புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்
‘புரிந்துகொள்ளும் திறமைகளில் முதிர்ச்சியுள்ளவர்கள் ஆகுங்கள்.’ இதுவே செப்டம்பர் 2000-ல் துவங்கும் விசேஷ மாநாட்டு தினத்தின் பொருள். (1 கொ. 14:20) இந்த மாநாட்டை நாம் ஏன் தவறவிடக் கூடாது? ஏனென்றால் திரும்பிய திசையெல்லாம் துன்மார்க்கத்தின் கறைபடிந்திருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். இந்தக் கறை நம்மேல் படிந்துவிடாமல் தப்பிக்க வேண்டுமென்றால் ஆவிக்குரிய புரிந்துகொள்ளும் திறமைகளில் நாம் வளர வேண்டும். அப்போதுதான் தீமையை நன்மையால் வெல்ல முடியும். இதை வெற்றிகரமாக செய்வதற்கு இந்த விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல் நமக்கு உதவும்.
“பைபிளை புரிந்துகொள்வதில் முதிர்ச்சியுள்ளவர்கள் ஆவதற்கு உதவி” என்ற பேச்சை வட்டார ஊழியர் கொடுப்பார். கிறிஸ்தவ விசுவாசத்தில் ஸ்திரப்படுவதற்கான வழியை பற்றி அவர் நம்மிடம் பேசுவார். “பகுத்துணரும் திறமைகளை பயிற்றுவிப்பதன் மூலம் ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சை சிறப்பு பேச்சாளர் அளிப்பார். பைபிள் நியமங்களை நம் வாழ்க்கையில் பொருத்தினால்தான் பகுத்துணரும் திறமைகளை கூர்மையாக்க முடியும் என்பதை அவர் பேச்சிலிருந்து அறிந்துகொள்வோம்.
இளைஞரும்கூட தங்கள் புரிந்துகொள்ளும் திறமைகளை வளர்க்க வேண்டும். “துர்குணத்தில் குழந்தைகளாயிருக்க வேண்டும்—ஏன்?,” “இப்பொழுதே புரிந்துகொள்ளுதலை வளர்க்கும் இளைஞர்கள்” என்ற பேச்சுகளில் இந்த விஷயம் கலந்தாராயப்படும். இந்த பேச்சுகளில், இளைஞர் தங்களை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்திக்கொள்ள என்ன செய்கின்றனர் என்பதை நம்மோடு பகிர்ந்துகொள்வார்கள். அதோடு, இந்த உலகத்தின் பொல்லாத வழிகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்தி, பிரச்சினைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள புரிந்துகொள்ளுதல் எவ்வாறு உதவியது என்பதையும் சொல்வார்கள்.
வாழ்க்கையில் உன்னதமான சந்தோஷத்தை கண்டடைவது எப்படி? “பைபிள் நியமங்களை புரிந்துகொள்ளுதலோடு பொருத்துவதன் மூலம் பயனடையுங்கள்” என்ற கடைசி பேச்சை கொடுக்கும் சிறப்பு பேச்சாளர் இதற்கான பதிலை அளிப்பார். கடவுளுடைய வார்த்தையை நம் வாழ்க்கையில் பொருத்தும்போது பிரச்சினைகளை சமாளிக்கவும், தீர்மானங்களை செய்யவும், யெகோவாவின் போதனையிலிருந்து முழுமையாக பயனடையவும் நமக்கு உதவி கிடைக்கிறது என்பதை உதாரணங்களோடு நமக்கு விளக்குவார்.
இந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற விரும்பும் அனைவரும் தங்கள் சபையின் நடத்தும் கண்காணியிடம் அதை உடனே தெரிவிக்க வேண்டும். விசேஷ மாநாட்டு தினம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்ட உடனே அதை உங்கள் காலண்டரில் குறித்து வையுங்கள். இந்த ஆவிக்குரிய விருந்திலிருந்து முழுமையாக பயனடைய திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்யுங்கள். விசேஷ மாநாட்டு தினத்தில் எந்த பேச்சையும் தவறவிடாமல் அதை முழுமையாக அனுபவியுங்கள்! அப்போது, இந்தப் பொல்லாத உலகில் சகித்திருக்கவும் யெகோவாவுக்கு உண்மையோடு நிலைத்திருக்கவும் தேவையான பலத்தை நீங்கள் பெறுவீர்கள்.