பேச்சுத்தொடர்பு கொள்பவராய் இருங்கள்!
1 பிரசங்கித்து சீஷராக்கும் நம் வேலையை செய்து முடிப்பதற்கு, நாம் மற்றவர்களுக்கு தகவலை அளிக்க வேண்டும். (மத். 24:14; 28:19, 20) பேச்சுத்தொடர்பு கொள்வது என்பது நண்பர்கள் மத்தியில்கூட சவாலாக இருக்கலாம். முன்பின் தெரியாதவர்களிடம் நற்செய்தியை தெரியப்படுத்த எது நமக்கு உதவி செய்யும்?
2 அந்நியர் என்ற நிலையிலிருந்து நண்பராக: ஊழியத்தில் சந்திப்பவர்களின் இடத்தில் உங்களை வைத்து பார்க்க முயலுங்கள். இன்றைய உலகில், முன்பின் அறியாதவர்களை சிலர் சந்தேக கண்ணோட்டத்தில் பார்ப்பதோ அவர்களைக் கண்டு பயப்படுவதோகூட புரிந்துகொள்ளத்தக்கதே. இதனால் பேச்சுத்தொடர்பு தடைபடலாம். நாம் சந்திப்பவர்களுக்கு, நம்மைப் பார்த்ததும் ஏற்படும் பயத்தை போக்க என்ன செய்யலாம்? ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே நம் அடக்கமான தோற்றத்தால் பேச்சுத்தொடர்பு கொள்கிறோம். நேர்த்தியான உடையும் கண்ணியமான தோற்றமும் பயத்தை போக்க உதவும்.—1 தீ. 2:9, 10.
3 பேச்சுத்தொடர்புக்கு அடுத்த உதவி, சாவகாசமான, சிநேகப்பான்மையான பாவனை. இது மற்றவர்களை சகஜமாக உணர செய்து சொல்வதைக் கேட்கும் மனநிலையில் வைக்கிறது. இதற்கு நல்ல தயாரிப்பு அவசியம். நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதைக் குறித்து மனதில் தெளிவாய் இருந்தால், நாம் அவ்வளவாக பதற்றப்பட மாட்டோம். இவ்வாறு நிதானத்தைக் கடைப்பிடிக்கையில் மற்றவர்கள் நம் செய்தியிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள். ஒரு சாட்சி தன்னை சந்திக்க வந்ததைக் குறித்து ஒரு பெண் சொல்வதாவது: “புன்னகை தவழும் அவர்களது முகத்தில் தெரிந்த அமைதியை என்னால் மறக்க முடியாது. அது என்னை ஈர்த்துவிட்டது.” அந்த பெண் நற்செய்திக்கு செவிசாய்க்க இது வழிவகுத்தது.
4 ஈர்க்கும் குணங்கள்: மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறையை மனப்பூர்வமாக காட்ட வேண்டும். (பிலி. 2:4) உரையாடுகையில் மற்றவரை பேசவிடாமல் நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்பது அதற்கு ஒரு வழியாகும். உண்மையில், பேச்சுத்தொடர்பு என்பது செவிகொடுத்து கேட்பதையும் உட்படுத்துகிறது. நாம் பேசுவதை கேட்பவர்களின் மனதிலுள்ளதை சொல்லச் சொல்லி, அவர்கள் சொல்வதை கவனமாக கேட்டால், நாம் அவர்களிடம் அக்கறை வைத்திருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வார்கள். ஆகவே உங்களுக்கு செவிசாய்ப்பவர்கள் பேசும்போது, நீங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் விஷயத்தை அவசர அவசரமாக சொல்ல முயலாதீர்கள். நேர்மையுடன் பாராட்ட முடிந்த சமயங்களில் பாராட்டுங்கள், உங்கள் குறிப்புகளை அவர்கள் சொல்பவற்றிற்கு ஏற்ப மாற்றி அமையுங்கள். அவர்கள் மிகவும் முக்கியமாக கருதும் விஷயங்களைப் பற்றி ஏதேனும் சொன்னதாக தெரிந்தால், அந்த விஷயங்களுக்கு ஏற்ப உங்கள் பிரசங்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
5 அடக்கமும் மனத்தாழ்மையும் சுமுகமான பேச்சுத்தொடர்புக்கு உதவியாக இருக்கும். (நீதி. 11:2; அப். 20:19) இயேசு “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்ததால் மக்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனர். (மத். 11:29) மறுபட்சத்தில், தனக்கே முக்கியத்துவம் அளிக்கும் மனநிலை வெறுப்பையே ஏற்படுத்தும். ஆகவே, நம்மிடம் சத்தியம் உள்ளது என்று உறுதியாக நம்பினாலும், விடாப்பிடியாய் கருத்தைத் திணிக்கும் பாணியில் பேசுவதை தவிர்ப்பது ஞானமானது.
6 பைபிள் போதிப்பதற்கு விரோதமான நம்பிக்கைகள் ஒருவருடைய பேச்சில் வெளிப்பட்டால் என்ன செய்வது? அவரை சரிசெய்யும் பொறுப்பு நமக்கு உள்ளதா? ஆம், போகப் போக சரி செய்யலாம், ஆனால் முதல் சந்திப்பிலேயே அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. கேட்பவர் ஒத்துக்கொள்ள கடினமாக இருக்கும் பைபிள் போதனைகளைப் பற்றி சொல்வதற்கு முன், இருவருக்கும் பொதுவாக உள்ள விஷயங்களின் பேரில் தொடர்ந்து பேசுவது பெரும்பாலும் பயன்தரும். இதற்கு பொறுமையும் சாதுரியமும் அவசியம். இந்த விஷயத்தில், மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளிடம் சாட்சி பகரும்போது பவுல் நல்ல முன்மாதிரி வைத்தார்.—அப். 17:18, 22-31.
7 எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னலமற்ற அன்பு திறம்பட்ட வகையில் பேச்சுத்தொடர்பு கொள்பவர்களாவதற்கு நமக்கு உதவும். “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்த”வர்களிடம் இயேசு மனதுருகியது போலவே நாமும் உணர வேண்டும். (மத். 9:36) இதன் காரணமாக நாம் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து ஜீவனுக்கான பாதையில் செல்வதற்கு உதவ தூண்டப்படுவோம். நம்முடைய செய்தி அன்பின் செய்தி, எனவே அதை நாம் அன்பான முறையில் தொடர்ந்து அறிவிப்போமாக. இவ்வாறு சர்வலோகத்திலேயே தலைசிறந்த பேச்சுத்தொடர்பாளர்களாகிய யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுவோம்.