நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்தல்
1 நீங்கள் சமீபத்தில் முழுக்காட்டப்பட்டிருந்தாலும் சரி, பல வருடங்களுக்கு முன்பு முழுக்காட்டப்பட்டிருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் நடந்த அந்த முக்கிய நிகழ்ச்சியை நினைவில் வைத்திருப்பீர்கள். முழுக்காட்டுதல் என்பது ஒரு முடிவு அல்ல; மாறாக, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து சேவை செய்யும் வாழ்க்கையின் ஓர் ஆரம்பமே. இது என்றென்றும் நிலைத்திருக்கக்கூடும். (1 யோ. 2:17) நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வது என்றால் என்ன?
2 கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றுங்கள்: இயேசுவின் முழுக்காட்டுதலுக்குப் பிறகு, அவர் “தம் பணியைத் தொடங்கி,” “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி”த்தார். (லூக். 3:23, பொ.மொ; 4:43) அதே விதமாகவே நாமும் யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்திருப்பதை முழுக்காட்டுதல் மூலம் காட்டிய போது, ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களானோம். பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய நமக்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டாலும், கிறிஸ்தவ ஊழியமே நம்முடைய பிரதான வேலையாக அல்லது வாழ்க்கைத் தொழிலாக இருக்க வேண்டும். (மத். 6:33) கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் பொருளையும் பதவியையும் அடைவதற்காக கடும் முயற்சி செய்வதற்கு பதிலாக, அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே தங்கள் ‘ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறார்கள்.’ (ரோ. 11:14) அப்படியென்றால், யெகோவாவுக்கு சேவை செய்யும் சிலாக்கியத்தை நீங்கள் மதித்துணருகிறீர்களா, அந்த சேவையை மேன்மைப்படுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்களா?
3 இயேசுவைப் போல நாமும் ‘பிசாசுக்கு எதிர்த்து நிற்க’ வேண்டும். (யாக். 4:7) இயேசுவின் முழுக்காட்டுதலுக்குப் பிறகு சாத்தான் அவரை சோதித்தான். அதேவிதமாகவே இன்று யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களை அவன் குறிவைத்திருக்கிறான். (லூக். 4:1-13) சாத்தானின் உலகம் நம்மை சூழ்ந்திருப்பதால், நம் மனதை கறைப்படுத்தும் அல்லது இருதயத்தை நச்சாக்கும் எதையும் தவிர்க்க, சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். (நீதி. 4:23; மத். 5:29, 30) கிறிஸ்தவர்கள் ‘கர்த்தருடைய போஜன பந்திக்கும் பேய்களுடைய போஜன பந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக் கூடாது’ என்று எச்சரிக்கப்படுகின்றனர். (1 கொ. 10:21) இதற்கு, தரம் குறைந்த பொழுதுபோக்கு, கெட்ட கூட்டுறவு, இன்டர்நெட்டினால் வரும் ஆபத்துகள் ஆகியவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்வதோடுகூட விசுவாசதுரோக போதனைகளையும் தவிர்க்க வேண்டும். இவற்றையும் சாத்தானின் மற்ற தந்திரங்களையும் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது, நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ நமக்கு உதவும்.
4 கடவுளுடைய ஏற்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ, யெகோவா தம்முடைய வார்த்தை மற்றும் கிறிஸ்தவ கூட்டங்களின் மூலமாக நமக்கு உதவி செய்கிறார். பைபிளை படிப்பதையும் யெகோவாவிடம் ஜெபிப்பதையும் தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். (யோசு. 1:8; 1 தெ. 5:17) கிறிஸ்தவ கூட்டங்களை மகிழ்ந்து அனுபவியுங்கள். (சங். 122:1) யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள்.—சங். 119:63.
5 யெகோவாவின் உதவியோடு நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ முடியும். தொடர்ந்து அவரை சேவிப்பதன் மூலம் என்றென்றும் மகிழ்ச்சி காண முடியும்.—சங். 22:26, 27; பிலி. 4:13.