வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்தவப் பெற்றோர், சபை நீக்கம் செய்யப்பட்ட பிள்ளையோடு சேர்ந்து கூட்டங்களில் உட்காருவது சரியா?
சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் ராஜ்ய மன்றத்தில் எங்கு உட்காருகிறார் என்பது குறித்து தேவையில்லாமல் கவலைப்பட வேண்டியதில்லை. பெற்றோரோடு சேர்ந்து வாழும் சபை நீக்கம் செய்யப்பட்ட பிள்ளைக்குத் தேவையான ஆன்மீக உதவியை அளிப்பது பற்றி காவற்கோபுர பத்திரிகை பெற்றோருக்கு எல்லாவிதமான ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறது. வயதுவராத பிள்ளையாக இருந்தால் அவனுக்கு பைபிள் படிப்புகூட நடத்தலாம் என்று காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கங்கள் 22, 23 குறிப்பிட்டது.a அப்படிச் செய்வது தன் தவறைத் திருத்திக்கொள்ள அவனுக்கு வாய்ப்பளிக்கும்.
சபை நீக்கம் செய்யப்பட்ட வயது வராத பிள்ளை ராஜ்ய மன்றத்தில் தன் பெற்றோரோடு சேர்ந்து அமைதியாக உட்காருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கடைசி வரிசையில்தான் உட்கார வேண்டும் என்ற அவசியமில்லை. அதேபோல் பெற்றோர் எங்கே உட்காருகிறார்களோ அங்கேயே அந்தப் பிள்ளையும் உட்காருவதில் எந்தத் தவறும் இல்லை. பிள்ளையின் ஆன்மீக நலனில் பெற்றோருக்கு அக்கறை இருப்பதால் அவன் கூட்டங்களில் நன்கு கவனிக்கிறானா என பார்க்க விரும்புவார்கள். அவன் எங்கேயாவது உட்காரட்டும் என விட்டுவிடாமல் தங்களோடு உட்கார வைத்தால்தான் இதைச் செய்ய முடியும்.
ஆனால், சபை நீக்கம் செய்யப்பட்ட பிள்ளை பெற்றோரோடு சேர்ந்து வாழவில்லை என்றால் என்ன செய்வது? அவன் பெற்றோரோடு சேர்ந்து கூட்டங்களில் உட்கார முடியாதா? சபை நீக்கம் செய்யப்பட்ட உறவினரோடு தொடர்புகொள்ளும் விஷயத்தில் ஒரு கிறிஸ்தவருக்கு இருக்க வேண்டிய மனநிலையைப் பற்றி நம்முடைய பிரசுரங்கள் ஏற்கெனவே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றன.b ஆனால், சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கூட்டங்களின்போது தன் குடும்பத்தினரோடு அமைதியாக உட்காருவதற்கும் தேவையில்லாமல் அவரோடு கூட்டுறவுகொள்ள குடும்பத்தினர் வாய்ப்பு தேடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சத்தியத்தில் நிலைத்திருக்கிற குடும்ப அங்கத்தினர்களுக்கு, சபை நீக்கம் செய்யப்பட்டவரோடு நடந்துகொள்வது பற்றி சரியான மனப்பான்மை இருந்தால்... சபை நீக்கம் செய்யப்பட்டவருடன் தொடர்புகொள்வது சம்பந்தமான பைபிளின் அறிவுரைகள்மீது மதிப்பு இருந்தால்... கூட்டங்களில் சேர்ந்து உட்காருவது பற்றி தேவையில்லாமல் கவலைப்பட வேண்டியதில்லை.—1 கொ. 5:11, 13; 2 யோ. 11.
எனவே, சபை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் சரியான விதத்தில் நடந்துகொள்கிறார் என்றால் தன் வீட்டாருடனோ வேறொருவருடனோ உட்காருவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஒருவர் இங்குதான் உட்கார வேண்டும் என சொல்வது சில சமயங்களில் நிறையப் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம். குடும்பத்தினர் உட்பட சபையார் எல்லோருமே சபை நீக்கம் சம்பந்தமான பைபிளின் நியமத்தை மதிக்கிறவர்களாக, அதே சமயத்தில் மற்ற சகோதரர்களை இடறலடையச் செய்யாதவர்களாக இருந்தால், கூட்டங்களில் எங்கு உட்கார வேண்டும் என்பதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
a இந்தக் கட்டுரை வயது வராத சபை நீக்கம் செய்யப்பட்ட பிள்ளையை ஓர் ஆணாகக் குறிப்பிட்டாலும் இதிலுள்ள விஷயங்கள் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
b கடவுளது அன்பு புத்தகம், பக்கங்கள் 237-239-ஐப் பாருங்கள்.