பிரசங்கிக்க தூண்டும் அன்பு
1 யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ராஜ்ய செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பது எல்லாருக்கும் தெரிந்ததே. (மத். 24:14) உலகம் முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் சுறுசுறுப்பாக பிரசங்கிக்கின்றனர்; புதியவர்கள் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பிக்கையில், அந்த எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஊழியத்தில் பங்குகொள்வதை வைத்துத்தான் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.
2 சவால் நிறைந்த இந்த ஊழியத்தில் மனமுவந்து ஈடுபட எது நம்மை தூண்டுகிறது? நாம் வற்புறுத்தப்படுவதில்லை, பொருளாதார ஆதாயத்தால் கவரப்படுவதில்லை, விசேஷ பதவியோ பட்டமோ அளித்து கௌரவிக்கப்படுவதில்லை. ஆரம்பத்தில், நம்மை தகுதியற்றவர்களாக கருதியதாலும் நம் செய்திக்கு ஜனங்கள் பெரும்பாலும் செவிசாய்க்காததாலும் நம்மில் பலர் பயப்பட்டோம். (மத். 24:9) இந்த ஊழியத்தில் ஈடுபட எது நம்மை தூண்டுகிறது என்பதை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. விடாமுயற்சியுடன் முன்னேற நிச்சயமாகவே நியாயமான காரணம் இருக்க வேண்டும்.
3 அன்பின் வலிமை: ‘யெகோவாவை முழு இருதயத்துடனும், ஆத்துமாவுடனும், மனதுடனும், பலத்துடனும் நேசிக்க வேண்டும்’ என சொன்னபோது இயேசு கட்டளைகளிலேயே பிரதான கட்டளையை அடையாளம் காட்டினார். (மாற். 12:30, NW) யெகோவா யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான போற்றுதலில் யெகோவாவுக்கான நம் அன்பு ஆழமாக பதிந்திருக்கிறது. அவரே சர்வலோக ஆட்சியாளர், எல்லாவற்றையும் படைத்தவர், ‘மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ள பாத்திரர்.’ (வெளி. 4:11) அவருடைய அருமையான குணங்கள் ஈடிணையற்றவை.—யாத். 34:6, 7.
4 யெகோவாவை அறிந்து அவரை நேசிப்பது மனிதருக்கு முன் நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்க தூண்டுகிறது. (மத். 5:16) நாம் எல்லாருக்கும் முன்பாக அவரை துதிக்கையில், அவருடைய அற்புதமான செயல்களைக் குறித்து பேசுகையில், அவருடைய ராஜ்ய செய்தியை பிரசங்கிக்கையில் நம்முடைய வெளிச்சம் பிரகாசிக்கிறது. வானத்தின் மத்தியிலுள்ள தூதனைப் போலவே நம்மிடமும் ‘சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷம்’ இருக்கிறது. (வெளி. 14:6) நம்முடைய அன்பே உலகளாவிய பிரசங்க வேலையை தூண்டுவிக்கும் சக்தி.
5 இந்த உலகத்தாருக்கு நம் பிரசங்க வேலை, பொருட்படுத்தக்கூடாத ஒன்றாய், ‘பைத்தியமாய்’ தோன்றுகிறது. (1 கொ. 1:18) நம்முடைய ஊழியத்திற்கு முட்டுக்கட்டை வைக்க பெருமளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அப்போஸ்தலர்களைப் போல் பின்வருமாறு சொல்ல உண்மையான அன்பு நம்மை பலப்படுத்தியிருக்கிறது: “நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே . . . மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப். 4:20; 5:29) எதிர்ப்பின் மத்தியிலும் உலகின் மூலைமுடுக்கெங்கும் பிரசங்க வேலை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
6 யெகோவாவிடமுள்ள நம் அன்பு, பற்றி எரிகிற அக்கினியைப் போல் உள்ளது; அது அவருடைய மகிமையான செயல்களை எங்கும் அறிவிக்கும்படி நம்மை தூண்டுகிறது. (எரே. 20:9; 1 பே. 2:9) நாம் தொடர்ந்து ‘அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவிப்போம்; . . . அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்.’—ஏசா. 12:4, 5.