தொடர்ந்து மாறிவரும் உலகில் பிரசங்கித்தல்
1 எத்தனை சீக்கிரமாக நிலைமை மாறிவிடுகிறது! இயற்கைப் பேரழிவு, பொருளாதார நெருக்கடி, அரசியல் எழுச்சி, அனைவரும் அறிந்த திடுக்கிடும் சம்பவம் என ஏதாவது ஒன்று திடீரென பரபரப்பான பேச்சாகி விடலாம். ஆனால் அதே வேகத்தில் மக்களின் கவனமும் வேறுபக்கம் திரும்பிவிடலாம். (அப். 17:21; 1 கொ. 7:31) ஆகவே, தொடர்ந்து மாறிவரும் இவ்வுலகில் ராஜ்ய செய்தியை மக்களிடம் சொல்வதற்கு அவர்களுடைய கவனத்தை நாம் எப்படி சுண்டி இழுக்கலாம்?
2 மற்றவர்களின் கவலைகளை கண்டறியுங்கள்: ஜனங்களின் கவனத்தை சுண்டி இழுக்க ஒரு வழி, தற்போதைய நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுவது. தாம் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கடவுளோடு தங்கள் நிலைநிற்கை எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி உள்ளூர சிந்திக்கும்படி இயேசு அறிவுறுத்தினார்; அப்போது ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் மனதை ஆக்கிரமித்திருந்த சமீபத்திய விபத்துக்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். (லூக். 13:1-5) அதைப் போலவே, நாமும் நற்செய்தியை சொல்லுகையில் தற்போதைய செய்தித் துணுக்கு ஒன்றையோ நம் பிராந்தியத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினையையோ இணைத்துப் பேசுவது நல்லது. என்றாலும், அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகையில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அரசியல் விவகாரங்களிலோ, சமூக பிரச்சினைகளிலோ ஏதாவது ஒரு தரப்பினரை ஆதரித்துப் பேசிவிடக் கூடாது.—யோவா. 17:16.
3 ஜனங்கள் தற்போது எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்? ஏதாவது ஒரு கேள்வி கேட்டுவிட்டு, அவர்கள் சொல்லும் பதிலை கவனிப்பது மிகச் சிறந்த வழியாக இருக்கலாம். (மத். 12:34) ஜனங்கள்மீது நமக்கு இருக்கும் அக்கறை, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன் பேரில் சாதுரியமாக கேள்விகள் கேட்க நம்மைத் தூண்டும். ஒரு வீட்டுக்காரர் நம் கேள்விக்கு டக்கென்று எதையாவது சொல்லுகையில், அதுவே அந்த ஏரியாவில் வசிக்கும் அநேகருக்கு கவலை தரும் ஒரு விஷயம் என நாம் தெரிந்துகொள்ளலாம்; பின்பு அதை அடிப்படையாக வைத்தே சாட்சி கொடுத்துவிடலாம்.
4 பேசவிருக்கும் விஷயத்தை தயாரித்தல்: தொடர்ந்து மாறிவரும் உலகில் வெளி ஊழியத்திற்கென்று நாம் தயாரிக்கையில், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்தலாம். அதில் பக்கங்கள் 10-11-ல், தற்போதைய நிகழ்ச்சிகளை நாம் பேசும் விஷயத்தோடு இணைத்துச் சொல்வதற்கு உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, “குற்றச்செயல்களும்/பாதுகாப்பும்,” “தற்போதைய நிகழ்ச்சிகள்” ஆகிய தலைப்பின் கீழ் உள்ளன. இதுபோன்ற தகவலை அக்டோபர் 2000 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 7-லும் காணலாம். நீங்கள் பேசவிருக்கும் விஷயத்தை தயாரிக்கையில் பொருத்தமான ஒரு வசனத்தை சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள்.
5 நம் பிராந்தியத்தில் வசிப்பவர்களின் கவலைகள் தொடர்ந்து மாறிவருகின்றன என்பதை மனதில் வைத்து, அதற்கேற்றவாறு நாம் நற்செய்தியை சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதால், அவர்களது வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயத்தைப் பற்றி பேசுவோம். இவ்வாறு, தம் பண்புகளிலும் தராதரங்களிலும் மாறாதிருப்பவரைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் அநேகருக்கு உதவுவோம்.—யாக். 1:17.