கிறிஸ்துவின் மரணத்தை உலக முழுவதும் ஆசரித்தல்
1 யெகோவா நம்மீது அபரிமிதமான ஆசீர்வாதங்களை பொழிந்திருக்கிறார். அவருடைய நற்குணத்தின் மற்றும் அன்புள்ள தயவின் முழுமை, “விவரிக்க முடியாத இலவச பரிசு” என அழகான வார்த்தைகளில் விளக்கப்படுகிறது. ஆம், “கடவுளுடைய தகுதியற்ற தயவு” மிகவும் உன்னதமானது, அதை நாம் முழுமையாக விவரிக்க வார்த்தைகளே இல்லை.—2 கொ. 9:14, 15, NW.
2 அவருடைய மிகச் சிறந்த பரிசு: மனிதவர்க்கத்தின் மீட்பரான இயேசு கிறிஸ்துவே பரிசுகளிலேயே தலைசிறந்த பரிசு. யெகோவா, மனிதவர்க்க உலகத்தின் மீதுள்ள தம்முடைய பேரளவான அன்பைக் காண்பிப்பவராக தம்முடைய அருமையான, ஒரே பேறான குமாரனை அளித்தார். (யோவா. 3:16) கடவுளிடமிருந்து வந்த இப்படிப்பட்ட தகுதியற்ற ஆசீர்வாதத்தை உலக முழுவதும் நினைவுகூர வேண்டாமா என்ன? நிச்சயம் செய்தே ஆகவேண்டும். ஆனால் எப்போது, எப்படி? வியாழக்கிழமை, ஏப்ரல் 1, 1999, மாலையில் உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிப்பார்கள். பலிகளிலேயே உன்னதமான பலியை நினைவுகூருகிறவர்களாக இதை செய்வார்கள்.—1 கொ. 11:20, 21, 23-26.
3 “நாம் பாவிகளாயிருக்கையில்” கிறிஸ்து நமக்காக மரித்தார். ஆகவே, அவருடைய மரண நினைவுநாளை நாம்தாமே ஆசரிப்பதன் மூலமும் அதிமுக்கியமான இந்த நிகழ்ச்சியின்போது நம்மோடு கலந்துகொள்ள மற்றவர்களையும் அழைப்பதன் மூலமும் நம்முடைய தனிப்பட்ட நன்றியுணர்வை காண்பிப்போம்.—ரோ. 5:8.
4 அதிமுக்கிய நிகழ்ச்சி: கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருவது எதை முக்கியப்படுத்திக் காட்டுகிறது தெரியுமா? அவர் கொஞ்சம்கூட பிசகாமல் கடவுளுடைய பேரரசுரிமையை ஆதரித்தார் என்பதையே. அதுமட்டுமல்ல, இயேசுவின் பலியில் விசுவாசத்தை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையை மகிழ்ந்தனுபவிக்க முடியும் என்பதையும் இது நினைப்பூட்டுகிறது; இது நம்முடைய இரட்சிப்புக்கு உறுதியளிக்கிறது. (அப். 4:12) இதுவே வருடத்தின் அதிமுக்கிய நிகழ்ச்சி அல்லவா?
5 கர்த்தருடைய இராப்போஜனத்தை நம்மோடு சேர்ந்து ஆசரிக்கும்படி நம் அயலாரையும் அழைப்பது அவர்கள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பின் அத்தாட்சியாகும். அந்த மீட்கும்பொருளின் நன்மைகள் இன்னும் கிடைக்கின்றன; அதன் அருமை பெருமைகளை அறியவரும் லட்சக்கணக்கானோர் பயனடைய இன்னும் வாய்ப்பெனும் வாசல் திறந்திருக்கிறது. (பிலி. 3:8, 9) கிறிஸ்துவின் பலியில் விசுவாசத்தை வெளிக்காட்டும் அனைவரும் நித்திய ஜீவன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பெறலாம்.—யோவா. 17:3.
6 கடவுளுடைய மேன்மையான தகுதியற்ற தயவிற்கு நாம் போற்றுதலைக் காண்பிக்க மிகச் சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைப்பது நினைவு ஆசரிப்பு சமயத்தில்தான் அல்லவா? கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பதற்கு இது மிகவும் அருமையான ஒரு சமயம். யெகோவாவின் விவரிக்க முடியாத இலவச பரிசைப் பற்றி ஜெபசிந்தையோடு தியானித்து, இந்த வருடத்தின் கர்த்தருடைய இராப்போஜன நிகழ்ச்சியில் பங்குகொள்ள ஆஜராகும் அனைவருக்கும் பெரும் ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன!