யெகோவாவின் அன்புக்கு நன்றி காட்டுவதன் ஆசீர்வாதங்கள் —பகுதி 2
1 இதே தலைப்பில் வெளிவந்த கடந்த மாத கட்டுரையில், ஊழியத்தில் யெகோவாவின் அன்புக்கு நம் நன்றியை நான்கு வழிகளில் காட்டலாம் என்று சிந்தித்தோம். (1 யோ. 4:9-11) இந்தக் கட்டுரையிலோ, இதைச் செய்யும் இன்னும் ஐந்து வழிகளைப் பற்றி சிந்திப்போம். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களுக்கு உதவ முழுமையாக ஈடுபடுகையில் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
2 சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல்: நீதிக்காக பசிதாகமுள்ளவர்களை கண்டுபிடித்து பயனுள்ள பிரசுரங்களை அவர்களுக்கு அளிக்க இது ஒரு திறம்பட்ட வழியாகும். நாம் ‘வாய்ப்பான நேரத்தை வாங்கி,’ எல்லா சந்தர்ப்பங்களிலும் யாரை சந்தித்தாலும் சாட்சி கொடுப்பது பயன் தரும். (எபே. 5:16, NW) இம்முறையில் சாட்சி கொடுக்க நாம் தைரியத்தை ஒன்று திரட்ட வேண்டியிருக்கலாம்; ஆனால், கடவுளின் அன்பையும் ஜனங்களின் தேவைகளையும் நாம் மதித்துணர்ந்தால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாட்சி கொடுப்போம்.—2 தீ. 1:7, 8.
3 தன்னுடன் டாக்ஸியில் பயணித்த ஒருவருடன் உரையாடலை ஆரம்பித்ததால் அருமையான பலனைப் பெற்றார் ஒரு முழுநேர ஊழியர். அந்தப் பயணி ஆர்வம் காட்டினார். மறுசந்திப்புகள் செய்யப்பட்டு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அவர் சத்தியத்திற்கு வந்ததுடன் ஒரு மூப்பராகும் அளவுக்கு நன்கு முன்னேற்றம் செய்தார்!
4 கடிதங்கள் எழுதுதல்: ஒருவேளை சுகவீனமடைகையிலோ, சீதோஷ்ணநிலை காரணமாகவோ நம்மால் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நமக்குத் தெரிந்தவர்களுக்கும், தங்களுக்குப் பிரியமானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்களுக்கும், ஊழியம் செய்த பிராந்தியத்தில் வீட்டில் சந்திக்க முடியாமல் போனவர்களுக்கும் கடிதங்கள் எழுதி, தபால் மூலம் சுருக்கமாக சாட்சி கொடுக்கலாம். அத்துடன், உள்ளத்தைத் தொடும் இயல்புடைய, பைபிள் சார்ந்த செய்தியுடையதும், வாசகர்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்க உற்சாகப்படுத்துவதுமான, பொருத்தமான நம் துண்டுப்பிரதிகளில் ஒன்றையும் சேர்த்து அனுப்பலாம். பதிலுக்காக உங்கள் முகவரியை அல்லது ராஜ்ய மன்றத்தின் முகவரியை மட்டுமே கொடுங்கள்; தயவுசெய்து கிளை அலுவலகத்தின் முகவரியை கொடுக்காதீர்கள்.
5 டெலிஃபோனில் சாட்சி கொடுத்தல்: வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்திக்க முடியாதவர்களை ‘சந்திக்க’ இது ஓர் அருமையான வழியாகும். கனிவு, சாதுரியம், திறமை ஆகியவற்றுடன் விவேகத்தோடு நாம் சாட்சி கொடுத்தால் இம்முறையில் மிகச் சிறந்த பலனைப் பெறலாம். இதற்கு, நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 2001, பக்கங்கள் 5-6-ல் நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
6 ஒரு சகோதரி டெலிஃபோனில் சாட்சி கொடுக்கையில், தனக்கும் தன் குடும்பத்திற்கும் எதிர்காலம் எப்படியிருக்கும் என ஆழ்ந்து சிந்தித்ததுண்டா என்பதாக ஒரு பெண்ணிடம் கேட்டார்கள். சிந்தித்ததுண்டு என அந்தப் பெண் கூறினாள். மனக்கசப்பால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவள் மனம் விட்டுச் சொன்னாள். அந்த சகோதரியின் உண்மையான கரிசனை நெஞ்சை தொட்டதால், அருகிலிருந்த மார்க்கெட்டில் சந்திக்க சம்மதித்தாள். இதன் பயனாக, பைபிள் படிப்பை உடனே ஏற்றுக்கொண்டாள்!
7 புதியவர்களை வரவேற்றல்: அயலாரை நேசித்தால், நம் கூட்டத்திற்கு புதியவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா என நோட்டமிடுவோம்; தனக்கு நல்ல உபசரிப்பு கிடைத்ததாக அவர் உணருமாறு வரவேற்போம். (ரோ. 15:7, NW) தன் ஆன்மீக நலனில் உள்ளப்பூர்வ அக்கறை காட்டுபவர்களின் மத்தியில் இருப்பதை அவர் காணட்டும். நாம் உண்மையான அக்கறையைக் காட்டுவதும், பைபிள் படிப்பு ஏற்பாட்டைச் சொல்வதும் நம் உதவியை ஏற்றுக்கொள்ள அவரைத் தூண்டலாம்.
8 நம் நல்நடத்தை: நம் நல்நடத்தையால் சத்தியத்தை அலங்கரிக்கிறோம். (தீத். 2:9, 10) யெகோவாவின் சாட்சிகளாக, நம்மை உலகத்தார் பாராட்டிப் பேசும்போது நம் கடவுளுக்கே அவர்கள் கனம் சேர்க்கின்றனர். (1 பே. 2:12) இதுவும் மற்றவர்கள் ஜீவ பாதையில் நடக்க ஆரம்பிப்பதற்கு வழி செய்யலாம்.
9 யெகோவாவின் தலைசிறந்த அன்புக்கு நன்றி காட்டுவதற்கான இந்த ஐந்து வழிகளையும் கலந்தாலோசித்து, அவற்றை பின்பற்றினால் என்ன? (1 யோ. 4:16) அவ்வாறு செய்கையில், அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.