பெற்றோரே—சிசுப்பருவம் முதல் உங்கள் பிள்ளைகளை பயிற்றுவியுங்கள்
1 “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதி. 22:6) பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் சத்திய பாதையை ‘விடாதிருக்க’ வேண்டுமானால் அந்தப் பயிற்சியை எப்போது ஆரம்பிக்க வேண்டும்? சிசுப்பருவத்திலிருந்தே!
2 தீமோத்தேயு ஆவிக்குரிய கல்வியை “சிசுப்பருவம்” முதல் பெற்றதாக பவுல் கூறியபோது குழந்தை பருவத்தையே அவர் குறிப்பிட்டார் என்பது தெளிவாகிறது. (2 தீ. 3:14, 15, NW) அதன் விளைவாக தீமோத்தேயு அருமையான ஆவிக்குரிய நபரானார். (பிலி. 2:19-22) பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் ‘யெகோவாவோடு வளர’ தேவையான பயிற்சியை நீங்களும் “சிசுப்பருவம்” முதல் கொடுக்க வேண்டும்.—1 சா. 2:21, NW.
3 அவர்கள் வளர தேவையான தண்ணீரை பாய்ச்சுங்கள்: இளங்கன்றுகள் கம்பீரமான மரங்களாக வளர அவற்றிற்கு தொடர்ந்து தண்ணீர் தேவை. அதைப் போலவே, எல்லா வயது பிள்ளைகளும் கடவுளுடைய முதிர்ச்சியுள்ள ஊழியர்களாக வளர பைபிள் சத்தியம் என்ற தண்ணீர் அதிகமாக தேவை. பிள்ளைகளுக்கு சத்தியத்தை கற்றுக்கொடுத்து, யெகோவாவோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள உதவும் முக்கிய வழி தவறாமல் நடத்தப்படும் குடும்ப பைபிள் படிப்பே. ஆனால் பெற்றோரே, ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு நேரம் கவனம் செலுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். நீண்ட நேரமாக சில சமயங்களில் படிப்பதைவிட, கொஞ்ச நேரமாக அடிக்கடி படிப்பது இளம் பிள்ளைகளுக்கு அதிக பயன் தரும்.—உபா. 11:19, 20.
4 கற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் திறமையை குறைவாக மதிப்பிட்டுவிடாதீர்கள். பைபிள் கதாபாத்திரங்கள் பற்றி அவர்களுக்கு கதை சொல்லுங்கள். பைபிள் நிகழ்ச்சிகளை அவர்கள் படமாக வரையட்டும் அல்லது நடித்துக் காட்டட்டும். பைபிள் நாடகங்கள் உட்பட நம்மிடமுள்ள ஆடியோ, வீடியோ கேசட்டுகளை நன்கு பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் வயதிற்கும் கற்கும் திறனுக்கும் ஏற்றவாறு குடும்ப படிப்பை மாற்றியமையுங்கள். ஆரம்பகால பயிற்சி அடிப்படையானதாக, குறைவான நேரத்திற்கு இருக்கும். ஆனால் பிள்ளை வளருகையில் அதன் பயிற்சியும் அதிக விரிவடைந்து, முன்னேற வேண்டும். பைபிள் போதனையை உயிரோட்டமுள்ளதாகவும் பலதரப்பட்டதாகவும் ஆக்குங்கள். உங்கள் பிள்ளைகள் கடவுளுடைய வார்த்தையிடம் ‘வாஞ்சையை’ வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றே நீங்கள் விரும்புவதால் படிப்பை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குங்கள்.—1 பே. 2:3.
5 சபையில் அவர்களை ஈடுபடுத்துங்கள்: உங்கள் பிள்ளைகள் சபையோடு முழுமையாக ஈடுபடும்படி அவர்களுக்கு முன்னேறும் இலக்குகளை வையுங்கள். முதல் இலக்காக எதை வைக்கலாம்? இரண்டு இளம் பிள்ளைகளின் பெற்றோர் இவ்வாறு கூறுகின்றனர்: “இருவரும் ராஜ்ய மன்றத்தில் அமைதியாக அமர்ந்திருக்க பயிற்றுவிப்பைப் பெற ஆரம்பித்தார்கள்.” பிறகு, பிள்ளைகள் கூட்டங்களில் சொந்த வார்த்தையில் பதில் சொல்ல உதவுங்கள், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருவதை ஒரு இலக்காக வையுங்கள். வீட்டுக்காரரிடம் துண்டுப்பிரதியை அளிப்பது, ஒரு வசனத்தை வாசிப்பது, பத்திரிகையை அளிப்பது, வீட்டுக்காரரோடு அர்த்தமுள்ள விதத்தில் உரையாடுவது போன்றவை வெளி ஊழியத்தில் எட்டக்கூடிய சிறந்த இலக்குகளாகும்.
6 உற்சாகமூட்டும் முன்மாதிரி வையுங்கள்: நீங்கள் யெகோவாவைப் பற்றி தினந்தோறும் பேசுவதையும் அவரிடம் ஜெபிப்பதையும் உங்கள் பிள்ளைகள் கேட்கிறார்களா? நீங்கள் அவருடைய வார்த்தையை படிப்பதை, கூட்டங்களுக்கு செல்வதை, வெளி ஊழியத்தில் பங்குகொள்வதை, கடவுளுடைய சித்தத்தை செய்வதில் இன்பம் காண்பதை உங்கள் பிள்ளைகள் தினந்தோறும் பார்க்கிறார்களா? (சங். 40:8, NW) அவர்கள் இவற்றைப் பார்ப்பதும், இவற்றையெல்லாம் அவர்களோடு சேர்ந்து செய்வதும் அத்தியாவசியம். ஆறு பிள்ளைகளை உண்மையுள்ள சாட்சிகளாக வளர்த்த தன் தாயைப் பற்றி வளர்ந்த ஒரு மகள் இவ்வாறு கூறினாள்: “அம்மாவுடைய முன்மாதிரியே எங்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது; வார்த்தைகளைக் காட்டிலும் அதுவே சப்தமாக பேசியது.” நான்கு பிள்ளைகளை வளர்த்த ஒரு பெற்றோர் இவ்வாறு கூறினார்: “‘யெகோவாவுக்கே முதலிடம்’ என்பது வெறும் வார்த்தைகளில் மாத்திரமல்ல, நாங்கள் வாழ்ந்த விதத்தில் தெளிவாக தெரிந்தது.”
7 பெற்றோரே, உங்கள் பிள்ளைகளை சீக்கிரமாகவே பயிற்றுவிக்க ஆரம்பியுங்கள், கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை போதியுங்கள், முன்னேறும் இலக்குகளை வையுங்கள், மிகச் சிறந்த முன்மாதிரி வையுங்கள். இவற்றை செய்ததற்காக பின்னர் சந்தோஷப்படுவீர்கள்!