ஒத்திசைவாக ஒன்றுபட்டிருங்கள்
1 எவ்வளவு அடிக்கடி மனித உடலின் அற்புத வடிவமைப்பை எண்ணி அதிசயித்திருக்கிறீர்கள்? (சங். 139:14) உடலின் ஒவ்வொரு அங்கமும் மற்றவற்றுடன் ஒத்திசைவுடன் செயல்படுகிறது. கடவுளுடைய வார்த்தை, ஒத்திசைவுடன் சிறப்பாக செயல்படும் உடலுக்கு கிறிஸ்தவ சபையை ஒப்பிடுகிறது. கிறிஸ்து எனும் தலையின்கீழ் சபையின் அங்கத்தினர்கள் அனைவரும் ‘உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் [“ஒத்திசைவாக ஒன்றுபட்டிருக்கிறார்கள்,” NW].’ (எபே. 4:16அ) இவ்வாறு, வியத்தகு செயல்களை செய்வதற்கு ஒன்றுபட்ட தமது மக்களை யெகோவா பயன்படுத்துகிறார்.
2 முதல் நூற்றாண்டு சபையினர் தங்கள் மத்தியில் இருந்தவர்களுடைய ஆவிக்குரிய மற்றும் பொருளாதார தேவைகளைக் கவனித்துக் கொள்வதில் ‘ஒருமனப்பட்டிருந்தார்கள்.’ (அப். 2:44-47) யெகோவாவின் உதவியோடு கடுமையான எதிர்ப்பை ஒன்றுபட்டவர்களாய் சந்தித்தார்கள், சமாளித்தார்கள். (அப். 4:24-31) அவர்கள் சென்ற இடத்திலெல்லாம் ராஜ்ய செய்தியை அறிவித்து, அப்போது அறியப்பட்டிருந்த உலகெங்கும் நற்செய்தியை பரப்பினார்கள். (கொலோ. 1:23) இன்று கிறிஸ்தவ சபையினரும் ஒன்றுபட்டவர்களாய் இதையே இன்னும் பெரியளவில் செய்து வருகிறார்கள். இந்த ஒத்திசைவுக்கு என்ன அம்சங்கள் பங்களிக்கின்றன?
3 கடவுளுடைய போதனையால் இணைக்கப்படுதல்: உலகெங்கும் நாம் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறோம். இது எப்படி சாத்தியமாகிறது? யெகோவா ஆவிக்குரிய ‘உணவை’ “ஏற்றவேளையில்” அளிப்பதற்கு உபயோகிக்கும் காணக்கூடிய அமைப்பை நாம் கண்டுணர்ந்திருக்கிறோம். (மத். 24:45, NW) சபையில் போதகர்களாக அவர் தந்திருக்கும் ‘மனிதரில் வரங்களை’ நாம் உயர்வாய் மதிக்கவும் செய்கிறோம். ஆவிக்குரிய விதத்தில் நம்மை போஷிப்பதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கையில் அவருடைய வார்த்தையில் நம்முடைய புரிந்துகொள்ளுதல் பெருகுகிறது, இயேசுவின் சீஷர்களைப் போலவே அவரை நாமும் பின்பற்றுவதற்கான ஆசை எழுகிறது. ‘விசுவாசத்தில் ஒருமைப்பட்டவர்களாவதற்கு’ கடினமாய் முயல கடவுளுடைய வார்த்தையை நாம் தொடர்ந்து படிக்க வேண்டும். (எபே. 4:8, 11-13; NW) பைபிளைத் தினந்தோறும் வாசிப்பதன் மூலம் ஆவிக்குரிய ஒற்றுமைக்கு நீங்கள் பங்களிக்கிறீர்களா?
4 கிறிஸ்தவ கூட்டுறவின் மூலம் ஒன்றுபடுதல்: அன்பு, கிறிஸ்தவ கூட்டங்களின்போது நெருங்கிய கூட்டுறவில் நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தக் கூட்டங்களில் நாம் “ஒருவரையொருவர் கவனி”க்கிறோம். (எபி. 10:24, 25) இது, நம் சகோதரர்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவர்களை உண்மையிலேயே நன்கு அறிந்துகொள்ள முயலுவதை, யெகோவா நோக்கும் விதமாக அவர்களை அருமையானவர்களாக கருதுவதை உட்படுத்துகிறது. (ஆகா. 2:7, NW அடிக்குறிப்பு) அவர்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் பதில்களைக் கேட்கையில் அவர்களிடமுள்ள நம் அன்பு அதிகரிக்கிறது, நம்முடைய ஒற்றுமை பலப்படுகிறது. சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவர் என மற்றவர்கள் உங்களை கருதுகிறார்களா?
5 ஊழியத்தில் உடன் வேலையாட்கள்: சக விசுவாசிகளுடன் சேர்ந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நம்மை ஒன்றுபடுத்துகிறது. ‘தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு [தன்] உடன் வேலையாட்களாயிருந்தவர்களை’ அப்போஸ்தலன் பவுல் அதிகம் போற்றினார். (கொலோ. 4:11) ஊழியத்தில் ஒருவரோடொருவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும் ஒருவருக்கொருவர் உதவுவதும் கிறிஸ்தவ ஊழியத்தை செய்து முடிக்கவும் நம் ஒற்றுமையின் கட்டை பலப்படுத்திக் கொள்ளவும் நமக்கு உதவுகிறது.—கொலோ. 3:14.
6 பரிசுத்த ஆவியின் ஒன்றுபடுத்தும் சக்தி: யெகோவாவின் சித்தத்தை செய்வதில் நாம் மும்முரமாய் ஈடுபட்டிருக்கையில் தம்முடைய ஆவியைத் தந்து அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இது கருத்து வேறுபாடுகளை சரிசெய்யவும் ஒற்றுமையாய் ஒன்றுபட்டிருக்கவும் நமக்கு உதவுகிறது. (சங். 133:1) “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு” இது நம்மைத் தூண்டுவிக்கிறது. (எபே. 4:3) ஒருவரையொருவர் நடத்தும் விதத்தில் ஆவியின் கனியை வெளிக்காட்டுவதன் மூலம் கடவுளுடைய மக்கள் மத்தியில் காணப்படும் ஒத்திசைவுக்கு நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கலாம்.—கலா. 5:22, 23.
7 கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுபட்டவர்களாய் சேவை செய்வது “அன்பினாலே . . . பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது.” (எபே. 4:16ஆ) மேலும், அது ‘சமாதானத்தின் தேவனாகிய’ யெகோவாவை மகிமைப்படுத்துகிறது.—ரோ. 16:20.