புத்துணர்ச்சியளிக்கும் வேலை
1 பைபிளிலுள்ள செய்தியை ஏற்றுக்கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் அனைவரும் புத்துணர்ச்சி பெறுவர். (சங். 19:7, 8) இந்தச் செய்தி, பொய்ப் போதகங்களிலிருந்தும் தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் ஜனங்களுக்கு விடுதலையளித்து எதிர்காலத்திற்கான நிஜ நம்பிக்கையை அளிக்கிறது. என்றாலும், நற்செய்தியை கேட்பவர்கள் மட்டுமே இதனால் நன்மையடைவதில்லை. புத்துணர்ச்சியளிக்கும் பைபிள் சத்தியங்களை மற்றவர்களிடம் சொல்பவர்களும் புத்துணர்ச்சி பெறுகின்றனர்.—நீதி. 11:25.
2 ஊழியம் தரும் புத்துணர்ச்சி: பிரசங்கித்து சீஷராக்கும் வேலையை உட்படுத்தும் கிறிஸ்தவ சீஷருக்குரிய நுகத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ‘புத்துணர்ச்சி பெறுவார்கள்’ என்று இயேசு கூறினார். (மத். 11:29, NW) மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பது புத்துணர்ச்சியளிக்கும் வேலை என்பதை அவரே ருசித்தார். அது அவருக்கு போஜனத்தைப் போல இருந்தது. (யோவா. 4:34) பிரசங்க வேலைக்காக 70 சீஷர்களை அவர் அனுப்பியபோது, அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் யெகோவா ஆசீர்வதித்ததைக் கண்டு அகமகிழ்ந்தனர்.—லூக். 10:17.
3 அவ்வாறே இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையில் ஈடுபட்டு, புத்துணர்ச்சி பெறுகிறார்கள். ஒரு சகோதரி சொன்னதாவது: ‘என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் நோக்கத்தையும் தருவதால் ஊழியம் உண்மையில் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஊழியத்தில் பங்குகொள்கையில் சொந்த பிரச்சினைகளும் அன்றாட கவலைகளும் அவ்வளவு பெரிதாக தோன்றுவதில்லை.’ ஆர்வத்துடன் ஊழியம் செய்யும் மற்றொரு சகோதரி சொன்னதாவது: ‘யெகோவா நிஜமானவர் என்பதை ஊழியமே ஒவ்வொரு நாளும் உணர வைக்கிறது. வேறு எதிலும் கிடைக்காத மன அமைதியையும் உள்ளான சந்தோஷத்தையும் அது எனக்கு தருகிறது.’ ‘தேவனுக்கு உடன் வேலையாட்களாய்’ இருப்பது நமக்கு எப்பேர்ப்பட்ட சிலாக்கியம்!—1 கொ. 3:9.
4 கிறிஸ்துவின் நுகம் மெதுவானது: ‘மும்முரமாய் பிரயாசப்படுங்கள்’ என்று கிறிஸ்தவர்களாகிய நமக்கு அறிவுறுத்தப்பட்டாலும், நம் சக்திக்கு மிஞ்சி பிரயாசப்படும்படி இயேசு வற்புறுத்துவதில்லை. (லூக். 13:24, NW) சொல்லப்போனால், ‘அவரோடுகூட அவருடைய நுகத்தின் கீழ் வரும்படி’ நம்மை அன்புடன் அழைக்கிறார். (மத். 11:29, NW அடிக்குறிப்பு) எனவே, கஷ்டமான சூழ்நிலைகளுடன் போராடுபவர்கள், சிறிதளவே ஊழியத்தில் பங்கு பெற முடிந்தாலும், அவர்களுடைய மனப்பூர்வமான சேவை கடவுளின் இதயத்தை மகிழ்விக்கிறது என்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.—மாற். 14:6-8; கொலோ. 3:24.
5 தம் பெயருக்காக செய்யப்படும் எந்த வேலையையும் மறந்துவிடாமல் அதை மதிப்புள்ளதாக கருதும் கடவுளை சேவிப்பது எவ்வளவாய் புத்துயிரளிக்கிறது! (எபி. 6:10) அவருக்கு நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்வதற்காக எப்பொழுதும் பாடுபடுவோமாக.