மற்றவர்களை எப்படி இணங்க வைப்பது
1 ஊழியத்தில் மற்றவர்களை இணங்க வைப்பதில் திறமைசாலி என்பதற்கு அப்போஸ்தலன் பவுல் நன்கு பெயர்பெற்றவர். (அப். 19:26) “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் [“இணங்க வைக்கிறாய்,” NW]” என அகிரிப்பா ராஜாவே அவரிடம் கூறினார். (அப். 26:28) ஊழியத்தில் பவுலுக்கு இணங்க வைக்கும் திறமை இருந்ததாக எப்படி சொல்ல முடியும்? தன் பேச்சைக் கேட்பவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தன் வாதங்களை வேதவசனங்களிலிருந்து படிப்படியாக, நியாயங்காட்டி விளக்கினார்.—அப். 28:23, NW.
2 பவுலைப் போலவே, நாமும் ஊழியத்தில் இணங்க வைக்கும் திறமைசாலிகளாய் இருக்க வேண்டும். எப்படி? மற்றவர்களிடம் பேசுகையிலும், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கையிலும் அவர்கள் மனதிலுள்ளதை புரிந்து நடப்பதன் மூலமே. (நீதி. 16:23, NW) இதற்கு மூன்று முக்கிய படிகள் நமக்கு உதவும்.
3 கவனமாய் செவிசாயுங்கள்: அடுத்தவர் பேசுகையில் காதுகொடுத்து கேளுங்கள். இது உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள கருத்தை அறிய உதவும். ஏதேனும் விஷயத்தில் அவர் ஒத்துப்போகாதபோது அதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முயலுங்கள். அவர் என்ன நம்புகிறார், ஏன் நம்புகிறார், அப்படி உறுதியாக நம்புவதற்கு எது உதவியது என்பவற்றை சரிவர புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவும். (நீதி. 18:13) இத்தகவல்களை அவரிடமிருந்து சாதுரியமாக கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
4 கேள்விகளைக் கேளுங்கள்: ஒருவர் திரித்துவத்தை நம்புவதாக சொல்கையில், “நீங்கள் ஆரம்பத்திலிருந்தே திரித்துவத்தை நம்பி வருகிறீர்களா?” என கேட்கலாம். பின்னர், “இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் குறித்து எப்போதாவது நீங்களே தீர ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா?” என கேட்கலாம். பின்னர், “கடவுள் திரித்துவத்தின் பாகமாக இருந்தால் அதைப் பற்றி பைபிள் நமக்கு தெளிவாக சொல்லும் என நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா?” என்றும் கேட்கலாம். இக்கேள்விகளுக்கு அவர் தரும் பதில்கள், பைபிள் என்ன சொல்கிறது என்பதை அவரிடம் நியாயங்காட்டி பேச உங்களுக்கு உதவும்.
5 சிறந்த நியாயவிவாதத்தை பயன்படுத்துங்கள்: இயேசுவை கடவுள் என நம்பிவந்த பெண்ணிடம், ‘இருவர் சமமாக இருப்பதை விவரிப்பதற்கு எந்த குடும்ப உறவை உதாரணம் காட்டுவீர்கள்?’ என ஒரு சாட்சி கேட்டார். “இரண்டு சகோதரர்களை” என பதிலளித்தாள். “ஒருவேளை ஒரே மாதிரி இருக்கும் இரட்டையரை சொல்லலாம். ஆனால், கடவுளை பிதாவாகவும் தம்மை குமாரனாகவும் ஏற்கும்படி நமக்குக் கற்பிப்பதன் மூலம் இயேசு எதை விளக்கினார்?” என அவர் கேட்டார். ஒருவர் பெரியவர், கூடுதல் அதிகாரமுடையவர் என அதில் புதைந்துள்ள குறிப்பை அந்தப் பெண் புரிந்துகொண்டாள். (மத். 20:23; யோவா. 14:28; 20:17) இணங்க வைக்கும் கலையால் அவளுடைய மனதிலும் இருதயத்திலும் அத்தகவலைப் பதிய வைக்க அவரால் முடிந்தது.
6 எவ்வளவுதான் படிப்படியாக விளக்கினாலும் அது எவ்வளவுதான் திருத்தமானதாக இருந்தாலும் சத்தியத்தை எல்லாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், இணங்க வைக்கும் விதத்தில் ராஜ்ய செய்தியை அளிப்பதில் நாம் பவுலைப் பின்பற்றுவோமாக. இவ்வாறு, நம்முடைய பிராந்தியத்திலுள்ள நல்மனமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் கவனமாய் இருப்போமாக.—அப். 19:8, NW.