சுயதியாக உள்ளம் உங்களுக்கு உள்ளதா?
1 தன்னலம் கருதாமல் இயேசு கிறிஸ்து மனித குலத்திற்காக செய்த எல்லாவற்றிற்கும் நம் போற்றுதலைக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். அது, நம் திறமைகள், ஆற்றல், பலம் என எல்லாவற்றையும் சுயநலம் கருதாமல் செலவழிக்க நம்மைத் தூண்ட வேண்டும். “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டு[ம்]” என பைபிள் வேண்டிக்கொள்கிறது. (ரோ. 12:1) உங்களுடைய சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முழுமையாக அத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டுகிறீர்களா என்பதை அவ்வப்போது உங்களை நீங்களே சோதித்துக் கொள்வது உங்களுக்கு உதவும்.
2 பைபிள் அறிவை நாடுவதில்: தனிப்பட்ட பைபிள் வாசிப்புக்கும் முறையான படிப்புக்கும் தவறாமல் நேரத்தை நீங்கள் ஒதுக்கி வைக்கிறீர்களா? அந்த அட்டவணையைத் தவறாமல் பின்பற்றுகிறீர்களா? சபை கூட்டங்களுக்காக நன்கு தயாரிப்பது உங்கள் பழக்கமா? நீங்கள் குடும்ப தலைவராக இருந்தால், உங்கள் குடும்பத்தாரோடு தவறாமல் பைபிள் படிப்பு நடத்துகிறீர்களா? இவற்றையெல்லாம் செய்வதற்காக, டிவிக்கு முன்போ கம்ப்யூட்டருக்கு முன்போ அல்லது மற்றவற்றிற்காகவோ செலவிடும் நேரத்தைத் தியாகம் செய்ய நேரிடலாம். எனினும், அது பெரிய தியாகம் அல்ல; ஏனெனில் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் நேரம் செலவிடுவது உங்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவதில் உதவுமே!—யோவா. 17:3.
3 உங்கள் பிள்ளைகளை பயிற்றுவிப்பதில்: தன்னலம் கருதாமல் செயல்பட, சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதே கற்றுக்கொள்ள வேண்டும்; விளையாடுவதற்கு என நேரம் இருப்பது போல, வேலை செய்வதற்கும் தேவராஜ்ய காரியங்களுக்கும் நேரம் இருக்க வேண்டும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள். (எபே. 6:4) அவர்களை உபயோகமான சில வீட்டு வேலைகளை செய்ய வையுங்கள். தவறாமல் அவர்களோடு ஊழியத்தில் நேரத்தை செலவிட அட்டவணை போடுங்கள். நீங்கள் கற்பிக்கும் விஷயங்களுக்கெல்லாம் பலன் கிடைப்பதற்காக, நீங்களே முன்மாதிரியாய் இருங்கள்.
4 சபை காரியங்களில்: எல்லாருடைய நலனையும் கருதி சபையிலுள்ள ஒவ்வொருவரும் மனமுவந்து தியாகங்கள் செய்கையில் சபை வளமடைகிறது. (எபி. 13:16) ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்கும் வேலையிலும் உங்களால் அதிக நேரத்தை செலவழிக்க முடியுமா? வியாதிப்பட்டவருக்கோ வயதானவருக்கோ உதவ உங்களால் முன்வர முடியுமா? அப்படிப்பட்டவர்களை கூட்டங்களுக்கு அழைத்து வருவது அல்லது கொண்டு விடுவது போன்ற உதவிகள் தேவைப்படலாம்.
5 கடைசியாக தம்முடைய உயிரையே தியாகம் செய்வதற்கு முன்பு தம் சீஷர்களுக்கு இயேசு புத்திமதி கொடுத்தார்; அவர்கள் தங்கள் கவனத்தை ராஜ்ய காரியங்களிடம் ஒருமுகப்படுத்தும்படியும் மற்ற அனைத்தையும் வாழ்க்கையில் இரண்டாவது இடத்தில் வைக்கும்படியும் சொன்னார். (மத். 6:33) களிகூருதலுடன் யெகோவாவை சேவிக்கையில், இத்தகைய சுயதியாக மனப்பான்மையை தொடர்ந்து காட்டுவது நமக்கு அதிக சந்தோஷத்தை அள்ளித் தரும்.