ஏசாயா தீர்க்கதரிசனத்தை படிக்க தயாராகுங்கள்!
1 “உண்மையுள்ள வணக்கத்தார் . . . யெகோவாவை முழுமையாக நம்பலாம். சாத்தானின் உலகை நீடிக்கும்படி அவர் அனுமதிக்க மாட்டார். நீதி தேவைப்படுத்துவதற்கு மேல் ஒருநாள்கூட அனுமதிக்க மாட்டார்.” இது எவ்வளவு உற்சாகமளிக்கும் குறிப்பு! இந்த மேற்கோள் எங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது? ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I புத்தகத்திலிருந்து. அவ்வளவு உற்சாகமளிக்கும் முடிவுக்கு வருவதற்கான காரணத்தை ஏசாயா தீர்க்கதரிசனம் அளிக்கிறதா? ஆம்! அந்த பைபிள் புத்தகத்தில், இரட்சிப்பு என்னும் கருப்பொருள் பலமாகவும் தெளிவாகவும் வலியுறுத்தப்படுகிறது. (ஏசா. 25:9) ஆகவேதான், கடவுளுடைய வார்த்தையின் இந்த பகுதியை சபை புத்தகப் படிப்பில் படிப்பது நமக்கு அதிக உற்சாகமளிப்பதாக இருக்கும். அதை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு வாரமும் நாம் அங்கு இருப்போமா? ஏன் அதில் கலந்துகொள்ள வேண்டும்?
2 ஏசாயா 30:20-ல், யெகோவா நம் ‘மகத்தான போதகர்’ (NW) என்று அழைக்கப்படுகிறார். யெகோவா, தம் வார்த்தையின் மூலமாகவும் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” அளித்துவரும் பைபிள் பிரசுரங்கள் மூலமாகவும் பேசுகையில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கவனமாக கேட்க வேண்டும். (மத். 24:45; ஏசா. 48:17, 18) ஏசாயா தீர்க்கதரிசனம் I புத்தகத்தைப் பொறுத்ததிலும் இது உண்மையாகவே இருக்கிறது. அதைப் படிப்பதிலிருந்து நீங்கள் எப்படி மிகச் சிறந்த விதத்தில் பயனடையலாம்?
3 பங்குகொள்வதற்கு தயாரியுங்கள்: ஒவ்வொரு வாரமும் புத்தகப் படிப்புக்கு தயாரிப்பதற்கென்று போதிய நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க வேண்டிய பகுதியை ஒவ்வொரு பாராவாக வாசியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றையும் குறித்து சிந்தியுங்கள். பதில்களை உங்கள் புத்தகத்தில் குறித்து வையுங்கள். ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள் தடித்த எழுத்துக்களில் போடப்பட்டிருக்கின்றன. அவற்றை கவனமாக வாசியுங்கள். குறிப்பிடப்பட்டுள்ள மற்ற வசனங்களை எடுத்துப் பார்த்து, சிந்திக்கும் விஷயத்துடன் அவற்றிற்குள்ள தொடர்பை கவனியுங்கள். நீங்கள் கற்பவற்றைக் குறித்து தியானியுங்கள். பின்னர் நீங்கள் தயாரித்த விஷயங்களை உங்கள் புத்தகப் படிப்பு தொகுதியினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4 புத்தகப் படிப்பு நடத்தும் சகோதரர், வந்திருக்கும் அனைவரையும் பைபிளை நன்றாக பயன்படுத்தவும் சிந்திக்கப்படும் விஷயத்தின் நடைமுறை பயனை மதித்துணரவும் உதவ வேண்டும். நீங்கள் முதல் பதிலை சொல்பவராக இருந்தால், எளிய, நேரடி பதிலை கொடுங்கள். ஏற்கெனவே ஒருவர் அந்த பதிலை சொல்லிவிட்டால், கலந்தாலோசிக்கும் குறிப்பின் பேரில் விரிவான விளக்கத்தை அளியுங்கள். முக்கியமான ஒரு வசனம் எப்படி அந்த பொருளுக்கு ஆதாரமாக இருக்கிறது என்று ஒருவேளை சொல்லலாம். உங்கள் சொந்த வார்த்தைகளில் பதில் சொல்லி, அந்த கலந்தாலோசிப்பில் பங்கெடுக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
5 ஏசாயா புத்தகத்திலுள்ள மதிப்புமிக்க செய்தியை ஆர்வத்தோடு ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிப்போமாக. யெகோவாவின் இரட்சிப்புக்காக நாள்தோறும் சந்தோஷத்தோடு எதிர்நோக்கியிருக்க அது நமக்கு உற்சாகமளிக்கும்!—ஏசா. 30:18.