பலப்படுத்தி, கல்வி புகட்டி, செயல்பட தூண்டும் உபகரணங்கள்
1 மக்களுக்கு பைபிளைப் பற்றியும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் கல்வி புகட்டுவதில் அவை அபாரமானவை. அவர்களில் அநேகரை சத்திய பாதையில் உறுதியாய் இருக்கத் தூண்டுவதில் அவை இணையற்றவை. ஏற்கெனவே கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் மதித்துணர்வையும் வளர்த்துள்ளன. எவற்றுக்கு இத்தனை பாராட்டுமழை? யெகோவாவின் அமைப்பு தயாரித்து வெளியிட்டிருக்கும் வீடியோக்களுக்குத்தான்! அந்தப் பத்து வீடியோக்களையும் பார்த்திருக்கிறீர்களா? அவற்றைப் பார்த்தது எப்போது? உங்கள் ஊழியத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறீர்களா? அந்த உன்னதமான உபகரணங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு கூடுதலாக நன்மையடையலாம்?
2 “கடவுளுடைய வார்த்தையை தவறாமல் குடும்பமாக படியுங்கள்” என்ற கட்டுரை, ஜூலை 1, 1999 காவற்கோபுரத்தில் வந்திருந்தது. அதில், “குடும்ப படிப்பு நேரத்திலேயே கொஞ்சத்தை ஒதுக்கி, படிப்பினை அளிக்கும் சங்கத்தின் வீடியோக்க[ளை] . . . [பார்த்து], பிறகு அதைப் பற்றி சிந்திக்கலாம்” என சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இந்த அருமையான ஆலோசனைக்கு இசைய, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஊழியக் கூட்டத்தின்போது இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக விமர்சிக்கப்படும். கூட்டத்தில் அவ்வாறு விமர்சிக்கப்படுவதற்கு முன்னதாகவே சபையார் அனைவரும் இந்த வீடியோக்களை பார்த்துவரும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
3 முதன்முதலாக தயாரிக்கப்பட்ட வீடியோ, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்பது. இந்த வீடியோவே இம்மாதத்தில் விமர்சிக்கப்படும். பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லுமளவுக்கு அதை உன்னிப்பாய் பாருங்கள்:
◼ யெகோவாவின் சாட்சிகள் எதற்கு மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்?
◼ பெத்தேலில் செய்யப்படும் எதுவும் எந்த வசனத்துக்கு இசைவானது?
◼ பிரசுரங்களில் வெளியிடுவதற்காக நடிக்கப்பட்டு, போட்டோ எடுக்கப்பட்டு, சித்திரம் தீட்டப்பட்ட எந்த பைபிள் காட்சியை நீங்கள் கண்டீர்கள்?
◼ நம் பிரசுரங்கள் தயாரிக்கப்படுவதைப் பொறுத்தமட்டில் உங்கள் மனதைக் கவர்ந்த விஷயம் எது?
◼ 1920 முதல் 1990 வரை எத்தனை பிரசுரங்கள் சங்கத்தால் அச்சிடப்பட்டன?
◼ கடவுளுடைய ஜனங்களில் யார் முக்கியமாக பெத்தேல் சேவைக்கான தகுதியைப் பெற உழைக்க வேண்டும்?—நீதி. 20:29.
◼ என்னென்ன வழிகளில் பெத்தேல் குடும்பம் யெகோவாவின் சாட்சிகள் அனைவருக்கும் ஓர் சிறந்த முன்மாதிரி?
◼ நற்செய்தி எத்தனை பேரை எட்ட முடியுமோ, அத்தனை பேரை எட்டுவதற்காக பெத்தேலில் செய்யப்படும் வேலையில், எந்த அம்சம் உங்களைக் கவர்ந்தது?
◼ உலகளாவிய வேலைக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது?
◼ எந்த வேலையை நாம் ஆர்வத்துடன் ஆதரிக்கலாம், என்ன மனப்பான்மையோடு?—யோவான் 4:35; அப். 1:8.
◼ நம் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
◼ இந்த வீடியோவை ஊழியத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம்?
டிசம்பர் மாதத்தில் பைபிள்—திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் என்ற ஆங்கில வீடியோவைப் பற்றி விமர்சிப்போம்.