குடும்ப அங்கத்தினர் முழுமையாய் ஒத்துழைப்பது எப்படி—பைபிள் படிப்பில்
1 சத்தியம், குடும்ப வாழ்க்கைக்கு நிஜமான அர்த்தத்தையும் நோக்கத்தையும் அள்ளி வழங்குவது உண்மைதான்; ஆனாலும் யெகோவாவை சேவிப்பதில் வெற்றி தானாகவே நம்மைத் தேடிவந்துவிடாது. ஆவிக்குரிய விதத்தில் பலமான குடும்பத்தை உருவாக்க நேரமும் முயற்சியும் தேவை. பெரும் முயற்சி தேவைப்படும் இந்த வேலையில் குடும்ப அங்கத்தினர் எல்லாருமே சேர்ந்து பாடுபட வேண்டியது மிகவும் அவசியம். மூன்று பகுதிகளைக் கொண்ட தொடர்கட்டுரையின் இந்த முதலாவது பகுதியில், நல்ல படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்வதில் குடும்பங்கள் எவ்வாறு ஒத்துழைப்பது என்ற விஷயம் சிந்திக்கப்படும்.
2 பைபிளை தினந்தோறும் வாசிப்பதன் மூலம்: “அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்” என நீதிமொழிகள் 24:5 சொல்கிறது. பைபிளை தவறாமல் வாசிப்பதிலிருந்து பெறும் அறிவு, ஒருவரது ஆவிக்குரிய தன்மையை சாத்தான் தாக்குகையில் அதில் வெற்றிகாண தேவைப்படும் பலத்தைத் தருகிறது. (சங். 1:1, 2) நீங்கள் குடும்பமாக ஒன்றுசேர்ந்து பைபிளை தினந்தோறும் வாசிக்கிறீர்களா? அந்த வருடத்திற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையில் “கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை” ஒவ்வொரு வாரத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தவறாமல் படிப்பதற்கு ஒவ்வொரு குடும்பமும் குறைந்தபட்சம் பத்து நிமிடம் செலவிட்டால் போதும். வசதியான நேரத்தை அதற்கென்று ஒதுக்குங்கள். காலை சாப்பாட்டின்போது, இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, அல்லது தூங்கச் செல்வதற்கு முன்பு என தெரிந்தெடுங்கள். இச்சந்தர்ப்பத்தில் பைபிளை வாசித்து வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து தினவசனத்தையும் கலந்தாலோசியுங்கள். உங்கள் குடும்பம் ஒவ்வொரு நாளும் வழக்கமாக செய்துவரும் வேலையுடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
3 வாராவாரம் ஒன்றுசேர்ந்து படிப்பதன் மூலம்: குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து செய்யும் வேலையிலேயே, வாராவாரம் படிக்கும் குடும்ப பைபிள் படிப்பு ஆர்வமாக எதிர்பார்க்குமளவுக்கு சிறப்பாக இருக்க வேண்டும். அந்தப் படிப்பில் பிரியத்துடன் பங்கேற்பதன் மூலம் ஒவ்வொரு அங்கத்தினரும் ஆதரவு காட்ட வேண்டும். எதிலிருந்து படிப்பது, எந்த நாள், எந்த நேரம், எவ்வளவு நேரம் படிப்பது இவற்றைத் தீர்மானிக்கையில், குடும்பத்தின் தேவையையும் குடும்பத் தலைவர் கருத்தில் கொள்ள வேண்டும். வாராவாரம் செய்யும் வேலைகளில் குடும்ப படிப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சிறுசிறு விஷயங்கள் குறுக்கிட்டு இதை தடைசெய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.—பிலி. 1:9-11.
4 ஒரு குடும்பத்தில், பிஸினஸ் சம்பந்தமாக அந்த அப்பாவுக்கு அடிக்கடி போன் வந்துகொண்டிருக்கும்; ஆனால், குடும்ப பைபிள் படிப்பு படிக்கும்போது அவர் போனை டிஸ்கனெக்ட் செய்துவிடுவார். வாடிக்கையாளர் யாராவது வீட்டுக்கு வந்திருந்தார்களென்றால், ஒன்று அந்தப் படிப்பில் கலந்துகொள்ள அழைப்பார் அல்லது படிப்பு முடியும் வரை காத்திருக்கச் சொல்வார். குடும்ப பைபிள் படிப்பில் எதுவும் குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்வார் அந்த அப்பா. இது, அவரது பிள்ளைகளை மிகவும் கவர்ந்துவிட்டது. அவருடைய பிஸினஸும் செழித்தது.
5 ஆவிக்குரிய நடவடிக்கைகளில் குடும்ப அங்கத்தினர் ஒத்துழைத்தால் கிடைக்கும் இன்பமே தனிதான்! குடும்ப பைபிள் படிப்பில் முழுமையாய் பங்கேற்க நாம் உண்மையுடன் முயலும்போது நம்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் பொழியும்.—சங். 1:3.