பெற்றோரே—பயனுள்ள பழக்கங்களை பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்
1 நல்ல பழக்க வழக்கங்கள் இயல்பாகவும் வந்துவிடுவதில்லை, தற்செயலாகவும் வந்துவிடுவதில்லை. அதிலும், பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை அறிவுறுத்த வேண்டுமென்றால், அதிக நேரத்தை செலவிட வேண்டும். “அறிவுறுத்து” என்ற வார்த்தையின் அர்த்தம் “படிப்படியாக தெரிவி” அல்லது “துளித்துளியாக விடு” என்பதாகும். ஆகவே, ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் [தங்களுடைய பிள்ளைகளை] வளர்ப்பதற்கு’ பெற்றோர் பங்கில் விடாமுயற்சி தேவை.—எபே. 6:4.
2 குழந்தை பருவத்திலிருந்தே துவங்குங்கள்: புதுப்புது காரியங்களை கற்றுக்கொள்வதிலும் செய்வதிலும் சிறு பிள்ளைகளுக்கு இருக்கும் திறமை நம்மை மலைக்கவைக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு நபர் புது மொழி ஒன்றை கற்றுக்கொள்ள முயலுகிறார் என்றால் அதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது! ஆனால் ஒரு குழந்தை, பள்ளிக்கு செல்வதற்கு முன்பாகவே இரண்டு மூன்று மொழிகளை கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்துவிடுகிறது. அதனால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளும் அளவிற்கு குழந்தைக்கு இன்னும் வயது வரவில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள். பைபிள் சத்தியங்களை சிறுவயதிலேயே ஆரம்பித்து தொடர்ந்து கற்றுக்கொடுத்து வந்தால், “இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க” அறிவால் உங்கள் பிள்ளையின் மனது நிறைந்துவிடும்.—2 தீ. 3:15.
3 வெளி ஊழியத்திற்கு பழக்குங்கள்: குழந்தையின் ஆரம்ப வருடங்களிலேயே கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை தவறாமல் பிரசங்கிக்க பயிற்றுவியுங்கள். ஏனென்றால், இது குழந்தையின் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டிய ஒரு முக்கியமான பயனுள்ள பழக்கம். சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கைக்குழந்தைகளாக இருக்கும்போதே வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு கொண்டுசென்று பயிற்றுவிப்பை துவங்குகின்றனர். ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதில் பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்; இது, ஊழியத்திற்கான போற்றுதலையும் வைராக்கியத்தையும் பிள்ளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எவ்வாறு சாட்சி கொடுப்பது என்பதையும் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்கலாம்.
4 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதும் அவர்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும். நல்ல படிப்புத் திட்டத்தை வைத்திருப்பது, புரிந்து வாசிப்பது போன்ற நல்ல பழக்கங்களை அது கற்றுக்கொடுக்கும். பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கும், மறுசந்திப்புகள் செய்வதற்கும், பைபிள் படிப்புகள் நடத்துவதற்கும் கற்றுக்கொள்வர். இப்படிப்பட்ட பயிற்றுவிப்பு, பயனியர் சேவைக்கும், விசேஷ சிலாக்கியங்களைப் பெறுவதற்கும் உழைக்க அவர்களை தூண்டும். சிறுவயதிலேயே இந்த பள்ளியில் கலந்துகொண்டு அநேக பயனுள்ள பழக்கங்களை வளர்த்துக் கொண்டதை நினைத்து அநேக பெத்தேல் ஊழியர்களும் விசேஷ பயனியர்களும் சந்தோஷப்படுகின்றனர்.
5 மிகப் பெரிய குயவராகிய யெகோவாவின் கைகளில் நாம் களிமண் போன்று இருக்கிறோம். (ஏசா. 64:8) களிமண் எந்தளவுக்கு பதமாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதை வடிவமைப்பதும் எளிது. ஆனால் அது எந்தளவுக்கு காய்ந்து விடுகிறதோ அந்தளவுக்கு கெட்டியாகிவிடும்; அதை வடிவமைப்பது மிகக் கடினம். மனிதர்களும் அப்படித்தான். இளவயதில் அவர்களை எளிதில் வளைத்துவிடலாம். அதனால் குழந்தையின் வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. பிஞ்சு பருவமே அவர்களை வடிவமைக்கும் பருவம். அவர்களை நல்லதற்கும் வடிவமைக்கலாம் கெட்டதற்கும் வடிவமைக்கலாம். அதனால் அக்கறையுள்ள பெற்றோராக, கிறிஸ்தவ ஊழியம் சம்பந்தமான நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயதிலிருந்தே உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.