‘வீணானவற்றை’ நாடுவதை தவிருங்கள்
1 இன்று தகவல் தொடர்பு கொள்வதில் பிரபலமடைந்து வருவது ஈ-மெய்ல் ஆகும். இதன் மூலம் குடும்ப அங்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் இடையே தனிப்பட்ட அனுபவங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்வது சரியாக இருக்கலாம்; அதே சமயத்தில், ஈ-மெய்ல் வசதியை மட்டுக்கு மீறி பயன்படுத்துவதில் என்ன “வீணான” காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன?—நீதி. 12:11, NW.
2 ஈ-மெய்ல் பற்றிய எச்சரிக்கைகள்: ஈ-மெய்ல் வாயிலாக உடனுக்குடன் தங்களுக்கு செய்தி கிடைத்தால்தான் யெகோவாவின் அமைப்புடன் சிறந்த தொடர்பு வைத்திருப்பதுபோல் உணருவதாக சிலர் சொல்லிக் கொள்கின்றனர். இதில் அனுபவங்கள், பெத்தேல் நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்புகள், பேரழிவுகள் அல்லது துன்புறுத்துதல் சம்பந்தமான அறிக்கைகள் ஆகியவையும், ராஜ்ய ஊழியப் பள்ளிகளில் அறிவிக்கப்பட்ட ரகசியமாக வைக்க வேண்டிய தகவலும்கூட அடங்கும். அப்படிப்பட்ட செய்திகளை அனுப்ப மற்றவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது; இவர்கள் தங்கள் நண்பர்களுக்கு செய்தியை முந்தி தெரிவிப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
3 சில சமயங்களில், தகவலும் அனுபவங்களும் திரித்து அல்லது மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளன. அல்லது ஒருவேளை வெகு சுவாரஸ்யமாக சொல்ல முனைகையில், சிலர் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அப்படிப்பட்ட தகவல்களை அவசரப்பட்டு தெரிவிப்பவர்களுக்கு அநேக சமயங்களில் எல்லா உண்மைகளும் தெரிந்திருக்காது. (நீதி. 29:20) சில சந்தர்ப்பங்களில், ஒரு விஷயம் நம்ப முடியாததாக இருந்தாலும் சுவாரஸ்யமான விஷயமாக எல்லாரிடமும் பரப்பப்படுகிறது. சரியாக இல்லாத அல்லது தவறாக எண்ண வைக்கும் இப்படிப்பட்ட அறிக்கைகள், “கட்டுக்கதைக”ளின் வரிசையில் சேர்க்கப்படலாம்; இவை உண்மையான தேவபக்தியை ஆதரிப்பதில்லை.—1 தீ. 4:6, 7.
4 தவறான தகவலாக பின்னர் தெரியப் போகிற ஒன்றை நீங்கள் மற்றவர்களுக்கு சொன்னால், அதனால் ஏற்படும் வருத்தத்திற்கும் குழப்பத்திற்கும் ஓரளவு நீங்களே பொறுப்பேற்கிறீர்கள். தாவீதின் குமாரர்கள் அனைவருமே கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதாக மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஒரு செய்தியை தாவீது கேட்டபோது, வேதனையால் “தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்”டார். ஆனால் உண்மையில் இறந்திருந்ததோ ஒரேவொரு குமாரனே. அதுவும் துயர்தரும் விஷயமாக இருந்தாலும் இதை மிகைப்படுத்திக் கூறியபோதோ அது தாவீதுவின் துயரத்தை இன்னும் அதிகரிக்க செய்தது. (2 சா. 13:30-33) நம் சகோதரர்களில் எவரையும் தவறாக செயல்பட தூண்டும் அல்லது சோர்வில் ஆழ்த்திவிடும் எதையும் செய்ய நாம் விரும்ப மாட்டோம்.
5 கடவுளால் நியமிக்கப்பட்ட வழி: “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரை தகவலைக் கடத்தும் வழியாக நம் பரம தகப்பன் ஏற்பாடு செய்திருப்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். விசுவாச குடும்பத்தாருக்கு என்ன தகவல் சொல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பும், அதை “ஏற்ற வேளையில்” பகிர்ந்தளிக்கும் பொறுப்பும் அந்த “அடிமை”க்குத்தான் உள்ளது. இந்த ஆவிக்குரிய உணவு தேவராஜ்ய அமைப்பின் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. கடவுளால் நியமிக்கப்பட்ட அந்த வழியிடமே நம்பத்தக்க தகவலைப் பெற நாம் எதிர்பார்க்க வேண்டும்; இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் நபர்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது.—மத். 24:45, NW.
6 இன்டர்நெட் வெப்ஸைட்டுகள்: நம் அதிகாரப்பூர்வ இன்டர்நெட் வெப்ஸைட் விலாசம் இதுவே: www.watchtower.org. பொதுமக்களுக்கு தகவலை தெரிவிக்க இந்த வெப்ஸைட் போதுமானதாகும். எந்தத் தனிப்பட்ட நபரோ, குழுவோ, அல்லது சபையோ யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தகவலை வெப்ஸைட்டில் தயாரித்து அளிக்க வேண்டிய தேவையில்லை. சிலர் நம் பிரசுரங்களில் உள்ள தகவலை எல்லா வசனங்களுடனும் முழுமையாக ரெஃபரென்ஸுகளுடனும் வெளியிட்டுள்ளார்கள்; மாநாட்டு பேச்சுக்களின் நகல்களையும் நன்கொடை அடிப்படையில் அளித்திருக்கிறார்கள். இது லாபம் கருதி செய்யப்பட்டதோ இல்லையோ யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை மறுபதிப்பு செய்து எலக்ட்ரானிக் வடிவில் விநியோகிக்கும் பழக்கம் பிரசுரிப்போருக்கே உரிய எழுத்துரிமை சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறுவதாகும். சிலர் இதை தங்கள் சகோதரர்களுக்கு செய்யும் சேவையாக கருதலாம்; ஆனால் இவ்வாறு செய்வது அங்கீகரிக்கப்படுவதில்லை, இவ்வாறு இனி செய்யக்கூடாது.
7 எலக்ட்ரானிக் தகவல் தொடர்பை பயன்படுத்துகையில் நியாயத்தன்மையையும் தெளிந்த புத்தியையும் வெளிக்காட்டுவது, ‘அருமையும் இனிமையுமான சகல விதப் பொருள்களாலும்’ நம் மனம் நிறைந்துள்ளதை உறுதிப்படுத்தும்.—நீதி. 24:4.