிராந்தியத்தை முழுமையாக செய்துமுடிக்கவும் உதவும் அதோடு ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு எக்கச்சக்கமான பிரஸ்தாபிகள் போகாமலிருப்பதற்கும் உதவும். இது, “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்ற 1 கொரிந்தியர் 14:40-லுள்ள நியமத்திற்கு இசைவாகவும் இருக்கும்.
20 யெகோவாவின் பெயரைத் தாங்கிய ஊழிய பிரதிநிதிகளாக நாம் இருப்பதால், நம்முடைய தோற்றம் எப்பொழும் கண்ணியமானதாய் இருக்க வேண்டும். நாம் உபயோகிக்கும் பொருட்களிலும் அந்தக் கண்ணியம் பளிச்சிடவேண்டும். கிழிந்துபோன ஊழியப் பையும், ஓரங்கள் மடங்கிய அல்லது அழுக்குப்படிந்த பைபிள்கள் நம்முடைய ராஜ்ய செய்தியிலிருந்து வீட்டுக்காரரின் கவனத்தை திசைதிருப்பும். உடை உடுத்தியிருக்கும் விதமும் தலைசீவியிருக்கும் ரீதியும் “அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு நீங்கள் யார், எப்படிப்பட்டவர், யாரோடு ஒப்பிடலாம் என கணக்குப் போடும்படி அவர்களுக்குச் சொல்லாமல் சொல்லிவிடும்” என்பது பொதுச் சொல். எனவே நம்முடைய தோற்றம் ஒழுங்கீனமாக அல்லது ஏனோதானோவென்று இருக்கக்கூடாது, அல்லது ஒரேடியாக பகட்டாகவும் இருக்கக்கூடாது; ஆனால், “சுவிசேஷத்திற்குப் பாத்திரராக” எப்போதும் நடந்துகொள்ள வேண்டும்.—பிலி. 1:27; 1 தீமோத்தேயு 2:9, 10-ஐ ஒப்பிடுக.
21 “நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” என 1 கொரிந்தியர் 9:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். பவுலை பின்பற்றுகிறவர்களாக நாமும் பலன்தரத்தக்க, பயனுள்ள ஊழியத்தை செய்ய விரும்புகிறோம். இன்று யெகோவாவின் “வெட்டுக்கிளி சேனை”யின் பாகமாக நாம் முழு மூச்சாக இந்த சாட்சி கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறோம். நம்முடைய பிராந்தியத்திலுள்ள அனைவருக்கும் இரட்சிப்பின் செய்தியை எடுத்துச்செல்பவர்களாக நம் கிறிஸ்தவ நியாயத்தன்மையையும் பகுத்துணர்வையும் நன்கு பயன்படுத்திக் கொள்வோமாக.