சந்தர்ப்ப சாட்சி கொடுத்து யெகோவாவை துதியுங்கள்
1 யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் அவரை துதிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறோம். (சங். 96:2, 3; எபி. 13:15) அதற்கு சந்தர்ப்ப சாட்சியை ஒரு வழியாக நாம் பயன்படுத்தலாம். இன்று யெகோவாவின் வணக்கத்தாரில் அநேகர் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கப்பட்டதால் ராஜ்ய செய்தியை அறிந்துகொண்டார்கள்; அதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
2 ஒருவருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது, பெரும்பாலும் மற்றவர்களும் ராஜ்ய செய்தியைக் கேட்க வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, யாக்கோபுடைய கிணறு அருகில் சமாரிய பெண்ணிடம் இயேசு பேசியது, அநேகர் நற்செய்தியை ஆர்வத்தோடு கேட்க வழிநடத்தியது. (யோவா. 4:6-30, 39-42) அதேவிதமாக, பிலிப்பி பட்டணத்தில் பவுலும் சீலாவும் காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர்கள் காவற்காரனிடம் சாட்சி கொடுத்ததால் அவனும் அவனுடைய முழு குடும்பத்தாரும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டனர்.—அப். 16:25-34.
3 வாய்ப்புகள்: சந்தர்ப்ப சாட்சி கொடுக்க உங்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? சிலர், கடைகளுக்கு போகும்போதோ பொது போக்குவரத்துகளில் பிரயாணம் செய்யும்போதோ டாக்டருக்காக காத்திருக்கும்போதோ சாட்சி கொடுக்கின்றனர். இன்னும் சிலருக்கு, வேலை செய்யுமிடங்களிலும் பள்ளிகளிலும் இடைவேளையின்போது சாட்சி கொடுக்க முடிந்திருக்கிறது. சில சமயம் நம்முடைய பைபிள் பிரசுரங்களை மற்றவர்கள் கண்ணில் படும்படி வைப்பதே நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி கேட்க அவர்களை தூண்டலாம்.—1 பே. 3:15.
4 எப்படி ஆரம்பிப்பது: கூச்ச சுபாவமுள்ள ஏழு வயது சிறுமி ஒருத்தி தன் அம்மாவோடு கடைக்கு சென்றிருந்தாள். எல்லாரும் பிரசங்கிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அவள் சபை கூட்டத்தில் கேட்டிருந்ததால் இரண்டு பைபிள் சிற்றேடுகளை தன் பையில் போட்டுக்கொண்டாள். இந்தச் சிறுமியின் அம்மா கவுன்டர் பக்கம் பிஸியாக இருந்த சமயத்தில் இவள் ஒரு பெண்மணியிடம் பேசி சிற்றேட்டைக் கொடுத்தாள். அந்தப் பெண்மணியும் அன்பாகப் பேசி சிற்றேட்டை பெற்றுக்கொண்டார். அதன் பின்பு, எப்படி அவளால் அவ்வளவு தைரியமாக அந்தப் பெண்மணியுடன் பேச முடிந்தது என்று அவளுடைய அம்மா கேட்ட போது, “ஒன்னு, இரண்டு, மூணுன்னு சொல்லிட்டு, டாண்னு கிளம்பிட்டேன்!” என்றாள் அந்தச் சிறுமி.
5 சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு, அந்தச் சிறுமியைப் போல நம் அனைவருக்குமே ஆர்வம் தேவை. நமக்கு எது உதவும்? தைரியமாக பேசுவதற்கு ஜெபியுங்கள். (1 தெ. 2:2) அதோடு, உரையாடலை ஆரம்பிப்பதற்காக என்ன கேள்வியை அல்லது எந்தக் குறிப்பை பேசி ஆர்வத்தை தூண்டலாம் என்பதை முன்கூட்டியே உங்கள் மனதிலே தயாரியுங்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்று நம்புங்கள்.—லூக். 12:11, 12.
6 இவ்விதமாக, ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் அனைவரிடமும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது யெகோவாவை மகிமைப்படுத்துவோம்; நாமும் சந்தோஷத்தை பெறுவோம். ஜீவனுக்கான பாதையில் நடக்க யாருக்காவது உதவலாம்.