யெகோவாவைத் துதிக்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
1 யெகோவாவின் பெயரைத் துதிக்கும்படி சிறுவர்களையும் சிறுமிகளையும் சங்கீதம் 148:12, 13 உற்சாகமூட்டுகிறது. அவ்வாறு துதி செலுத்திய இளம் பிள்ளைகளுடைய அநேக உதாரணங்கள் பைபிளில் உள்ளன. உதாரணத்திற்கு, “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் . . . கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடைசெய்தான்.” (1 சா. 2:18) இஸ்ரவேலில் இருக்கும் யெகோவாவுடைய தீர்க்கதரிசியால் நாகமானுடைய குஷ்டரோகத்தை குணப்படுத்த முடியும் என்று நாகமானுடைய மனைவியிடம் சொன்னதும் ‘ஒரு சிறு பெண்தான்.’ (2 இரா. 5:1-3) இயேசு தேவாலயத்திற்குள் பிரவேசித்து அற்புதங்களைச் செய்தபோது, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்ததும் ‘பிள்ளைகளே.’ (மத். 21:15) யெகோவாவைத் துதிக்க தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு கற்றக்கொடுக்கலாம்?
2 முன்மாதிரி: பிள்ளைகளுடைய இருதயங்களில் சத்தியத்தை பதிய வைப்பதற்கு முன்பாக, யெகோவாவை நேசிக்கும்படியாகவும் அவருடைய கட்டளைகளை தங்களுடைய இருதயங்களில் முதலாவது பதிய வைக்கும்படியாகவும் இஸ்ரவேல தகப்பன்மார்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். (உபா. 6:5-9) ஊழியத்தைப்பற்றி உற்சாகமளிக்கும் விதமாக பேசுங்கள், உங்களுடைய வாராந்தர அட்டவணையில் ஊழியத்துக்கென்று நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது, நீங்கள் ஊழியத்தை முக்கியமானதாகவும் திருப்திகரமான வேலையாகவும் எப்படி கருதுகிறீர்களோ அப்படியே உங்களுடைய பிள்ளைகளும் கருத தூண்டப்படுவார்கள்.
3 ஒரு சகோதரி இவ்வாறு நினைவுகூருகிறார்: “நான் வளருகையில், எல்லா வார இறுதி நாட்களிலும் குடும்பமாக நாங்கள் ஊழியத்துக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஊழியம் செய்வதை என்னுடைய பெற்றோர் மகிழ்ந்து அனுபவித்ததை நான் கவனித்திருக்கிறேன். ஊழியம் செய்வது மகிழ்ச்சியளிக்கும் வேலை என்ற எண்ணத்தோடே நாங்களும் வளர்ந்தோம்.” இந்தச் சகோதரி ஏழு வயதாயிருக்கையில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆனார். தற்போது தனது முழுநேர சேவையின் 33-ம் ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறார்.
4 படிப்படியானப் பயிற்சி: ஊழியத்தின்போது உங்கள் பிள்ளைகளையும் பங்கெடுக்கச் செய்யுங்கள். அவர்களை காலிங் பெல் அழுத்தவோ, வீட்டுக்காரருக்குத் துண்டுப்பிரதியை கொடுக்கவோ, ஒரு வசனத்தை வாசிக்கவோ சொல்லலாம். இவ்வாறு செய்வது அவர்களும் ஊழிய வேலையை மகிழ்ந்து அனுபவிக்க உதவும், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் தங்களுக்கு இருக்கும் திறமையின்மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் உதவும். அவர்கள் வளர வளர, ஊழியத்தில் அவர்களுடைய பங்கும் அதிகரித்து வரும். எனவே, அவர்கள் தொடர்ந்து முன்னேறவும், தங்கள் சேவையில் இன்னும் அதிகத்தைச் செய்ய என்ன ஆன்மீக இலக்குகளை வைக்கலாம் என்று சிந்திக்கவும் தூண்டுங்கள்.
5 உங்களுடைய பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் பிள்ளைகளும் அதற்கு விருப்பம் தெரிவித்தால், அதைப்பற்றி மூப்பர்களிடம் உடனடியாகப் பேசுங்கள். பிரஸ்தாபியாக ஆவது, யெகோவாவை துதிப்பதில் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட பொறுப்பை உணரச் செய்யும். பிரஸ்தாபியாக தகுதிபெறுவதற்கு முன். முழுக்காட்டப்பட்ட பெரியவர்கள் தெரிந்திருக்கும் அளவுக்கு ஒரு பிள்ளையும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை மனதில் வையுங்கள். அடிப்படை பைபிள் போதனைகளை உங்கள் பிள்ளை புரிந்துகொள்கிறானா? பைபிளின் ஒழுக்க நெறிகளின்படி வாழ்கிறானா? ஊழியத்தில் பங்குகொள்ளவும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக தன்னை அடையாளம் காட்டவும் விரும்புகிறானா? அவ்வாறு செய்கிறான் என்றால் அவன் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகிறதற்கு தகுதி பெற்றிருக்கிறான் என்று மூப்பர்கள் தீர்மானிக்கலாம்.—யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக். 79-82-ஐக் காண்க.
6 தங்களுடைய இருதயத்திலிருந்து யெகோவாவை துதிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு முயற்சி தேவை. ஆனாலும், தங்கள் பிள்ளைகள் ஆன்மீக காரியங்களில் முன்னேற்றம் செய்வதைக் காணும்போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட வேறெந்த சந்தோஷமும் பெற்றோருக்கு பெரிதாக இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தம்முடைய அற்புதச் செயல்களைப்பற்றி பிள்ளைகள் சொல்வதைப் பார்க்கையில் அவரும் சந்தோஷப்படுகிறார்.
[கேள்விகள்]
1. பிள்ளைகள் யெகோவாவைத் துதிக்க முடியுமா?
2. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாய் இருப்பது ஏன் முக்கியம்?
3. தனது பெற்றோரின் முன்மாதிரியினால் ஒரு சகோதரி எவ்வாறு பயனடைந்தார்?
4. பிள்ளைகளைப் படிப்படியாக பயிற்றுவிப்பது என்றால் என்ன?
5. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெறுவதற்கு ஒரு பிள்ளைக்கு என்ன தேவை?
6. தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் பெற்றோர் எடுக்கும் முயற்சி ஏன் பயனுள்ளது?