உதவி ஊழியர்கள் பெருமதிப்பு வாய்ந்த சேவை செய்கிறார்கள்
1 “இவர்கள், ஆர்வமுள்ள ராஜ்ய சேவையிலும், விசுவாசத்தில் உறுதியாகும்படி மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி உண்மையில் ஒப்புக்கொடுத்த ஆண்களாகத் தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.” நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 57, உதவி ஊழியர்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறது. நம் மத்தியிலுள்ள உதவி ஊழியர்கள் பின்பற்றத்தக்க ஆவிக்குரிய முன்மாதிரி வைக்கின்றனர் என்பதில் சந்தேகமுண்டோ? அவர்களோடும் மூப்பர்களோடும் சேர்ந்து வேலை செய்வதன் மூலம், “அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.”—எபே. 4:16.
2 உதவி ஊழியர்கள் சபையில் இன்றியமையாத வேலைகள் செய்கின்றனர். கணக்கு, புத்தகங்கள், பத்திரிகைகள், சந்தாக்கள், பிராந்தியங்கள் ஆகியவற்றை கவனிப்பது; அட்டன்டன்டுகளாக சேவிப்பது; ஒலிபெருக்கி சாதனங்களை கையாளுவது; இராஜ்ய மன்றத்தை பராமரிப்பது என அவர்கள் செய்யும் மதிப்புமிக்க வேலைகள்தான் எத்தனை எத்தனை! அதோடு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழிய கூட்டத்திலும் பங்குகொள்கின்றனர். அவர்களில் சிலர் பொதுப் பேச்சு கொடுக்கலாம் அல்லது சபை கூட்டங்களில் சிலவற்றை நடத்தலாம். சரீரத்தில் இருக்கும் உறுப்புகளைப் போல நமக்கு தேவையான சேவைகளை உதவி ஊழியர்கள் செய்கின்றனர்.—1 கொ. 12:12-26.
3 ஊழியர் குழுவின் பாகமாக உதவி ஊழியர்கள் பரஸ்பர மரியாதையோடும் புரிந்துகொள்ளுதலோடும் மூப்பர்களுடன் இசைவாக ஒத்துழைக்கின்றனர். இதைப் பார்க்கும் மற்றவர்களும் அவ்வாறே செய்ய தூண்டப்படுகின்றனர். (கொலோ. 2:18) வாரா வாரம் தங்களுடைய பொறுப்புகளை உண்மையுடன் செய்துமுடிப்பதன் மூலமும் மற்றவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை காண்பிப்பதன் மூலமும் சபையானது ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து முன்னேற அவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
4 கடினமாக உழைக்கும் உதவி ஊழியர்களுக்கு நம் நன்றியை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்? ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்; நமது உதவி தேவைப்படும்போது ஒத்துழைக்க தயாராய் இருக்கவும் வேண்டும். அவர்களுடைய வேலைக்கு எப்போதும் நம் பாராட்டுண்டு என்பதை நம் சொல்லும் அல்லது செயலும் காண்பிக்கலாம். (நீதி. 15:23) நம் சார்பாக கடினமாய் உழைப்பவர்கள் உண்மையான அங்கீகரிப்பைப் பெற தகுதியானவர்கள்தான் அல்லவா?—1 தெ. 5:12, 13.
5 உதவி ஊழியர்களின் தகுதிகளையும் வேலைகளையும் கடவுளுடைய வார்த்தை பட்டியலிடுகிறது. (1 தீ. 3:8-10, 12, 13) சபை நல்ல விதத்தில் செயல்பட அவர்களுடைய மதிப்புமிக்க பரிசுத்த சேவை இன்றியமையாதது. அவர்கள் எல்லாரும், “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களா[ய்]” இருப்பதால் அப்படிப்பட்ட ஆண்களுக்கு நாம் தொடர்ந்து உற்சாகமளிப்பது தகுதியானதே.—1 கொ. 15:58.