ஆர்வத்தை தூண்ட சமீப சம்பவங்களை பயன்படுத்துங்கள்
1 உங்கள் ஊழியம் உற்சாகமாக இருக்கவும் பைபிள் செய்தியில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டவும் வேண்டுமா? அறிமுகக் குறிப்புகளை சற்று எண்ணிப் பாருங்கள். இன்று உலகத்திலும் உங்கள் சமுதாயத்திலும் நடக்கும் சம்பவங்களை எடுத்துரைத்து உரையாடலைத் துவங்குங்கள். உள்ளூர், தேசிய, சர்வதேசிய அளவில் நடந்த சமீபத்திய நிகழ்ச்சிக்கு கவனத்தை திருப்பலாம். காலம் மாற மாற செய்தியும் மாறிக்கொண்டே இருக்கின்றன. (1 கொ. 7:31) பின்வரும் உதாரணங்களை கவனியுங்கள்.
2 பொருளாதாரப் பிரச்சினைகளும், விலைவாசியும் மக்களின் அக்கறைக்குரிய விஷயங்கள். அதனால் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ [எதில் என குறிப்பிட்டு]-ல் “மீண்டும் விலைவாசி அதிகரிக்கிறது என்ற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டீர்களா?” அல்லது பெரிய நிறுவனம் ஒன்றில், தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தால், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பேசலாம். கலந்துரையாடலை எவ்வாறு தொடர விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, பின்வருமாறு கேட்கலாம்: “நம் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு கஷ்டம் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” அல்லது “நம் வாழ்க்கையை நடத்த நாம் இப்போது எவ்வளவு கஷ்டப்படுகிறோமோ அப்படித்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக்கொண்டிருப்போம் என நீங்கள் நினைக்கிறீர்களா?”
3 வன்முறை செய்திகள் மற்றும் குடும்பங்களிலும் பள்ளி பிள்ளைகள் மத்தியிலுமுள்ள அவல நிலை, கலந்துரையாடலுக்கு மற்றொரு ஏதுவாக அமைகிறது. நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “[சமுதாயத்தில் நடந்த பயங்கர சம்பவத்தை குறிப்பிட்டு]-ஐப் பற்றி செய்தித்தாளில் நீங்கள் வாசித்தீர்களா?” பின்பு, “உலகத்தில் இவ்வளவு வன்முறை இருப்பதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்றோ, “நாம் பாதுகாப்பாக உணரும் காலம் வரும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றோ கேட்கலாம்.
4 உலகத்தின் பல்வேறு இடங்களில் பெரும் நாசத்தை ஏற்படுத்திய வெள்ளம், பூமியதிர்ச்சி, உள்நாட்டு சண்டை போன்றவையும் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களாகும். உதாரணமாக, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “[இயற்கை சேதத்தின் பெயரைச் சொல்லி] இதற்கு கடவுள்தான் காரணமா?” அல்லது சமீபத்திய உள்நாட்டு கலவரத்தைக் குறிப்பிட்டு, இவ்வாறு சொல்லலாம்: “எல்லோரும் சமாதானம் வேண்டும் என விரும்பினாலும், ஏன் அதை அடைவது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?”
5 சமீபத்திய செய்திகளை தெரிந்துவைத்திருங்கள். அவற்றை ஊழியத்தின்போது அறிமுகங்களில் பயன்படுத்தலாம். இதுசம்பந்தமாக உதவியளிக்கும் அநேக ஆலோசனைகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கம் 11-ல், “தற்போதைய நிகழ்ச்சிகள்” என்ற உபதலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களில் யாரையும் ஆதரித்து பேசாதீர்கள், நடுநிலையை காத்துக்கொள்ளுங்கள். மாறாக, மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுளுடைய ராஜ்யமே தீர்வு என்று நேரடியாக பைபிள் வசனத்தினிடமாக கவனத்தை திருப்புங்கள்.