யெகோவாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுதல்
1 “சத்தியத்தில் 20 வருஷத்துக்கும் அதிகமாக, வெறுமனே கூட்டங்களுக்குப் போவதும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதுமாக காலத்தை ஓட்டியிருக்கிறேன்” என ஒப்புக்கொள்கிறார் ஒரு கிறிஸ்தவ சகோதரி. “இவை முக்கியமானவையாக இருந்தாலும் கஷ்ட காலங்களை சமாளிக்க இவை மட்டுமே எனக்குப் பலத்தைக் கொடுக்காது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறேன். . . . உண்மையிலேயே யெகோவாவை அறிவதற்கும் அவரை நேசிப்பதற்கும், அவருடைய மகன் நமக்குக் கொடுத்திருப்பவற்றிற்குப் போற்றுதல் காட்டுவதற்கும் என் எண்ணத்தில் மாற்றம் செய்து அர்த்தமுள்ள விதத்தில் படிப்பதற்கு ஆரம்பிக்க வேண்டுமென இப்போது உணருகிறேன்” என அவர் கூறுகிறார்.
2 யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்க்க முயற்சி தேவைப்படுகிறது. அதற்கு, தவறாமல் கிறிஸ்தவ காரியங்களில் ஈடுபடுவது மட்டும் போதாது. தவறாமல் யெகோவாவுடன் நாம் தொடர்புகொள்ளாமல் போனால், காலப்போக்கில் அவர், முன்பு நெருங்கிய நண்பராக இருந்து இப்போது தொடர்பில்லாதிருக்கும் ஒருவரைப் போல் நமக்கு ஆகிவிடுவார். (வெளி. 2:4) தனிப்பட்ட படிப்பும் ஜெபமும் யெகோவாவுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள எப்படி உதவும் என்பதை நாம் ஆராய்வோம்.—சங். 25:14, NW.
3 ஜெபமும் தியானமும் முக்கியம்: இருதயத்தைப் பேணிக் காக்கும் தனிப்பட்ட படிப்புக்கு, கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய குறிப்புகளைக் கோடிடுவதும், குறிப்பிடப்பட்டுள்ள வேதவசன பகுதிகளை எடுத்துப் பார்ப்பதும் மட்டும் போதாது. அந்தத் தகவல் யெகோவாவின் வழிகளையும் தராதரங்களையும் குணங்களையும் பற்றி என்ன சொல்கிறது என தியானிக்கவும் வேண்டும். (யாத். 33:13) ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்வது நம் உணர்ச்சிகளைப் பாதிக்கிறது, நம் வாழ்க்கையைக் குறித்து சிந்திக்க வைக்கிறது. (சங். 119:35, 111) யெகோவாவுடன் நெருங்கி வருவதே தனிப்பட்ட படிப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். (யாக். 4:8) கருத்தூன்றி படிப்பதற்கு நேரமும் சரியான சூழலும் தேவை; தவறாமல் படிப்பதற்கு கட்டுப்பாடும் தேவை. (தானி. 6:10) பம்பரமாய் சுழலும் வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் அருமையான குணங்களைத் தியானிப்பதற்கு நேரத்தை ஒதுக்குகிறீர்களா?—சங். 119:147, 148; 143:5.
4 அர்த்தமுள்ள தனிப்பட்ட படிப்புக்கு இதயப்பூர்வமாக ஜெபிப்பதும் முக்கியம். பைபிள் சத்தியங்கள் நம் இருதயத்தின் உணர்ச்சிகளை தட்டியெழுப்பி, “பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி” நம்மை தூண்டுவிப்பதற்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி நமக்கு வேண்டும். (எபி. 12:28) எனவே ஒவ்வொரு முறை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பும் யெகோவா தம்முடைய ஆவியை நமக்குத் தரும்படி மன்றாட வேண்டும். (மத். 5:3, NW அடிக்குறிப்பு) வேதவசனங்களைக் குறித்து தியானிக்கையிலும், யெகோவாவின் அமைப்பு கொடுக்கும் பைபிள் அடிப்படையிலான புத்தகங்களைப் பயன்படுத்துகையிலும் நம் இதய கதவுகளை யெகோவாவுக்குத் திறக்கிறோம். (சங். 62:8) இப்படி படிப்பது வணக்கத்தின் ஒரு பாகமாகும், இதன் மூலம் யெகோவாவிடமுள்ள நம் பக்தியை வெளிக்காட்டுகிறோம், அவருடனுள்ள நெருக்கத்தை பலப்படுத்திக் கொள்கிறோம்.—யூ. 20, 21.
5 எல்லாருடனுள்ள உறவைப் போலவே, யெகோவாவுடனுள்ள நம் உறவும் வாழ்நாள் முழுவதும் வளர்வதற்கு அதை நாம் எப்போதும் பேணிக் காக்க வேண்டும். எனவே, கடவுள் நம்மிடம் நெருங்கி வருவார் என்பதை அறிந்தவர்களாக நாம் அவரிடம் நெருங்கி வருவதற்கு ஒவ்வொரு நாளும் நேரத்தை வாங்குவோமாக.—சங். 1:2, 3; எபே. 5:15, 16, NW.
[கேள்விகள்]
1. தவறாமல் ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபடுவதைக் குறித்து ஒரு சகோதரி என்ன உணர்ந்தார்?
2. யெகோவாவுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
3. தனிப்பட்ட படிப்பில் எப்படிப்பட்ட அணுகுமுறை கடவுளிடம் நெருங்கி வர நமக்கு உதவும்?
4. தனிப்பட்ட படிப்புக்கு முன்பாக ஜெபிப்பது, யெகோவாவுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள எப்படி உதவுகிறது?
5. ஒவ்வொரு நாளும் கடவுளுடைய வார்த்தையைத் தியானிப்பது நமக்கு ஏன் முக்கியம்?