ஓய்வு நேரத்துக்கும் ஓர் அளவு வேண்டும்
1 கடினமான இக்காலத்தில் நம் அனைவருக்குமே அவ்வப்போது மாற்றம் தேவை. பொழுதுபோக்கு ஓரளவு நமக்குத் தேவைதான். ஆனால், ஓய்வெடுப்பதிலும் பொழுதுபோக்கிலும் விருந்துக் கூட்டங்களிலும் அதிக நேரத்தை செலவிட்டால், ஆவிக்குரிய காரியங்களுக்கு செலவிடும் நேரம் வரவர குறைந்து போகும் அளவுக்கு ஒருவரை அது மந்தப்படுத்தலாம். நாம் செலவிடும் ஓய்வு நேரத்துக்கும் ஓர் அளவு இருக்க வேண்டும். (மத். 5:3) இது எவ்வாறு முடியும்? எபேசியர் 5:15-17-ல் காணப்படும் புத்திமதியைப் பின்பற்றினால் முடியும்.
2 வரம்பு வையுங்கள்: தாங்கள் ஞானமுள்ளவர்களாய் வாழ்வதற்காக ‘கவனமாய் நடந்துகொள்ள’ வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். உண்மையிலேயே தேவைப்படும் ஓய்வு நேரத்தை மட்டும் செலவிடும் வகையில் அதற்கு ஓர் வரம்பு வைக்க நிதானமும் சுய கட்டுப்பாடும் தேவை. நம் ஓய்வு நேரத்தை எவ்வாறெல்லாம் செலவிடுகிறோம் என்பதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்துவது நல்லது. பொழுதுபோக்கால் ஏதாவது நன்மை ஏற்பட வேண்டும்; அது நம்மை களைப்படையச் செய்யவோ, அல்லது நேரத்தையெல்லாம் வீணடித்துவிட்டோமே என்று வருத்தப்படும்படி செய்யவோ கூடாது. ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஓய்வு நேரத்தை கழித்த பின்னர் வெறுமையுணர்வு, திருப்தியின்மை, குற்றவுணர்வு போன்றவை ஏற்பட்டால், நாம் நேரத்தை செலவிடும் விஷயத்தில் மாற்றம் செய்ய வேண்டியதற்கு அது அறிகுறியாகும்.
3 மதியுள்ளவர்களாய் இருங்கள்: “மதியற்றவர்களாயிராமல்,” வாழ்க்கையின் மிக முக்கிய விஷயங்களுக்கென “காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் [“நேரத்தை விலைக்கு வாங்குங்கள்,” (NW)]” என பவுல் புத்திமதி கூறினார். ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் ஓய்வு நேரத்தை மையமாக வைத்து தங்கள் வாழ்க்கையை ஓட்ட முடியாது. ஓய்வும் இளைப்பாறுதலும் சரீர ரீதியில் நம்மை புத்துணர்ச்சி அடையச் செய்வது உண்மைதான்; ஆனால் நமக்குத் தேவையான ஆவிக்குரிய சக்தியைத் தந்து நம்மை பலப்படுத்துவது யெகோவாவின் கிரியை நடப்பிக்கும் சக்தியே. (ஏசா. 40:29-31) பைபிள் படித்தல், கூட்டங்களுக்குச் செல்லுதல், வெளி ஊழியத்தில் ஈடுபடுதல் ஆகிய தேவராஜ்ய நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆவி அவரிடமிருந்தே நமக்குக் கிடைக்கிறது; பொழுதுபோக்கில் ஈடுபடுவதிலிருந்து கிடைப்பதில்லை.
4 முன்னுரிமை வகுங்கள்: “கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுறுத்தினார். நம் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்தை மையமாக வைத்து செய்யப்படும் வேலைகளுக்கே முன்னுரிமை கொடுக்கும்படி இயேசு கற்பித்தார். (மத். 6:33) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதற்கு ஏற்றவாறு வாழ நமக்கு இடமளிக்கும் காரியங்களை முதலாவது செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதற்குப் பிறகு ஓய்வு நேரத்தை ஓர் அளவுடன் கழிக்கலாம். அவ்வாறு செய்கையில், நல்ல பலன் கிடைக்கும்; அதை இன்னும் அனுபவித்து மகிழ்வோம்.—பிர. 5:12.