மற்றவர்களுக்கு உதவ ‘விரும்புகிறீர்களா’?
1 இயேசு உண்மையிலேயே மக்களிடம் அக்கறை காட்டினார். ஒரு குஷ்டரோகி உதவி கேட்டு மன்றாடியபோது இயேசு தமது கையை நீட்டி, அவனை தொட்டு “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக” என்றார். (மாற். 1:40-42, பொ.மொ.) மற்றவர்களுக்கு உதவுவதில் இயேசுவின் மனநிலையை நாம் எப்படி பின்பற்றலாம்?
2 ஆர்வம் காட்டுகிறவர்கள்: யெகோவாவின் வணக்கத்தாராக, ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு உதவுவதில் சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. புதியவர்கள் கூட்டங்களுக்கு வரும்போது, வரவேற்று அவர்களுடன் பழகுங்கள். அவர்களை உற்சாகப்படுத்த வழி தேடுங்கள். அவர்கள் பதில்கள் சொல்லுகையில் பாராட்டுங்கள். வாழ்க்கையில் பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளை போற்றுங்கள். சபையில் உண்மையான நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகளை காண உதவுங்கள்.
3 உடன் விசுவாசிகள்: ‘விசுவாச குடும்பத்தார்’ விசேஷமாக பல வழிகளில் நம் உதவியைப் பெற்றுக்கொள்ள தகுந்தவர்கள். (கலா. 6:10) அநேகர் உடல்நலப் பிரச்சினைகளுடன் போராடி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை சந்தித்து உற்சாகமளிப்பதன் மூலம், அவர்களுக்கு அவசியம் தேவைப்படும் கூட்டுறவை அளிக்கலாம்; முடிந்தால் நடைமுறையான வழிகளிலும் உதவலாம். சிலர் வாழ்க்கையில் வேறு பல கஷ்டங்களை அனுபவிக்கலாம். செவிகொடுத்து கேட்கவும் உற்சாகமூட்டவும் நேரத்தை செலவழிப்பதன் மூலம் அவர்களிடம் உங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிக்காட்டுங்கள். (1 தெ. 5:14) மூப்பர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி வருகையில் நம் ஒத்துழைப்பு அவர்களுக்கும் தேவை. (எபி. 13:17) மனமுவந்து உதவி அளிப்பதன் மூலம் நம் உடன் விசுவாசிகளுக்கு ‘பக்கபலமாக இருக்கலாம்.’ (கொலோ. 4:11, NW)
4 குடும்ப அங்கத்தினர்கள்: நம் குடும்பத்தார் மத்தியிலும் மக்களிடம் இயேசு காட்டியது போன்ற அக்கறையை காட்ட முயல வேண்டும். பெற்றோர் தொடர்ந்து ‘தங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பதற்கு’ அவர்கள்மீதுள்ள ஆழ்ந்த அக்கறையே அவர்களை தூண்டுகிறது. (எபே. 6:4) குடும்பப் படிப்பு, சபை கூட்டங்கள், அல்லது வெளி ஊழியத்திற்கு சரியான நேரத்தில் தயாராவதன் மூலம் பிள்ளைகள் தங்கள் பங்கை செய்யலாம். வயதாகையில் ஏற்படும் கஷ்டங்களை சமாளிக்க தங்கள் பெற்றோருக்கு கனிவுடன் உதவுவதன் மூலம் வளர்ந்த பிள்ளைகள் இயேசுவைப் போல பரிவை காட்டலாம். இவ்வாறும் இன்னும் பிற வழிகளிலும், அனைவருமே நம் ‘சொந்த குடும்பத்தில் தேவபக்தியை’ கடைப்பிடிக்கலாம்.—1 தீ. 5:4.
5 மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இயேசுவை பின்பற்றும்போது, பிரச்சினைகளை குறைத்து, நம் குடும்பமும் சபையும் நெருங்கிவர துணைபுரிகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘சகல விதமான ஆறுதலின் தேவனாகிய’ யெகோவாவுக்கு கனத்தை கொடுக்கிறோம்.—2 கொ. 1:3.