உறவினர் சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ உண்மைப்பற்றுறுதியைக் காட்டுங்கள்
1 குடும்பத்தாருக்கு இடையேயுள்ள பந்தம் மிக பலமானதாக இருக்கலாம். இதனால், துணைவர், பிள்ளை, பெற்றோரில் ஒருவர் அல்லது நெருங்கிய உறவினர் சபை நீக்கம் செய்யப்பட்டாலோ சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டாலோ அது ஒரு கிறிஸ்தவரின் நிலைமையை சவால்மிக்கதாக ஆக்கலாம். (மத். 10:37) உண்மைப்பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட உறவினரை எப்படி நடத்த வேண்டும்? அவர் உங்கள் வீட்டில் வசிக்கிறாரென்றால் அவரிடம் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்குமா? இந்த விஷயத்தின் பேரில் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை முதலில் சிந்திப்போம்; சபை நீக்கம் செய்யப்படுகிறவர்கள், சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொள்ளுகிறவர்கள் ஆகிய இரு சாராருக்கும் பொதுவாக பொருந்தும் அதன் நியமங்களை கவனிப்போம்.
2 சபை நீக்கம் செய்யப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்வது: சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவருடன் எவ்வித தொடர்பையோ கூட்டுறவையோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது: ‘சகோதரனெனப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. . . . அந்த பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.’ (1 கொ. 5:11, 13) மத்தேயு 18:17-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளும் இந்த விஷயத்துக்கு பொருந்துகின்றன: “அவன் [சபை நீக்கம் செய்யப்பட்டவன்] உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.” இயேசு பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அந்நாளைய யூதர்கள் புறதேசத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதிருந்ததையும் வரி வசூலிப்பவர்களை கீழ்த்தரமானவர்களாக ஒதுக்கிவிட்டிருந்ததையும் நன்கு அறிந்திருந்தார்கள். இவ்வாறு சபை நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கூட்டுறவு கொள்ளக் கூடாதென இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு அறிவுரை கூறினார்.—ஆங்கில காவற்கோபுரம் செப்டம்பர் 15, 1981, பக்கங்கள் 18-20-ஐ காண்க.
3 அப்படியானால், சபையிலிருந்து நீக்கப்பட்ட எவருடனும் உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள் ஆவிக்குரிய கூட்டுறவை வைக்க மாட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தும். அது மட்டுமல்ல, ‘அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது’ என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (1 கொ. 5:11) எனவே, சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருடன் சமூக கூட்டுறவு கொள்வதையும் தவிர்க்கிறோம். பிக்னிக், பார்ட்டி, பந்து விளையாடுவது, கடைக்கு போவது, சினிமாவுக்குப் போவது, அல்லது வீட்டிலோ ஹோட்டலிலோ சேர்ந்து சாப்பிடுவது ஆகிய அனைத்திலும் அவருடன் சேர்ந்திருக்கக் கூடாது என்பதை அது குறிக்கும்.
4 சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருடன் பேசுவதைக் குறித்து என்ன சொல்லலாம்? சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலையை பற்றியும் பைபிள் சொல்லாவிட்டாலும், 2 யோவான் 10-லிருந்து யெகோவாவின் நோக்குநிலையை புரிந்துகொள்ள முடிகிறது: “ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” இதைக் குறித்து, ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1981 பக்கம் 25-ல் இவ்வாறு சொல்லுகிறது: “வெறுமனே ‘ஹலோ’ என்ற வாழ்த்துதல் சொல்லுவது ஒரு உரையாடலுக்கு அல்லது நட்புக்குக்கூட வழிநடத்தும் ஆரம்ப படியாக அமையலாம். சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவருடன் இந்த ஆரம்பப் படியை எடுக்க நாம் விரும்புவோமா?”
5 அதே காவற்கோபுரத்தின் 31-ம் பக்கத்திலும் இதே குறிப்பு சொல்லப்பட்டுள்ளது: “ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்து, சபை நீக்கம் செய்யப்பட நேர்ந்தால், அவர் அநேக வாய்ப்புகளை இழக்கிறார்: கடவுளுடன் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையையும், . . . சகோதரர்களுடனான இனிய கூட்டுறவையும், கிறிஸ்தவ உறவினர்களுடன் அனுபவித்த கூட்டுறவில் அதிகத்தையும் இழக்கிறார்.”
6 ஒரே வீட்டில் வசிக்கும்போது: அப்படியானால், சபை நீக்கம் செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினருடன் ஒரே வீட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அன்றாட காரியங்களை செய்கையில் அவருடன் பேசுவதை, சாப்பிடுவதை, கூட்டுறவு கொள்ளுவதை தவிர்க்க வேண்டுமா? காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1992, பக்கம் 20-லுள்ள அடிக்குறிப்பு பின்வருமாறு சொல்கிறது: “ஒரு கிறிஸ்தவரின் குடும்பத்தில் சபை நீக்கம் செய்யப்பட்ட உறவினர் ஒருவர் இருந்தால், அவர் இயல்பான, நாடோறும் செய்யப்படும் காரியங்களிலும் நடவடிக்கைகளிலும் இன்னும் பங்குகொள்பவராகவே இருப்பார்.” எனவே, சாப்பிடும்போதோ வீட்டின் மற்ற காரியங்களிலோ சபை நீக்கம் செய்யப்பட்ட குடும்ப அங்கத்தினரை எந்த அளவுக்கு பங்கெடுக்க அனுமதிக்கலாம் என்று அந்த குடும்பத்தினரே தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், சபை நீக்கம் செய்யப்படும் முன்பு இருந்த விதமாகவே எல்லாம் இருப்பதைப் போன்ற எண்ணத்தை தாங்கள் கூட்டுறவு கொள்ளும் சகோதரர்களுக்கு ஏற்படுத்த அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
7 என்றாலும், சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது சபையிலிருந்து தொடர்பறுத்துக் கொண்ட ஒருவரைக் குறித்து, ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1981 பக்கம் 28-ல் இவ்வாறு சொல்லுகிறது: “முந்தைய ஆவிக்குரிய பந்தங்கள் முற்றிலும் துண்டிக்கப்படுகின்றன. சொந்த குடும்பத்தார் உட்பட உறவினர்களின் விஷயத்திலும் இது பொருந்தும். . . . வீட்டில் ஏற்கெனவே நிலவிய ஆவிக்குரிய கூட்டுறவில் மாற்றங்கள் செய்வதையும் இது அர்த்தப்படுத்தும். உதாரணமாக, கணவன் சபை நீக்கம் செய்யப்பட்டால், அவர் குடும்ப பைபிள் படிப்பை நடத்துவதையோ, பைபிள் வாசிப்பதிலும் ஜெபம் செய்வதிலும் முன்நின்று வழிநடத்துவதையோ அவரது மனைவியும் பிள்ளைகளும் விரும்ப மாட்டார்கள். உணவு வேளையில் அவர் ஜெபிக்க விரும்பினால், அவருடைய வீட்டில் அதை செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் குடும்பத்தாரோ மௌனமாக கடவுளிடம் தனிப்பட்ட விதத்தில் ஜெபிக்கலாம். (நீதி. 28:9; சங். 119:145, 146) குடும்பமாக சேர்ந்து பைபிள் வாசிக்கையில் அல்லது பைபிள் படிப்பு படிக்கையில் சபை நீக்கம் செய்யப்பட்டவர் அங்கிருக்க விரும்பினால் என்ன செய்வது? மற்றவர்களுக்கு போதிக்கவோ தன் மத கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ அவர் முயலாத வரை அவரை அங்கிருக்க அனுமதிக்கலாம்.”
8 வீட்டிலுள்ள வயது வராத ஒரு பிள்ளை சபை நீக்கம் செய்யப்பட்டால், அவனை வளர்க்கும் பொறுப்பு இன்னமும் அந்த கிறிஸ்தவ பெற்றோருடையதே. காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கம் 23 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அவர்கள் அவனுக்குத் தொடர்ந்து உணவும், உடையும், தங்க இடமும் அளித்து வருவதைப் போலவே, கடவுளுடைய வார்த்தைக்குப் பொருந்த அவர்கள் அவனுக்குக் கற்பித்து, சிட்சித்துப் பயிற்றுவிக்க வேண்டும். (நீதிமொழிகள் 6:20-22; 29:17) எனவே, அவன் சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தாலுங்கூட அன்புள்ள பெற்றோர் அவனோடு வீட்டு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யலாம். அவர்கள் தனியே அவனோடு படிப்பது, அவன் சீர்திருந்துவதற்கு மிக அதிக அளவில் உதவலாம். அல்லது குடும்பப் படிப்பு ஏற்பாட்டில் அவன் தொடர்ந்து பங்குகொள்ளலாமெனவும் அவர்கள் தீர்மானிக்கலாம்.’—காவற்கோபுரம், அக்டோபர் 1, 2001, பக்கங்கள் 16-17-ஐக் காண்க.
9 ஒரே வீட்டில் வசிக்காத உறவினர்கள்: ‘சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக் கொண்ட உறவினர் ஒரே குடும்பத்தில் அல்லது வீட்டில் வசிக்காதபோது நிலைமை வித்தியாசமாயிருக்கிறது’ என்று காவற்கோபுரம், அக்டோபர் 1, 1988, பக்கம் 23-ல் குறிப்பிடுகிறது. “அந்த உறவினரோடு எந்தத் தொடர்பும் கொள்ளாமலிருப்பது கூடிய காரியமாயிருக்கலாம். தொடர்பைத் தேவைப்படுத்தும் சில குடும்ப விவகாரங்கள் இருந்தாலும்,” மனந்திரும்பாமல் பாவம் செய்து வரும் ‘எந்த ஒருவனோடும் கலந்திருக்கக் கூடாது’ என்ற தெய்வீக நியமத்திற்கு இசைவாக “இது நிச்சயமாகவே மிகக் குறைந்தளவுக்கு வைக்கப்பட்டிருக்கும்.” (1 கொ. 5:11) உண்மைப்பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட உறவினரோடு தேவையின்றி கூட்டுறவு கொள்வதை தவிர்க்கிறார்கள்; வியாபார விஷயங்களிலும்கூட அற்பசொற்பமாகவே தொடர்பு கொள்கிறார்கள்.—ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1981, பக்கங்கள் 29-30-ஐயும் காண்க.
10 “வீட்டில் வசிக்காத மகன் அல்லது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர், சபை நீக்கம் செய்யப்பட்ட பின் வீட்டிற்கு வந்து தங்க விரும்பினால் என்ன செய்வது? சூழ்நிலைக்கு ஏற்ப என்ன செய்வதென்று அந்த குடும்பத்தினர் தீர்மானிக்கலாம். உதாரணமாக, சபை நீக்கம் செய்யப்பட்ட பெற்றோர் நோய்வாய்ப்பட்டவராக அல்லது பணரீதியிலோ உடல்ரீதியிலோ இனிமேலும் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாதவராக இருக்கலாம். அப்போது உதவி செய்ய வேண்டியது கிறிஸ்தவ பிள்ளைகளின் வேதப்பூர்வ, தார்மீக கடமை. (1 தீ. 5:8) . . . அந்த பெற்றோரின் உண்மையான தேவைகள், அவரது மனநிலை, குடும்பத்தின் ஆவிக்குரிய நலனின் பேரில் குடும்பத் தலைவனுக்கு இருக்கும் அக்கறை ஆகியவற்றைப் பொறுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்கலாம்.”—ஆங்கில காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1981, பக்கங்கள் 28-9.
11 ஒரு பிள்ளையைக் குறித்து அதே கட்டுரை தொடர்ந்து சொல்கிறது: “உடலிலும் உணர்ச்சியிலும் பாதிக்கப்பட்ட சபை நீக்கம் செய்யப்பட்ட ஒரு பிள்ளையை சில சமயங்களில் கிறிஸ்தவ பெற்றோர் வீட்டில் மீண்டும் அனுமதித்துள்ளார்கள். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட சூழ்நிலைகளை பெற்றோர் சீர்தூக்கி பார்க்கலாம். இதுவரை குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வந்த சபை நீக்கம் செய்யப்பட்ட மகன் இப்போது அவ்வாறு வசிக்க முடியாதவனாக இருக்கிறானா? அல்லது வீட்டில் வாழ்வது சௌகரியமாக இருக்கும் என்ற காரணத்திற்காகவே வீட்டிற்கு திரும்பி வர விரும்புகிறானா? அவனுடைய ஒழுக்க தராதரங்களும் மனநிலையும் எப்படிப்பட்டவை? வீட்டிற்குள் ‘புளிப்பானதை’ கொண்டுவருவானா?—கலா. 5:9.”
12 யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதால் வரும் நன்மைகள்: சபை நீக்கம் செய்யும் வேதப்பூர்வ ஏற்பாட்டுடன் ஒத்துழைத்து, தவறு செய்து மனந்திரும்பாதவர்களை விட்டு விலகி இருப்பது நன்மையானது. அது சபையின் சுத்தத்தை காத்துக்கொள்கிறது; பைபிளின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை ஆதரிப்பவர்களென நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. (1 பே. 1:14-16) கறைப்படுத்தும் செல்வாக்குகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. (கலா. 5:7-9) சிட்சையிலிருந்து முழுமையாக நன்மையடைய தவறுசெய்தவருக்கும் வாய்ப்பளிக்கிறது; “நீதியாகிய சமாதான பலனை” பிறப்பிக்க அது அவருக்கு உதவலாம்.—எபி. 12:11.
13 ஒரு வட்டார மாநாட்டில் ஒரு பேச்சை கேட்டபின், இரட்டையர்களான ஒரு சகோதரனும் அவரது சகோதரியும், ஆறு வருடங்களாக சபை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேறு இடத்தில் வாழ்ந்து வந்த தங்கள் தாயை தாங்கள் நடத்திய விதத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்பதை உணர்ந்தார்கள். அசெம்பிளி முடிந்ததும், அவர் தன் தாயிடம், தனக்கிருக்கும் அன்பை உறுதி செய்துவிட்டு, இனிமேல் முக்கியமான குடும்ப விஷயங்களுக்காக தொடர்பு கொள்ளும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் பேச முடியும் என்று விளக்கினார். கொஞ்ச நாட்களில், தாயார் கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்து, காலப்போக்கில் மீண்டும் சபையில் நிலைநாட்டப்பட்டார். விசுவாசத்தில் இல்லாத அவருடைய கணவரும் பைபிளை படித்து, காலப்போக்கில் முழுக்காட்டுதல் பெற்றார்.
14 வேத வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள சபை நீக்க ஏற்பாட்டை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரிப்பது யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பை வெளிக்காட்டி, அவரை நிந்திக்கிறவனுக்கு பதிலளிக்க உதவுகிறது. (நீதி. 27:11) அதற்கு பிரதிபலனாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் நிச்சயம் பெறுவோம். யெகோவாவைக் குறித்து தாவீது ராஜா இவ்வாறு எழுதினார்: ‘நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலக மாட்டேன்.’ “உண்மைப்பற்றுறுதியுள்ளவனிடம் நீர் உண்மைப்பற்றுறுதியுடன் நடந்து கொள்வீர்.”—2 சா. 22:23, 26; NW.
[கேள்விகள்]
1. எந்த நிலைமை ஒரு கிறிஸ்தவரின் உண்மைப்பற்றுறுதியை சவால்மிக்கதாக ஆக்கலாம்?
2. பைபிளின்படி, சபை நீக்கம் செய்யப்பட்டவர்களை கிறிஸ்தவர்கள் எப்படி நடத்த வேண்டும்?
3, 4. சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள், தொடர்பறுத்துக் கொண்டவர்கள் ஆகியோரிடம் எப்படிப்பட்ட கூட்டுறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?
5. சபை நீக்கம் செய்யப்படுகையில் ஒருவர் எவற்றை இழக்கிறார்?
6. ஒரே வீட்டில் வாழும் சபை நீக்கம் செய்யப்பட்ட உறவினருடன் ஒரு கிறிஸ்தவர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாதா? விளக்கவும்.
7. குடும்பத்தார் ஒருவர் சபை நீக்கம் செய்யப்படுகையில், வீட்டில் ஆவிக்குரிய கூட்டுறவு எவ்வாறு மாறுகிறது?
8. வீட்டிலுள்ள வயது வராத பிள்ளை சபை நீக்கம் செய்யப்படுகையில் கிறிஸ்தவ பெற்றோருக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
9. வீட்டிற்கு வெளியே வாழும் சபை நீக்கம் செய்யப்பட்டவரோடு ஒரு கிறிஸ்தவர் எந்தளவுக்கு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்?
10, 11. சபை நீக்கம் செய்யப்பட்டவரை மீண்டும் வீட்டில் வந்து வசிக்க அனுமதிக்கும் முன் ஒரு கிறிஸ்தவர் எவற்றை சிந்திப்பார்?
12. சபை நீக்க ஏற்பாட்டின் சில நன்மைகள் யாவை?
13. ஒரு குடும்பம் என்ன மாற்றத்தை செய்தது, என்ன விளைவுடன்?
14. சபை நீக்க ஏற்பாட்டை நாம் ஏன் உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரிக்க வேண்டும்?