ஊழியத்தில் ஈடுபட உங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளியுங்கள்
1. சங்கீதம் 148:12, 13-ன் படி, கிறிஸ்தவப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
1 தம்மைத் துதிக்கும்படி யெகோவா இளம்பிள்ளைகளுக்கு அழைப்பு விடுக்கிறார். (சங். 148:12, 13) ஆகவே, கிறிஸ்தவப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களையும் ஒழுக்க நெறிகளையும் கற்பிப்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. நற்செய்தியை அறிவிக்கிற வேலையில் அவர்களுக்குப் படிப்படியாகப் பயிற்சியும் அளிக்க வேண்டும். இதை அவர்கள் எப்படிச் செய்யலாம்?
2. பெற்றோர் வைக்கிற நல்ல முன்மாதிரி, பிள்ளைகளை என்ன செய்யத் தூண்டும்?
2 நல்ல முன்மாதிரி: நியாயாதிபதியான கிதியோன் தன்னுடன் இருந்த 300 பேரிடம், “நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள்” என்று சொன்னார். (நியா. 7:17) தங்கள் பெற்றோர் செய்வதைப் பார்த்து அப்படியே செய்வதுதான் பிள்ளைகளின் இயல்பு. இரவு நேர வேலை செய்கிற ஓர் அப்பா... சனிக்கிழமை காலையில் அதிகக் களைப்பாக வீடுதிரும்புகிறார்; என்றாலும், தூங்கி ஓய்வெடுப்பதற்குப் பதிலாகத் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு உடனடியாக ஊழியத்திற்குக் கிளம்பிவிடுகிறார். இவ்வாறு, ஊழியம்தான் முக்கியம் என்பதை... தன் பிள்ளைகளுக்கு வாயளவில் சொல்லிக்கொண்டிருக்காமல் செயலிலேயே காட்டிவிடுகிறார். (மத். 6:33) ஜெபம் செய்வது... பைபிள் வாசிப்பது... கூட்டங்களில் பதில் சொல்வது... வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது... போன்ற காரியங்களில் நீங்கள் ஆர்வத்தோடு ஈடுபடுவதை உங்கள் பிள்ளைகள் பார்க்கிறார்களா? இந்த விஷயத்தில் உங்களால் பரிபூரண முன்மாதிரி வைக்க முடியாது என்பது உண்மையே. ஆனாலும், நீங்கள் யெகோவாவுக்கு முழுமூச்சோடு சேவை செய்வதை உங்கள் பிள்ளைகள் பார்க்கும்போது... நீங்கள் அளிக்கிற ஆன்மீகப் பயிற்சியை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு எளிதாக இருக்கலாம்.—உபா. 6:6, 7; ரோ. 2:21, 22.
3. என்னென்ன ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கும், எட்டுவதற்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் உதவ வேண்டும்?
3 ஆன்மீக இலக்குகள்: நடப்பதற்கு... பேசுவதற்கு... உடை உடுத்துவதற்கு... என நிறைய விஷயங்களைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சளைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள். இப்படி, பிள்ளைகள் ஒவ்வொரு இலக்காக எட்டிப்பிடிக்கும்போது... புதிய இலக்குகளை அவர்கள்முன் வைக்கிறார்கள். பெற்றோர் யெகோவாவின் வணக்கத்தாராய் இருந்தால்... பிள்ளைகளுடைய வயதுக்கும் திறமைக்கும் ஏற்றாற்போல் ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கும் அவற்றை எட்டுவதற்கும் உதவுகிறார்கள். (1 கொ. 9:26) சொந்த வார்த்தைகளில் பதில் சொல்வதற்கும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் தங்களுடைய பேச்சுகளைத் தயார் செய்வதற்கும் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களா? (சங். 35:18) ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் ஈடுபட அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்களா? ஞானஸ்நானம் எடுத்து முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதை இலக்காக வைக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? முழுநேர ஊழியத்தில் மகிழ்ச்சியோடும் பக்திவைராக்கியத்தோடும் ஈடுபடுகிற சகோதர சகோதரிகளோடு பழக அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்களா?—நீதி. 13:20.
4. ஊழியத்தில் ஈடுபட பிள்ளைகளுக்கு இளவயதிலேயே பெற்றோர் பயிற்சி அளிக்க ஆரம்பித்தால் அவர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?
4 “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 71:17) எனவே, ஊழியத்தில் ஈடுபட உங்கள் பிள்ளைகளுக்கு இளவயதிலேயே பயிற்சி அளிக்க ஆரம்பியுங்கள். அவர்கள் ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பதற்கு இப்போது நீங்கள் போடுகிற அஸ்திவாரம், வளர்ந்து பெரியவர்களாகும்போது நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுக்கும்!—நீதி. 22:6.