நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்
1 யெகோவா தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற நம்முடைய ஆவல் ஆன்மீகக் காரியங்களுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க நம்மைத் தூண்டும். ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதற்கும்’ ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கும்’ அவருடைய வார்த்தை நமக்குப் போதிக்கிறது. (மத். 6:33; பிலி. 1:10, NW) ஆனால், ராஜ்ய அக்கறைகளுக்காக நேரத்தை விலைகொடுத்து வாங்கி, முக்கியமில்லாத மற்ற காரியங்களை இரண்டாவது இடத்தில் வைப்பது எப்படி?—எபே. 5:15-17, NW.
2 ராஜ்ய வேலைகளுக்கு முதலிடம் கொடுங்கள்: தேவையற்ற காரியங்களில் நேரத்தை வீணாக்காதிருக்க அட்டவணை போடுங்கள். சிலர் ஒவ்வொரு மாதமும் ஊழியத்திற்காக குறிப்பிட்ட நேரத்தை முன்கூட்டியே காலண்டரில் குறித்து வைத்துக்கொள்கிறார்கள். அந்த நேரத்தை வேறெந்த வேலைக்கும் செலவழிக்காதபடி கவனமாக இருக்கிறார்கள். அதேபோல் கூட்டங்களுக்கும், தனிப்பட்ட படிப்புக்கும், மாநாடுகளுக்கும், முன்கூட்டியே நாம் நேரத்தைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அநேகர் தினமும் காலையிலோ இராத்திரியிலோ பைபிளைப் படிக்க அட்டவணை போடுகிறார்கள். ஒவ்வொரு முக்கியமான வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மற்ற காரியங்களுக்காக அந்த நேரத்தை அநாவசியமாகச் செலவழிப்பதைத் தவிருங்கள்.—பிர. 3:1; 1 கொ. 14:40.
3 உலக காரியங்களுக்கு வரம்பு வையுங்கள்: சில நாடுகளில் விளையாட்டு, பொழுதுபோக்கு, ஹாபி போன்ற பல நாட்டங்களில் ஜனங்கள் மிக அதிகமாக ஈடுபடுகிறார்கள். டிவி, கம்ப்யூட்டர் முன்பாகவும் அநேகர் எக்கச்சக்கமாக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் இவ்வுலகத்தின் உல்லாச காரியங்களில் மூழ்கிப் போயிருப்பவர்களுக்கும், புதுப்புது சாதனங்களுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கும், நிச்சயம் ஏமாற்றம்தான் மிஞ்சும். (1 யோவா. 2:15-17) எனவே, இவ்வுலகத்தை முழுமையாக அனுபவிக்காமல் இருக்குமாறு பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. (1 கொ. 7:31) இந்த ஞானமான அறிவுரைக்குச் செவிசாய்ப்பதன் மூலம் யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் தருகிறீர்கள் என்பதை நீங்கள் அவருக்கு காட்டலாம்.—மத். 6:19-21.
4 இந்த உலகிற்கு எஞ்சியிருக்கும் காலம் மிகக் குறைவு. ராஜ்ய வேலைகளுக்கு முதலிடம் தருகிறவர்களே சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் கடவுளுடைய தயவைப் பெறுவார்கள். (நீதி. 8:32-35; யாக். 1:25) எனவே, நமக்கிருக்கும் பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவோமாக.