மனத்தாழ்மையை தரித்துக்கொள்ளுங்கள்
1 ஓர் இளம் மேய்ப்பன் யெகோவாவில் வைத்த நம்பிக்கையால் மாவீரனை வென்று வீழ்த்தினான். (1 சா. 17:45-47) ஒரு செல்வந்தர் தனக்கு வந்த துன்பங்களை எல்லாம் பொறுமையோடு சகித்தார். (யோபு 1:20-22; 2:9, 10) கடவுளுடைய குமாரன், தாம் போதித்தவற்றிற்கான மகிமையை தம் பிதாவுக்கு செலுத்தினார். (யோவா. 7:15-18; 8:28) இந்த ஒவ்வொரு உதாரணத்திலும் மனத்தாழ்மை முக்கிய பங்கு வகித்தது. அதைப் போலவே, இன்று நாம் எதிர்ப்படும் சூழ்நிலைகளை சமாளிக்கவும் நமக்கு மனத்தாழ்மை அத்தியாவசியம்.—கொலோ. 3:12.
2 பிரசங்கிக்கையில்: கிறிஸ்தவ ஊழியர்களான நாம் எல்லா விதமான ஆட்களிடமும் நற்செய்தியை மனத்தாழ்மையோடு அறிவிக்கிறோம். எந்த இனத்தை, கலாச்சாரத்தை அல்லது பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள் என நாமே முடிவு செய்துவிடுவதில்லை. (1 கொ. 9:22, 23) சிலர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலோ கர்வத்தோடு ராஜ்ய செய்தியை நிராகரித்தாலோ நாமும் பதிலுக்கு அதேபோல் நடந்துகொள்வதில்லை. மாறாக, பாத்திரமானவர்களை தொடர்ந்து பொறுமையோடு தேடுகிறோம். (மத். 10:11, 14) நம் அறிவாலோ கல்வித்திறமையாலோ மற்றவர்களை கவர முயலுவதற்கு பதிலாக கடவுளுடைய வார்த்தையிடம் கவனத்தை திருப்புகிறோம்; ஏனெனில், நாம் சொல்லும் எப்படிப்பட்ட சொற்களையும்விட அதற்கே தூண்டுவிக்கும் வல்லமை பெருமளவு இருப்பதை உணர்ந்திருக்கிறோம். (1 கொ. 2:1-5; எபி. 4:12) இயேசுவைப் போல நாமும் எல்லா மகிமையையும் யெகோவாவிற்கே செலுத்துகிறோம்.—மாற். 10:17, 18.
3 சபையில்: கிறிஸ்தவர்கள் ‘ஒருவருக்கொருவர் . . . மனத்தாழ்மையை அணிந்துகொள்ள’ வேண்டும். (1 பே. 5:5) நம் சகோதரர்களை நம்மைவிட மேலானவர்களாக கருதினால், அவர்கள் நமக்கு சேவை செய்யும்படி எதிர்பார்ப்பதற்கு பதிலாக நாம் அவர்களுக்கு சேவை செய்வதற்கு வாய்ப்புகளை தேடுவோம். (யோவா. 13:12-17; பிலி. 2:3, 4) ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் நம் தகுதிக்கு கீழானவை என்று நினைக்க மாட்டோம்.
4 ‘அன்பினால் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ள’ மனத்தாழ்மை நமக்கு உதவும், இதனால் சபையில் சமாதானமும் ஐக்கியமும் பெருகும். (எபே. 4:1-3, NW) முன்நின்று நம்மை வழிநடத்த நியமிக்கப்பட்டிருப்போருக்கு கீழ்ப்படிந்திருக்க அது நமக்கு உதவும். (எபி. 13:17) நமக்கு கொடுக்கப்படும் எப்படிப்பட்ட ஆலோசனையையும் அல்லது சிட்சையையும் ஏற்றுக்கொள்ள அது நம்மை தூண்டும். (சங். 141:5) சபையில் நமக்கு கிடைக்கும் எந்தவொரு பொறுப்பையும் நாம் கவனித்துக் கொள்ளும்போது யெகோவா மீது சார்ந்திருக்கவும் மனத்தாழ்மை நம்மை உந்துவிக்கும். (1 பே. 4:11) தாவீதைப் போல, சொந்த திறமையினால் அல்ல கடவுளுடைய ஆசீர்வாதத்தினாலேயே வெற்றி கிடைக்கும் என்பதை நாம் உணருகிறோம்.—1 சா. 17:37.
5 நம் தேவனுக்கு முன்பாக: மிக முக்கியமாக, நாம் ‘கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின் கீழ் நம்மைத் தாழ்த்த’ வேண்டும். (1 பே. 5:6, பொ.மொ.) நாம் கடினமான சூழ்நிலைகளை எதிர்த்து போராடுகையில் கடவுளுடைய ராஜ்யம் எப்போதுதான் விடுதலை தருமோ என ஏங்கலாம். இருந்தாலும், நாம் தாழ்மையோடு பொறுமையை கடைப்பிடிக்கிறோம்; யெகோவா தம்முடைய உரிய காலத்தில் தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம். (யாக். 5:7-11) உத்தமத்தைக் காத்துக்கொண்ட யோபுவைப் போலவே, ‘யெகோவாவின் திருநாமம் துதிக்கப்பட’ வேண்டும் என்பதே நமது முக்கிய அக்கறையாகும்.—யோபு 1:21, தி.மொ.
6 தீர்க்கதரிசியான தானியேல் ‘தன் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்மைப்படுத்தினார்’; இதனால் யெகோவாவின் தயவையும் அநேக அருமையான சிலாக்கியங்களையும் பெற்றார். (தானி. 10:11, 12, NW) “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என்பதை உணர்ந்தவர்களாக நாமும் மனத்தாழ்மையை தரித்துக்கொள்வோமாக.—நீதி. 22:4.