பிரசங்கிப்பதில் இன்னும் சந்தோஷம் காணுங்கள்
1 நற்செய்தியை பிறரிடம் சொல்லுகையில் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்கள் ஊழியத்தில் அனுபவிக்கிறீர்களா? நாம் கவனமாக இல்லாவிட்டால், நம்மைச் சுற்றியுள்ள பொல்லாத உலகம், பிரசங்கிப்பதை நினைத்தாலே தொடை நடுங்கும்படி செய்துவிடும்; இதனால் நம் சந்தோஷமும் பறிபோகும். பலன் தராத பிராந்தியத்தில் ஊழியம் செய்வதும்கூட நம்மை உற்சாகமிழக்கச் செய்யலாம். பிரசங்கிப்பதில் நாம் இன்னும் சந்தோஷம் காண நடைமுறையான என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?
2 நம்பிக்கையுடன் இருங்கள்: நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்வது நிச்சயம் உதவும். அதற்கு ஒரு வழி, ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாய் இருக்கும்’ அரிய வாய்ப்பைப் பற்றி தியானிப்பது. (1 கொ. 3:9) இந்த வேலையை செய்து முடிக்கும் வரை இயேசுவும்கூட நம்முடன் இருக்கிறார். (மத். 28:20) தூதர் சேனையால் நம்மை ஆதரிக்கிறார். (மத். 13:41, 49) ஆகவே, நம் அயரா உழைப்புக்கு கடவுளுடைய ஆதரவு இருப்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். (வெளி. 14:6, 7) ஆகையால் நம் ஊழியத்தின் நிமித்தம் மனிதரில் சிலர் நம்மிடம் எப்படி நடந்துகொண்டாலும் சரி, பரலோகத்தில் இருப்பவர்களுக்கு நம் ஊழியம் சந்தோஷம் தருகிறது!
3 நன்கு தயாரியுங்கள்: நன்கு தயாரிப்பதும் நம் சந்தோஷத்தைக் கூட்டுகிறது. ஊழியத்திற்கு தயாரிப்பது மலை போன்ற பெரிய விஷயமாய் இருக்க வேண்டியதில்லை. அதற்கென சில நிமிடங்கள் செலவிட்டு, தற்போதைய பத்திரிகைகளில் அல்லது அந்த மாத பிரசுர அளிப்பிலுள்ள விஷயத்தின் அடிப்படையில் பேசுவதற்கு ஏதாவது ஒரு குறிப்பை கவனத்தில் கொள்வது போதுமானது. நம் ராஜ்ய ஊழியத்தில் “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது” என்ற பகுதியிலிருந்து ஒரு பிரசங்கத்தை தேர்ந்தெடுங்கள். ஜனவரி 2002 உட்சேர்க்கையில், “வெளி ஊழியத்திற்கான மாதிரி அளிப்புகள்” என்ற பகுதியை எடுத்துப் பாருங்கள். அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பலன்தரும் அறிமுகம் ஒன்றைப் பாருங்கள். வழக்கமாக வீட்டுக்காரர்களின் எதிர்ப்பை நீங்கள் எதிர்ப்பட்டால் அவர்கள் சொல்வதை ஒப்புக்கொண்ட பிறகு, ஆர்வமூட்டும் விஷயத்திற்கு அவர்கள் கவனத்தை திருப்பும் வகையில் ஒரு பதிலை சொல்வது எப்படி என தயாரியுங்கள். இதைச் செய்ய நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் மிகவும் உதவுகிறது. இப்படி கிடைக்கும் உதவிகளை பயன்படுத்துவது, சந்தோஷத்துடன் பிரசங்கிக்க நமக்குத் தேவையான நம்பிக்கையை அளிக்கும்.
4 உருக்கமாக ஜெபியுங்கள்: நிரந்தர சந்தோஷத்திற்கு ஜெபம் அத்தியாவசியமானது. நாம் யெகோவாவின் வேலையைச் செய்வதால், அவருடைய ஆவிக்காக கெஞ்சி மன்றாட வேண்டும்; ஏனெனில் அதன் கனிகளில் ஒன்றுதான் சந்தோஷம். (கலா. 5:22) தொடர்ந்து பிரசங்கிக்க தேவையான பலத்தை யெகோவா நமக்குத் தருவார். (பிலி. 4:13, NW) நம் ஊழியத்திற்காக ஜெபிப்பது, நம்மை சோர்வுறச் செய்யும் அனுபவங்களை ஊழியத்தில் எதிர்ப்பட்டாலும் காரியங்களை சரியான கோணத்தில் பார்க்க உதவும். (அப். 13:52; 1 பே. 4:13, 14) நாம் பயப்படுகையில் நமக்கு தைரியமூட்டி மகிழ்ச்சியோடு தொடர்ந்து பிரசங்கிக்க ஜெபம் நமக்கு உதவும்.—அப். 4:31.
5 வாய்ப்புகளை உருவாக்குங்கள்: எப்படியாவது ஆட்களை சந்தித்து அவர்களிடம் சாட்சி கொடுக்கையில்தான் நம் ஊழியம் இன்னும் சந்தோஷத்தைத் தருகிறது. பிந்திய பிற்பகல் அல்லது இளம் மாலைப் பொழுது போன்ற வித்தியாசமான நேரங்களில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்படி உங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்வது இன்னும் வெற்றி தரலாம். தெருக்களில் நடக்கையில், கடைக்குச் செல்கையில், பஸ்ஸில் பயணிக்கையில், பூங்காவில் நடக்கையில் என பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களை சந்திக்கிறீர்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுருக்கமான அறிமுக வார்த்தைகளை தயாரித்து, சிநேகப்பான்மை உள்ளவர்களாக தெரிகிறவர்களை அணுகுவதற்கு முன்முயற்சி எடுத்தாலென்ன? நீங்கள் ஓரிடத்தில் வேலை பார்க்கலாம் அல்லது பள்ளிக்குச் செல்லலாம், அங்கெல்லாம் மற்றவர்களோடு அன்றாடம் பேசுவீர்கள். பைபிளிலிருந்து ஓரளவு ஆர்வத்தை தூண்டும் கேள்வி ஒன்றைக் கேட்டாலே போதும், சாட்சி கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். ஜனவரி 2002, நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் முதல் பக்கத்தில் முத்தான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுகையில் அவற்றில் ஏதாவது, பிரசங்க வேலையில் நாம் இன்னும் சந்தோஷம் காண அதிகம் உதவலாம்.
6 நாம் சகித்திருக்க சந்தோஷம் உதவுவதால், அதைக் காத்துக்கொள்வது எவ்வளவு அவசியம்! அவ்வாறு காத்துக்கொண்டால், இனி ஒருபோதும் செய்யப்படாத இந்த வேலை முடிவுறுகையில் அதிகளவு பலனை நாம் அறுவடை செய்வோம். அந்த எதிர்பார்ப்பே பிரசங்கிப்பதில் நாம் இன்னும் சந்தோஷம் காணச் செய்யும்.—மத். 25:21.