பாதுகாத்திடுங்கள்
வெளி ஊழியத்திற்கான மாதிரி அளிப்புகள்
இந்த உட்சேர்க்கையை உபயோகிக்கும் விதம்
பின்வரும் அளிப்புகளில் பெரும்பாலானவை முந்தைய நம் ராஜ்ய ஊழிய பிரதிகளில் வெளிவந்தவை. நீங்கள் விரும்புகிறவற்றை ஊழியத்தில் பயன்படுத்தி, கிடைக்கும் பலன்களை கவனியுங்கள். ஊழியத்திற்காக தயாரிக்கையில் எடுத்து பார்ப்பதற்கு வசதியாக இந்த உட்சேர்க்கையை பாதுகாத்து வையுங்கள்.
உங்கள் செய்தி சுருக்கமாக இருந்தால் கடவுளுடைய வார்த்தையிடம் ஒருவரின் ஆர்வத்தை தூண்ட முடியும். குறிப்பான ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு சுருக்கமாக பதிலளிக்கும் வசனத்தை வாசியுங்கள். பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்:
“எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கையில் நம்பிக்கையோடு இருக்கிறீர்களா? அல்லது நம்பிக்கையிழந்து இருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இன்று நாம் காணும், மனதை கலங்க வைக்கும் சம்பவங்களையும் இவையெல்லாம் எதில் போய் முடிவடையும் என்பதையும் பைபிள் முன்னறிவித்தது.”—2 தீ. 3:1, 2, 5; நீதி. 2:21, 22.
“இப்பொழுதெல்லாம் ஆரோக்கியத்தைப் பற்றி அனைவருமே அதிக கவலைப்படுகிறார்கள். சுகவீனங்கள் எல்லாவற்றையும் நிரந்தரமாக நீக்கப்போவதாக கடவுள் வாக்குக் கொடுத்திருப்பது உங்களுக்கு தெரியுமா?”—ஏசா. 33:24; வெளி. 21:3, 4.
“கடைசியில், முழு உலகத்தையும் ஓர் அரசாங்கமே ஆளுகை செய்யுமென பைபிள் முன்னறிவித்திருப்பது உங்களுக்கு தெரியுமா?”—தானி. 2:44; மத். 6:9, 10.
“இயேசு கிறிஸ்து பூமியை ஆட்சி செய்தால் நிலைமைகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”—சங். 72:7, 8.
ஓர் இந்துவிடம்: “உங்கள் மதமே உங்களுக்கு மிக முக்கியம். ஆனால், நாம் இருவருமே சமாதானத்தோடு வாழ விரும்புகிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். இந்த பூமியில் சமாதானம் நிலவுவதை உங்களால் பார்க்க முடிகிறதா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] துன்மார்க்கம் நீக்கப்பட்டால் சமாதானம் இருக்க வேண்டும். தயவுசெய்து இந்த பரிசுத்த புத்தகத்திலுள்ள வாக்குறுதியை கவனியுங்கள்.”—சங். 46:9; 72:7, 8.
“பிரச்சினைகளையே கேட்டு கேட்டு அநேகருக்கு அலுத்துப்போய்விட்டது. அதை தீர்க்கும் வழிகளைப் பற்றி கேட்டறிய விரும்புகிறார்கள். ஆனால், நம் பிரச்சினைகளை யாரால் உண்மையில் தீர்க்க முடியும்?”—2 தீ. 3:16, 17.
ஒரு முகமதியரிடம்: “நம் பின்னணி என்னவாக இருந்தாலும் ஒரே விதமான பல பிரச்சினைகளையே இன்றைய உலகில் நாம் அனைவரும் சந்திக்கிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இந்த சந்ததி எதிர்ப்படும் பெரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆபிரகாமின் வித்துவின் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.”—ஆதி. 22:18.
“மதம், நிறம் அல்லது ஆண், பெண் என்ற வித்தியாசங்களால் அநேகர் துன்பத்துக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட தப்பெண்ணங்களை கடவுள் எப்படி கருதுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”—அப். 10:34, 35.
உரையாடல்களை ஆரம்பிக்க
பின்வரும் கேள்விகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை. பதில்கள் காணப்படும் பக்கத்தின் எண்கள் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன:
நாம் ஏன் வயோதிபராகி மரிக்கிறோம்? (98)
மரித்தோரின் நிலைமை என்ன? (100)
கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா? (145)
மனிதராகிய நமக்கு நடப்பவற்றைக் குறித்துக் கடவுள் உண்மையில் அக்கறைகொள்கிறாரா? (147)
கடவுள் உண்மையான ஓர் ஆளா? (147)
நல்ல ஆட்கள் எல்லாரும் பரலோகத்துக்குச் செல்கிறார்களா? (162)
உண்மையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்க ஒருவன் பரலோகத்துக்குச் செல்ல வேண்டுமா? (162)
கடவுளுடைய சொந்த பெயரை அறிவதும் பயன்படுத்துவதும் ஏன் முக்கியம்? (197)
இயேசு கிறிஸ்து உண்மையில் கடவுளா? (212)
கடவுளுடைய ராஜ்யம் நிறைவேற்றவிருப்பவை என்ன? (227)
மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? (244)
திருமணத்தை மேம்பாடடைய செய்வதற்கு எது உதவிசெய்யும்? (253)
எல்லா மதங்களும் கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவையா? (322)
எந்த மதம் சரியென ஒருவன் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? (328)
இன்றைய உலகத்தில் சாத்தான் எத்தகைய வல்லமைவாய்ந்த ஆள்? (364)
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? (394)
பொல்லாங்கு அவ்வளவு அதிகம் இருந்துவருவதேன்? (427)
இந்த உலகத்தை ஆளுகிறவர் யார்—கடவுளா சாத்தானா? (436)
தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிப்பதற்கான ஆலோசனைகள்
“அநேகருக்கு கடவுளில் நம்பிக்கை இருப்பதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள். கடவுளில் நம்பிக்கை வைக்கும் அனைவரும், அவர் நம்மிடம் சிலவற்றை எதிர்பார்ப்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், கடவுள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை பற்றியே மக்கள் ஒப்புக்கொள்வது கிடையாது.” பிறகு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, முதல் பாடத்திற்கு திருப்பி அதை கலந்தாலோசியுங்கள்.
“இன்றைய குடும்ப வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் தலைதூக்குவதால் குடும்ப மகிழ்ச்சியை பெறுவதற்கான இரகசியம் என்ன என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” பதில் சொன்ன பிறகு, குடும்ப மகிழ்ச்சியின் உண்மையான இரகசியத்தை பைபிளில் கடவுள் வெளிப்படுத்துகிறார் என்பதை விளக்குங்கள். ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள். அதற்குப் பிறகு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 8-ம் பாடத்திற்கு திருப்பி, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பத்தக்க வழிநடத்துதலை அளிக்கிற இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வசனங்களில் சிலவற்றை சுட்டிக்காட்டுங்கள். பாடத்தின் துவக்கத்திலுள்ள கேள்விகளை வாசியுங்கள். அந்த நபர் பதில்களை வாசித்து அறிந்துகொள்ள விரும்புகிறாரா என்று கேளுங்கள்.
“இந்தச் சிற்றேட்டில், பைபிளின் அடிப்படை போதனைகளை உள்ளடக்கிய விலாவாரியான பைபிள் படிப்பு முறை உள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும், பல நூற்றாண்டுகளாக மக்களை திணறடித்திருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?” 5-ம் பாடத்திற்கு திருப்பி, அதன் ஆரம்பத்திலுள்ள கேள்விகளை வாசியுங்கள். வீட்டுக்காரருக்கு எதில் மிகவும் ஆர்வம் என அவரிடமே கேட்டு, பின் அதற்குரிய பாராவை அல்லது பாராக்களை வாசித்து அதிலுள்ள பொருத்தமான வசனங்களை எடுத்துப்பாருங்கள். மற்ற கேள்விகளுக்கும் இதைப் போன்றே திருப்தியான பதில்களை எளிதில் கண்டுபிடிக்கலாம் என விளக்குங்கள். அடுத்த கேள்வியை கலந்தாலோசிக்க மீண்டும் வருவதாக சொல்லுங்கள்.
“இன்று பள்ளிகளில் நிகழும் வன்முறைகளுக்கு காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பெற்றோர் சரிவர பயிற்றுவிக்காததே காரணமா? அல்லது பிசாசின் செல்வாக்கு போன்ற வேறு காரணம் இருக்கக்கூடுமா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பிசாசின் செல்வாக்கு என அவர் சொன்னால், வெளிப்படுத்துதல் 12:9, 12-ஐ வாசியுங்கள். இவ்வுலகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் பிசாசின் பங்கை குறிப்பிடுங்கள். பின்பு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 4-க்கு திருப்பி, பிசாசு எங்கிருந்து வந்தான் என அவர் எப்போதாவது யோசித்திருக்கிறாரா என்று கேளுங்கள். பின்பு முதல் இரண்டு பாராக்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். பள்ளிகளில் நடக்கும் வன்முறைகளுக்கு “பெற்றோரின் பயிற்றுவிப்பு இல்லாததே” காரணம் என அவர் சொன்னால், 2 தீமோத்தேயு 3:1-3-ஐ வாசித்து இந்த பிரச்சினைகளுக்கு காரணமாயிருக்கும் குணங்களை சுட்டிக்காட்டுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பாடம் 8-க்கு திருப்பி, பாரா 5-ஐ வாசித்து கலந்தாலோசிப்பை தொடருங்கள்.
“வெற்றிகரமான குடும்பத்தைக் கட்டியமைக்க நமக்கு தேவைப்படும் அறிவை சிருஷ்டிகர் கொடுப்பார் என எதிர்பார்ப்பது நியாயமானதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் சொன்ன பிறகு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை காட்டுங்கள். 8-வது பாடத்திற்கு திருப்பி குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தேவையான பைபிள் நியமங்கள் அதில் இருப்பதை விளக்குங்கள். சிற்றேட்டிலிருந்து மிகச் சிறந்த நன்மை பெற பைபிளோடு சேர்த்து அதை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை செய்துகாட்டுவதாக சொல்லுங்கள்.
“இன்று வாழ்க்கையில் நாம் அநேக பிரச்சினைகளை சந்திப்பதால் ஜெபம் உண்மையிலேயே நமக்கு உதவியளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] ஜெபிப்பது தங்களுக்கு மன வலிமையை தருவதாக பலர் கூறுகின்றனர். [பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.] இருந்தாலும், தன் ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை என்று ஒருவர் உணரலாம். [தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 7-க்கு திருப்புங்கள்.] ஜெபத்தினால் நாம் எவ்வாறு மிகுந்த நன்மை அடையலாம் என்பதை இந்த சிற்றேடு விளக்குகிறது.”
“ஒரே ஒரு பைபிள் மட்டுமே இருக்கையில் கிறிஸ்தவ மதத்தில் ஏன் இத்தனை அநேக வித்தியாசங்கள் உள்ளன என்பதைப் பற்றி அயலகத்தாரிடம் பேசி வருகிறோம். இத்தனை குழப்பங்கள் நிலவ காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 13-ம் பாடத்திற்கு திருப்பி ஆரம்பத்திலுள்ள கேள்விகளை வாசியுங்கள்.] இந்தப் பாடத்தை வாசித்தால் அந்தக் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை பெறுவீர்கள்.”
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஒருவரிடம் கொடுத்த பிறகு ஒரு சிற்றேட்டிலிருந்து ஒரு சிறிய பாராவை வாசித்துக் காட்டலாமா என்று கேளுங்கள். அனுமதிக்கப்பட்டால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 5-க்கு திருப்புங்கள். பாடத்தின் ஆரம்பத்திலுள்ள கேள்விகளுக்கு கவனத்தை திருப்பி, முதல் பாராவை வாசிக்கையில் முதல் கேள்விக்கான பதிலை கவனிக்கும்படி கூறுங்கள். பாராவை வாசித்த பிறகு கேள்வியை கேட்டு பதில் சொல்ல அனுமதியுங்கள். சிற்றேட்டை அளியுங்கள்; ஏற்றுக்கொண்டால், அடுத்த இரண்டு கேள்விகளுக்கான அவருடைய பதிலை தெரிந்துகொள்ள மறுபடியும் வருவதாக சொல்லி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
அறிவு புத்தகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகள்
பைபிளை கையில் வைத்துக்கொண்டு இவ்வாறு ஆரம்பியுங்கள்: “இந்த தெருவில் இருப்பவர்களிடம் ஒரு பைபிள் வசனத்தைக் காட்டுகிறோம். அது சொல்வதாவது . . . ” யோவான் 17:3-ஐ வாசித்து, “திருத்தமான அறிவு நமக்கிருந்தால் என்ன கிடைக்கும் என்ற வாக்குறுதியை கவனித்தீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அந்த அறிவை ஒருவர் எங்கே பெற முடியும்?” பதிலளித்த பிறகு அறிவு புத்தகத்தை காட்டி இவ்வாறு கூறுங்கள்: “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை பெற இந்த புத்தகம் உதவுகிறது. பைபிளைப் பற்றி மக்களுக்கிருக்கும் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் உதவுகிறது.” பொருளடக்கத்தை காண்பித்து, அந்தத் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி அவர் எப்போதாவது யோசித்திருக்கிறாரா என்று கேளுங்கள்.
“நம்மை சுற்றிலும் நிகழும் அல்லது நாமே எதிர்ப்படும் அநியாயத்தையும் துன்பத்தையும் பற்றி கடவுளுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுளுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்றும் துன்பப்படும் சமயங்களில் நமக்கு உதவுவார் என்றும் பைபிள் உறுதியளிக்கிறது.” சங்கீதம் 72:12-17-ல் சில பகுதிகளை வாசியுங்கள். அறிவு புத்தகத்தில் 8-ம் அதிகாரத்திற்கு திறந்து, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்று லட்சக்கணக்கானோர் கேட்டிருக்கும் கேள்விக்கு அது ஆறுதலான பதிலை தருகிறது என குறிப்பிடுங்கள். கூடுமானால், பாராக்கள் 3 முதல் 5-ல் சிந்திக்கப்பட்டுள்ள வேதப்பூர்வ கருத்துக்களில் சிலவற்றை கலந்தாலோசியுங்கள், அல்லது மறுசந்திப்பில் அவ்வாறு செய்யுங்கள்.
“நம்மில் அநேகர் அன்பானவர்களை மரணத்தில் இழந்திருக்கிறோம். அவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இறந்த அன்பானவர்களை மரணத்திலிருந்து மீட்க முடியும் என்பதை இயேசு நிரூபித்தார். [யோவான் 11:11, 25, 44-ஐ வாசியுங்கள்.] இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தபோதிலும், எதிர்காலத்தில் செய்யப்போவதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை இது நிரூபிக்கிறது.” அறிவு புத்தகத்தை பக்கம் 85-ல் உள்ள படத்திற்கு திருப்பி அதிலுள்ள படக்குறிப்பை வாசியுங்கள். பிறகு பக்கம் 86-ல் உள்ள படத்தைக் காட்டி, அதைப் பற்றி குறிப்பு சொல்லுங்கள். “மனிதர்கள் ஏன் வயதாகி, மரிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறீர்களா?” என்று கேட்டு அடுத்த சந்திப்பிற்கான அஸ்திவாரத்தை போடுங்கள். மறுபடியும் செல்கையில் அதிகாரம் 6-ஐ சிந்தியுங்கள்.
“மனிதர்கள் நீண்ட காலம் வாழ ஏன் ஆசைப்படுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” பதில் சொன்ன பிறகு, அறிவு புத்தகத்தில் 6-ம் அதிகாரத்திற்கு திருப்பி 3-வது பாராவை வாசியுங்கள். இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வசனங்களை விளக்குங்கள். பாராவின் கடைசியில் உள்ள இரண்டு கேள்விகளையும் சுட்டிக்காட்டி பதில்களை அறிந்துகொள்ள விரும்புகிறாரா என்று கேளுங்கள். அவருக்கு விருப்பம் இருந்தால் அடுத்த சில பாராக்களை கலந்து பேசுங்கள்.
“இதை நம்புகிறார்களா என ஜனங்களிடம் கேட்கிறோம் . . . ” என்று சொல்லிவிட்டு ஆதியாகமம் 1:1-ஐ வாசித்து, “நீங்கள் இந்த வசனத்தில் உள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா?” என்று கேளுங்கள். அவர் ஒத்துக்கொண்டால் இவ்வாறு கூறுங்கள்: “நானும் இதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் கடவுளே படைத்திருப்பதால் துன்மார்க்கத்திற்கும் அவரே காரணர் என நீங்கள் நினைக்கிறீர்களா?” அவர் என்ன பதிலளிக்கிறார் என்பதை கேட்ட பிறகு பிரசங்கி 7:29-ஐ வாசியுங்கள். அறிவு புத்தகத்தில் 8-ம் அதிகாரத்தை திறந்து 2-ம் பாராவை வாசியுங்கள். ஆதியாகமம் 1:1-ஐ அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் சிருஷ்டிகர் இருப்பதற்கான அத்தாட்சியை ஆராய்ந்து பார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.—நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 84-6-ஐக் காண்க.
“இன்று ஒழுக்க தராதரங்கள் படுவேகமாக மாறிவருவதால் நம்பகமான வழிநடத்துதல் தேவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் மிகவும் பழமையான புத்தகம் என்றாலும் நவீன வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான குடும்பத்திற்கும் தேவையான, நடைமுறையான ஆலோசனைகளை கொடுக்கிறது.” பிறகு அறிவு புத்தகத்தில் 2-ம் அதிகாரத்திற்கு திருப்பி, 2 தீமோத்தேயு 3:16, 17 உட்பட பாரா 10-ஐயும் பாரா 11-ல் முதல் வாக்கியத்தையும் வாசியுங்கள்.
“எதிர்காலத்தில் இந்தப் பூமிக்கும் நமக்கும் என்ன சம்பவிக்கும் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நம்முடைய மொத்த எதிர்காலத்தையும் பரதீஸ் என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிடுகிறது பைபிள்! முதல் மானிட ஜோடியை கடவுள் படைத்தபோது அவர்களை பரதீஸில்தான் குடி வைத்தார். அது எப்படி இருந்திருக்கும் என்ற விவரிப்பை கவனியுங்கள்.” அறிவு புத்தகத்தில் 8-ம் பக்கத்திற்கு திருப்பி, “பரதீஸில் வாழ்க்கை” என்ற உபதலைப்பின்கீழ் 9-ம் பாராவை வாசியுங்கள். பிறகு 10-ம் பாராவில் உள்ள குறிப்புகளை கலந்தாராய்ந்து, இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள ஏசாயா 55:10, 11-ஐ வாசியுங்கள். திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பாராக்கள் 11-16-ல் உள்ளவற்றை தொடர்ந்து கலந்தாலோசிக்க விரும்புவதாக கூறுங்கள்.
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்திக்கையில் நீங்கள் இவ்வாறு கூறலாம்:
“போனமுறை உங்களை சந்தித்தபோது காவற்கோபுரம் பத்திரிகையை கொடுத்துவிட்டுச் சென்றேன். அந்த பத்திரிகையின் முழு தலைப்பு, காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதை ஒருவேளை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்த ராஜ்யம் என்ன, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை இன்று விளக்க விரும்புகிறேன்.” பின்பு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை 6-ம் பாடத்திற்கு திருப்பி, வீட்டுக்காரரின் வசதியைப் பொருத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாராக்களை வாசித்து கலந்தாலோசியுங்கள்.
“சமீபத்தில் நான் உங்களை சந்தித்து, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கொடுத்துச் சென்றேன். இந்தப் பத்திரிகைகள், பைபிளுக்கும் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட அதன் வழிநடத்துதலுக்கும் மக்களிடமுள்ள மரியாதையை அதிகரிக்கின்றன. கடவுளுடைய வார்த்தையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம் என்று நான் நினைப்பதால், அதற்கு உதவும் ஒன்றை உங்களுக்குக் காட்டுவதற்காக மீண்டும் வந்தேன்.” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை காட்டி பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பழைய 192-பக்க புத்தகங்களை அளிக்கையில் இந்த அளிப்பை முயன்று பாருங்கள்:
“தரமான கல்விக்கு இன்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில் மிக அதிக சந்தோஷத்தையும் வெற்றியையும் காண ஒருவர் என்ன வகையான கல்வியை பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள். பிறகு நீதிமொழிகள் 9:10, 11-ஐ வாசியுங்கள்.] கையடக்கமான இந்தப் புத்தகம் [அப்புத்தகத்தின் தலைப்பைக் கூறுங்கள்] பைபிளின் அடிப்படையிலானது. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவின் ஒரே ஊற்றுமூலத்தை இது சுட்டிக்காட்டுகிறது.” புத்தகத்திலுள்ள குறிப்பான ஒரு உதாரணத்தைக் காண்பித்து, அதை வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.
மற்ற பிரசுரங்கள்
கூடுதலான புத்தகங்கள், சிற்றேடுகளுக்கான அளிப்புகளை உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல் பின்வரும் தலைப்பின்கீழ் காணலாம்:
Presentations (பிரசங்கங்கள்)
List by Publication
நேரடி அணுகுமுறை
பைபிள் படிப்பை ஆரம்பிக்க பின்வரும் நேரடி அணுகு முறைகளில் ஒன்றை முயன்று பாருங்கள்:
“சில நிமிடங்களுக்குள்ளாக ஒரு முக்கிய பைபிள் கேள்விக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியுமென்பது உங்களுக்கு தெரியுமா? உதாரணமாக, . . . ” பிறகு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலுள்ள ஒரு பாடத்தின் ஆரம்பத்தில் உள்ள, அந்த நபரின் ஆர்வத்தை தூண்டும் என நீங்கள் கருதுகிற ஒரு கேள்வியை கேளுங்கள்.
“இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்கும் திட்டத்தை உங்களுக்கு காண்பிக்கவே உங்கள் வீட்டிற்கு வந்தேன். அதை செய்து காட்டுவதற்கு ஐந்து நிமிடம் போதும். உங்களால் ஐந்து நிமிடத்தை ஒதுக்க முடியுமா?” ஒப்புக்கொண்டால், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் உள்ள பாடம் 1-ஐ உபயோகித்து படிப்பை நடத்தி காட்டுங்கள். தெரிவு செய்த ஓரிரண்டு வசனங்களை மட்டும் வாசியுங்கள். பிறகு இவ்வாறு கேளுங்கள்: “அடுத்த பாடத்தை படிக்க சுமார் 15 நிமிடங்களே ஆகும்; அதற்காக எப்போது உங்களால் நேரத்தை ஒதுக்க முடியும்?”
“இன்று அநேகரிடம் பைபிள் உள்ளது, ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நம் அனைவருக்குமே இருக்கும் கேள்விகளுக்கு அதில் பதில் இருப்பதை அவர்கள் அறிவதில்லை. வாரத்தில் சுமார் ஒரு மணிநேரம் ஒதுக்கினால் இந்தப் பிரசுரத்திலிருந்து [தேவைப்படுத்துகிறார் சிற்றேடு அல்லது அறிவு புத்தகம்] அடிப்படை பைபிள் சத்தியத்தை சில மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம். எப்படி படிப்பு நடத்துகிறோம் என்பதை உங்களுக்கு செய்துகாட்ட விரும்புகிறேன்.”
“உங்களுக்கு பைபிளை இலவசமாய் கற்றுக்கொடுக்க நான் தயார். நீங்கள் அனுமதித்தால், சுமார் 200 நாடுகளில் ஆட்கள் எவ்வாறு முழு குடும்பங்களாக வீட்டிலேயே பைபிளை கலந்தாலோசிக்கிறார்கள் என்பதை சில நிமிடங்களில் செய்துகாட்ட விரும்புகிறேன். இந்தத் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை கலந்தாலோசிப்பதற்கு பயன்படுத்தலாம். [அறிவு புத்தகத்தின் பொருளடக்கத்தை காண்பியுங்கள்.] எதைப் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?” அந்த நபர் தெரிவு செய்யும்வரை காத்திருங்கள். தெரிவு செய்யப்பட்ட அதிகாரத்திற்கு திருப்பி, முதல் பாராவிலிருந்து படிப்பைத் தொடங்குங்கள்.
“நான் இலவசமாக பைபிள் பாடங்களை நடத்துகிறேன், இன்னும் புதிய ஆட்களை சேர்த்துக்கொள்ள என் அட்டவணையில் இடம் உள்ளது. பைபிள் படிப்புக்கு இந்த புத்தகத்தைத்தான் உபயோகிக்கிறோம். [அறிவு புத்தகத்தைக் காண்பியுங்கள்.] இதை படித்து முடிக்க சில மாதங்கள்தான் ஆகும்; அதோடு, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்? இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது? நாம் எவ்வாறு கடவுளிடம் நெருங்கி வரலாம்? போன்ற கேள்விகளுக்கு பதில்களும் கிடைக்கும். ஒரு பாடத்தை சேர்ந்து படிப்போமா?”
ஆர்வத்தை தூண்டுவதில் பலன் தரும் பிரசங்கம் ஒன்றை நீங்கள் கண்டறிந்தால் அதை தொடர்ந்து உபயோகியுங்கள்! தற்போதைய அளிப்பிற்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.