தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பது மகிழ்ச்சி தருகிறது
1 இயேசு தம் 70 சீஷர்களை பிரசங்கிக்க அனுப்புகையில், என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று கற்பித்தார்; இரண்டிரண்டு பேராக அனுப்பினார்; அவர்கள் ஊழியம் செய்ய வேண்டிய பிராந்தியம் எதுவென்றும் சொல்லி அனுப்பினார். இது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. (லூக். 10:1-17) அதைப் போலவே இன்று, தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பது, பிரசங்க வேலையில் கடவுளுடைய ஜனங்களை பயிற்றுவிக்கவும், ஒழுங்கமைக்கவும், ஊக்குவிக்கவும் உதவுகிறது.
2 மூப்பர்கள் முன்நின்று நடத்துகிறார்கள்: பிரசங்க வேலையில் தவறாமல் பங்கு கொள்ள மூப்பர்கள் பெருமளவு உதவுகிறார்கள். வார நாட்களில் ஊழியத்திற்கான ஏற்பாடுகளை ஊழிய கண்காணி முன்நின்று நடத்துகிறார். அந்தந்த புத்தகப் படிப்பு கண்காணி அந்தந்த தொகுதியை ஊழியத்திற்காக, விசேஷமாக வார இறுதி நாட்களில் ஊழியத்திற்காக ஒழுங்கமைப்பதில் பொறுப்பேற்கிறார். சில சமயங்களில், காவற்கோபுர படிப்பு முடிந்த கையோடு சபையார் அனைவரும் சேர்ந்து வெளி ஊழியத்திற்கு செல்ல ஏற்பாடு செய்கின்றனர். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்தந்த புத்தகப் படிப்பு கண்காணி தனது தொகுதியை கவனித்துக்கொள்ளுகிறார்.
3 “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்”: வெளி ஊழியக் கூட்டத்தை நடத்துகையில் நியமிக்கப்பட்ட சகோதரர் குறித்த நேரத்தில் ஆரம்பித்து 10 அல்லது 15 நிமிடங்களில் அதை முடித்துவிட வேண்டும். ஜெபம் செய்து முடிப்பதற்கு முன்னதாகவே, யார் யார் சேர்ந்து ஊழியம் செய்வது, எந்தப் பகுதியில் ஊழியம் செய்வது (புத்தகப் படிப்பு கண்காணிகள் மேற்கூறப்பட்டபடி கவனித்துக் கொள்ள முடியாத நிலையில்) என்றெல்லாம் சொல்லிவிட வேண்டும். இது, பிராந்தியத்தில் பிரஸ்தாபிகள் கும்பலாக நிற்பதை தவிர்க்க உதவுகிறது; இவ்வாறு நிற்பது, நம் வேலையின் மதிப்பை குறைப்பது மட்டுமல்லாமல், நம் ஊழியத்தைக் கண்டு எரிச்சலடைபவர்கள் ஆட்சேபம் தெரிவிக்க எளிதில் வழிவகுத்துவிடும். இப்படி முன்னதாகவே சொல்லிவிடுவது, “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்ற பவுலின் ஆலோசனைக்கு இசைவாகவும் இருக்கிறது. (1 கொ. 14:40) வெளி ஊழிய கூட்டத்திற்கு வருபவர்கள், குறித்த நேரத்திற்கு வந்து விடுவதன் மூலமும், முன்நின்று நடத்துபவருடன் ஒத்துழைப்பதன் மூலமும், கூட்டம் முடிந்ததும் தாமதிக்காமல் பிராந்தியத்திற்குச் செல்வதன் மூலமும், இந்த ஏற்பாட்டுடன் நன்கு ஒத்துழைக்க வேண்டும்.
4 ஐக்கியத்துடன் நெருங்கி வருதல்: தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கும்போது, சபையிலுள்ள மற்றவர்களை அறிந்துகொள்ள நமக்கு மிகச் சிறந்த வாய்ப்பளிக்கும். எவருடனாவது சேர்ந்து ஊழியம் செய்ய முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்வதற்கு ஆட்சேபணை இல்லை; ஆனாலும் அப்படி செய்யாமல் வெளி ஊழியக் கூட்டத்திற்கு வரும்போது நல்ல பலன்கள் கிடைக்கலாம். நமக்கு நன்கு பரிச்சயமாகாதவருடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படி சொல்லப்படுகையில் நாம் அன்பில் ‘விசாலமடைவதற்கு’ வாய்ப்பு கிடைக்கும்.—2 கொ. 6:11-13, NW.
5 தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பது நமக்கு உற்சாகமளிக்கிறது; “சத்தியத்திற்கு உடன் வேலையாட்களாயிருக்கும்படி” ஒருவருக்கொருவர் நெருங்கி வரச் செய்கிறது. (3 யோ. 8) ஆகவே, தொகுதியோடு சேர்ந்து சாட்சி கொடுப்பதில் முழுமையாக கலந்துகொள்வோமாக!