‘சந்தோஷத்தோடே யெகோவாவுக்கு சேவை செய்யுங்கள்’
1 “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலி. 4:4) நற்செய்தியைப் பிரசங்கித்து, யெகோவாவை வணங்க செம்மறியாட்டைப் போன்றவர்களுக்கு உதவுவது, பெரும் சந்தோஷத்திற்கு ஊற்றாக விளங்கும் சிலாக்கியம் ஆகும். (லூக். 10:17; அப். 15:3; 1 தெ. 2:19) எனினும் சில சமயங்களில் ஊழியத்தில் சந்தோஷம் கிடைக்காதது போல உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?
2 கடவுள் தந்த வேலை: யெகோவாதாமே நம்மிடம் பிரசங்க வேலையை ஒப்படைத்திருக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். ஆம், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதிலும் சீஷர்களை உருவாக்குவதிலும் ‘தேவனுக்கு உடன் வேலையாட்களாக’ இருப்பது எப்பேர்ப்பட்ட சிலாக்கியம்! (1 கொ. 3:9) இனி ஒருபோதும் செய்ய தேவையிராத இந்த வேலையில் கிறிஸ்து இயேசு நம்முடன் இருக்கிறார். (மத். 28:18-20) இப்போது நடைபெற்று வரும் பெரிய ஆவிக்குரிய அறுவடையில் தேவதூதர்களும் நம்முடன் சேர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள். (அப். 8:26; வெளி. 14:6) இந்த வேலையை யெகோவா ஆதரிக்கிறார் என்பதற்கு வேதவசனங்களும், கடவுளுடைய ஜனங்களின் அனுபவங்களும் தெளிவான அத்தாட்சி அளிக்கின்றன. எனவே பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, ‘கடவுளால் அனுப்பப்பட்டவர்களாக, கடவுளுடைய பார்வையில், கிறிஸ்துவோடுகூட’ செல்கிறோம். (2 கொ. 2:17, NW) சந்தோஷத்துக்கு இது எப்பேர்ப்பட்ட பலமான காரணத்தை அளிக்கிறது!
3 கடவுளுடைய சேவையில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள ஜெபம் இன்றியமையாதது. (கலா. 5:22) கடவுள் தரும் பலத்தால் மட்டுமே அவருடைய வேலையை நாம் செய்ய முடியும் என்பதால் அவருடைய ஆவிக்காக ஊக்கமாய் வேண்டுதல் செய்வது அவசியம்; அவ்வாறு கேட்போருக்கு அதை தாராளமாக அவர் தருகிறார். (லூக். 11:13; 2 கொ. 4:1, 7; எபே. 6:18-20) நம் ஊழியத்திற்காக கடவுளிடம் ஜெபிப்பது, ஜனங்கள் நம்முடைய செய்திக்கு செவிசாய்க்காதபோது சரியான நோக்குநிலையைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும். அதோடு, தைரியமாக, இன்முகத்தோடு பிரசங்க வேலையை தொடர்ந்து செய்யவும் இது உதவும்.—அப். 4:29-31; 5:40-42; 13:50-52.
4 நன்கு தயாரியுங்கள்: ஊழியத்தில் நாம் அதிக சந்தோஷத்தைப் பெறுவதற்கு நடைமுறையான ஒரு வழி நன்கு தயாரிப்பதாகும். (1 பே. 3:15) இப்படி தயாரிப்பதற்கு அதிக நேரம் தேவையில்லை. சமீபத்திய பத்திரிகைகளை அளிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை அல்லது நீங்கள் அளிக்க நினைக்கும் பிரசுரத்திற்குப் பொருத்தமான பிரசங்கத்தை எடுத்துப் பார்க்க சில நிமிடங்கள் போதும். பொருத்தமான அறிமுகத்திற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தையோ முன்னர் வெளிவந்த நம் ராஜ்ய ஊழிய பிரதிகளையோ பார்க்கலாம். ராஜ்ய பிரஸ்தாபிகள் சிலருக்கு, பிரசங்கத்தை சுருக்கமாக ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வது உதவியாக இருந்திருக்கிறது. ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக அவ்வப்போது அவர்கள் அந்தத் தாளை எடுத்துப் பார்க்கிறார்கள். இது பயத்தை சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது, அதுமட்டுமல்ல தைரியத்தோடு பிரசங்கிப்பதற்கு நம்பிக்கையும் அளிக்கிறது.
5 சந்தோஷம் அநேக பலன்களை நமக்கு அளிக்கிறது. சந்தோஷத்தோடு பிரசங்கிக்கும்போது, நம் செய்தி மக்களின் மனதைக் கவருகிறது. மேலும், சகித்திருப்பதற்கு நம்மை பலப்படுத்துகிறது. (நெ. 8:10; எபி. 12:2) எல்லாவற்றிற்கும் மேலாக, சந்தோஷத்துடன் நாம் செய்யும் சேவை யெகோவாவை மகிமைப்படுத்துகிறது. எனவே ‘சந்தோஷத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்வோமாக.’—சங். 100:2, NW.
[கேள்விகள்]
1. யெகோவாவின் ஊழியர்களுக்கு எது பெரும் சந்தோஷத்திற்கு ஊற்றாக விளங்குகிறது?
2. பிரசங்க வேலையை நம்மிடம் ஒப்படைத்தவரை மனதில் வைப்பது, நம் சந்தோஷத்துக்கு எப்படி பங்களிக்கும்?
3. கடவுளுடைய சேவையில் நம் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள ஜெபம் எப்படி உதவுகிறது?
4. நன்கு தயாரிப்பது ஊழியத்தில் அதிக மகிழ்ச்சியைப் பெற எப்படி உதவுகிறது, தயாரிப்பதற்கு நடைமுறையான சில வழிகள் யாவை?
5. சந்தோஷம் நமக்கும் மற்றவர்களுக்கும் எப்படியெல்லாம் பலனளிக்கிறது?