எந்நாளும் யெகோவாவுக்கு பயப்படுங்கள்
1 “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” (சங். 111:10, NW) இந்தப் பயமே நற்செயல்களை செய்ய நம்மைத் தூண்டுகிறது; தீமையை விட்டு விலகுவதற்கும் உதவுகிறது. (நீதி. 16:6) இது நம்மை படைத்தவரிடம் நமக்குள்ள ஆழ்ந்த பயபக்தியாகும்; இது, அவரை கோபப்படுத்தி விடாமலும், அவரது கட்டளைகளை மீறி விடாமலும் இருக்க செய்கிறது. இந்தப் பயத்தை நாளுக்கு நாள் வளர்ப்பதுடன், எப்பொழுதும் வெளிக்காட்டவும் வேண்டும்.—நீதி. 8:13.
2 நாம் தீமைக்குத் துணைபோகுமாறு சாத்தானிய உலகு நாள்தோறும் நமக்கு தொல்லை தருகிறது. (எபே. 6:11, 12) நம் அபூரண சரீரம் பாவம் செய்யும் தன்மையுள்ளது; தீமையை நாடும் இயல்புள்ளது. (கலா. 5:17) ஆகவே, யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், சந்தோஷமாயிருக்கவும், ஜீவனைப் பெறவும் நாம் எப்பொழுதும் அவருக்கு பயப்பட வேண்டும்.—உபா. 10:12, 13.
3 நாம் வாழும் இந்தக் காலத்தில், ஒருவரையொருவர் “இன்னும் அதிகமாய்” உற்சாகப்படுத்த ஒன்றாய் கூடிவரும்படி எபிரெயர் 10:24, 25 (பொ.மொ.) நம்மை அறிவுறுத்துகிறது. இந்தக் கடைசி நாட்களை தப்பிப்பிழைக்க, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும். கடவுளை விசனப்படுத்தி விடுவோமோ என்ற பயம், கூட்டங்களுக்குச் செல்லவும் அவற்றின் நோக்கத்தை உயர்வாய் மதிக்கவும் நம்மை தூண்டுகிறது. கடவுள் பயமுள்ளவர்கள் கிறிஸ்தவ கூட்டங்களில் பங்கெடுப்பதை தங்கள் பரிசுத்த சிலாக்கியமாகவே நினைக்கிறார்கள்.
4 கடவுள் பயம் நமக்கிருப்பதைக் காட்ட மற்றொரு வழி, ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும்படியான கட்டளைக்குக் கீழ்ப்படிவதாகும். (மத். 28:19, 20; அப். 10:42) இந்தப் பிரசங்க வேலையில் நமக்கு ஒரு முக்கியமான இலக்கு உள்ளது. அது என்னவெனில், மற்றவர்களில் யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தை வளர்த்து, அவருடைய சித்தத்திற்கு இசைய நடக்க அவர்களுக்கு உதவுவதே. இதற்காகவே நாம் மறுசந்திப்பு செய்கிறோம்; எப்படியாவது பைபிள் படிப்புகளை ஆரம்பித்துவிட முயலுகிறோம். அத்துடன், கடவுளுடைய கட்டளைகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு கற்பிக்கிறோம். இவ்வாறு செய்கையில் யெகோவாவிடம் பயத்தையும் அயலாரிடம் அன்பையும் காட்டுகிறோம்.—மத். 22:37-39.
5 கடவுளுக்குப் பயப்படாதவர்கள், ஆவிக்குரிய காரியங்களிடம் மதித்துணரும் மனப்பான்மையை வளர்ப்பதில்லை; மரணத்தை சந்திக்க செய்யும் இவ்வுலகின் காற்றால், அதாவது மனப்பான்மையால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். (எபே. 2:2, NW) நாமோ, “பக்தியோடும் பயத்தோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி” உறுதி பூண்டிருப்போமாக. (எபி. 12:28) இவ்வாறு செய்கையில், எப்பொழுதும் யெகோவாவுக்கு பயப்படுபவர்களுக்கு கிடைக்கவிருக்கும் ஆசீர்வாதங்களை நாமும் பெறுவோம்.