குடும்ப அட்டவணை—குடும்பப் படிப்பு
1 உங்களைப் போலவே உங்கள் பிள்ளைகளையும் யெகோவாமீது அன்பு செலுத்த வைப்பதே, ஒரு கிறிஸ்தவ பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும். இதைச் செய்வதற்கு மிகப் பொருத்தமான சமயம், வாராந்தர குடும்ப பைபிள் படிப்புக்காக ‘நீங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிற’ சமயமாக இருக்கலாம். (உபா. 6:5-7) உங்கள் மணத்துணை சத்தியத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, குடும்பத்தில் எல்லாரும் யெகோவாவின் சாட்சியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அல்லது நீங்கள் ஒற்றைப் பெற்றோராக இருந்தாலும் சரி, தவறாமல் குடும்பப் படிப்பை நடத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகளை உங்களிடமும் யெகோவாவிடமும் நெருங்கி வரச் செய்யலாம்.
2 குடும்பப் படிப்பை ஆரம்பித்தல்: இதற்கு முதற்படி குடும்பமாகப் படிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்வதாகும். எப்போது படிப்பு நடத்துவதென உங்களுக்குத் தெரியாவிட்டால் இதை உங்கள் குடும்பத்தாருடன் ஏன் கலந்து பேசக்கூடாது? (நீதி. 15:22) உங்கள் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தால் வாரத்தில் பல தடவை கொஞ்ச கொஞ்ச நேரம் படிப்பை நடத்தலாம். உங்கள் குடும்பத்திற்கு எத்தகைய அட்டவணை சிறந்ததெனத் தீர்மானியுங்கள். உங்கள் குடும்ப அட்டவணையில் இந்தப் படிப்பிற்காகத் திட்டவட்டமான நேரத்தை ஒதுக்குங்கள், அந்த நேரத்தில் தவறாமல் படிப்பு நடத்துங்கள்.
3 எதைப் படிக்கலாம்? சபை புத்தகப் படிப்பிலோ காவற்கோபுர படிப்பிலோ கலந்தாலோசிக்கவிருக்கும் பாடத்தைச் சில குடும்பங்கள் தயாரிக்கின்றன. பருவ வயதினருக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை சில குடும்பங்கள் படிக்கின்றன. சிறு வயதில் இருக்கும் மகனையும் மகளையும் உடைய ஒரு தகப்பன் இவ்வாறு சொன்னார்: “எங்கள் பிள்ளைகள் வாரா வாரம் குடும்பப் படிப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலுள்ள காட்சிகளை நாங்கள் நடிக்கிறோம். எத்தனை பாராக்களைப் படித்து முடிக்கிறோம் என்பதைவிட அது எந்தளவுக்கு அவர்கள் மனதில் பதிகிறது, எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறார்கள் என்பதே அதிமுக்கியமாக இருக்கிறது.”
4 வாரா வாரம் படியுங்கள்: குடும்பப் படிப்பைத் தவறாமல் நடத்த வேண்டும், குடும்பத்தார் எல்லாரும் அதற்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டும். எதிர்பாராத சூழ்நிலைகளின்போது படிப்பிற்கான நாளையும் நேரத்தையும் மாற்றி வைத்துக்கொள்ளும் விதத்தில் அது இருக்க வேண்டும். படிக்கும் விஷயத்திலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் வரலாம். ஆனால் தேவையான எந்தச் சிறிய மாற்றமும், குடும்பப் படிப்பு நடத்துவதில் நீண்ட கால இடைவெளி ஏற்படுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் குடும்பத்தைப் பற்றி ஒரு பெண் இவ்வாறு சொல்கிறாள்: “எங்கள் குடும்பப் படிப்பு நேரத்தில் மாற்றமிருந்தால், எல்லாருக்கும் தெரிவிப்பதற்காக அப்பா அதை எழுதி ஃபிரிஜ் கதவில் ஒட்டிவிடுவது வழக்கம்.” குடும்பப் படிப்பு தவறாமல் நடப்பதற்கு எடுக்கும் இத்தகைய முயற்சிகள் எவ்வளவு பாராட்டுக்குரியவை! “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை நீங்கள் வளர்க்கும்போது அவர்களிடமும் நம்முடைய பரலோகத் தகப்பனிடமும் உங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறீர்கள்.—எபே. 6:4.