கிறிஸ்துவின் சிந்தையை பின்பற்றுங்கள்
1 கடவுளுடைய குமாரனாகிய இயேசுவை நாம் பார்த்ததே இல்லை; இருந்தாலும் அவரது வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி எழுதப்பட்ட பதிவு இருப்பதால் உண்மையிலேயே அவரை நேசிக்க ஆரம்பித்திருக்கிறோம். (1 பே. 1:8) பிதாவின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து பரலோகத்திலிருந்த உயர்ந்த ஸ்தானத்தை விட்டுவிட்டு அவர் பூமிக்கு வந்தார். மனிதராக, தன்னலம் கருதாமல் மற்றவர்களுக்குச் சேவை செய்தார்; அத்துடன் மனிதர்களுக்காக தம் ஜீவனையே கொடுத்தார். (மத். 20:28) “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. அவர் காண்பித்த சுயதியாக மனப்பான்மையை நாம் எப்படி பின்பற்றலாம்?—பிலி. 2:5-8.
2 களைப்படையும்போது: இயேசு பரிபூரண மனிதராக இருந்தபோதிலும் களைப்புற்றார். ஒருசமயம் அவர் ‘பிரயாணத்தினால் இளைப்படைந்தபோதிலும்,’ ஒரு சமாரிய பெண்ணிடம் முழுமையாக சாட்சி கொடுத்தார். (யோவா. 4:6) இன்று அநேக கிறிஸ்தவர்கள் அதே போன்ற பிரச்சினையை எதிர்ப்படுகிறார்கள். வார நாட்களில் வேலை செய்து களைத்துப் போன பிறகு பிரசங்க வேலையில் பங்குகொள்வதற்கு தெம்பு இல்லாததைப் போன்று உணரலாம். ஆனால் கிறிஸ்தவ ஊழியத்தில் தவறாமல் ஈடுபடும்போது நாம் ஆவிக்குரிய புத்துணர்ச்சி பெறுவோம்.—யோவா. 4:32-34.
3 இன்னொரு சமயத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக தனிமையான இடத்திற்குப் போனார்கள். எனினும் அதை அறிந்த பெரும் திரளானோர் அவர்களுக்கு முன்பு அங்கு ஓடிப் போனார்கள். ஆனால் இயேசு எரிச்சலடையாமல், “அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத்” தொடங்கினார். (மாற். 6:30-34) பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும் நடத்துவதற்கும் அதைப் போன்ற மனப்பான்மையே நமக்கும் தேவைப்படுகிறது. விடாமுயற்சியும் ஜனங்களிடம் உண்மையான அன்பும் தேவை. தற்போது உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு இல்லையென்றால் அது கிடைக்கும் வரை முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.
4 ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுங்கள்: ஆவிக்குரிய காரியங்களிடம் அதிக கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு துணைப் பயனியர் சேவை நமக்கு உதவலாம். “என் சிநேகிதியின் அம்மா தன்னுடன் சேர்ந்து ஒரு மாதம் துணைப் பயனியர் ஊழியம் செய்யும்படி எங்கள் இருவரையும் உற்சாகப்படுத்தினார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஊழியம் செய்ததில் உண்மையிலேயே எனக்கு சந்தோஷம். சகோதர, சகோதரிகளுடன் இன்னும் நன்றாக பழகி அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்ததற்காக சந்தோஷப்பட்டேன், சீக்கிரத்தில் அவர்கள் எல்லாரும் என் குடும்பத்தாரைப் போல ஆகிவிட்டார்கள். மற்றவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசுவதற்கும் அருமையான ராஜ்ய சத்தியங்களை அவர்களுக்கு போதிப்பதற்கும் கிடைத்த நிறைய வாய்ப்புகளுக்காக சந்தோஷப்பட்டேன். இவையனைத்தும் யெகோவாவிடமும் அவருடைய அமைப்பிடமும் நெருங்கி வந்ததைப் போல் என்னை உணரச் செய்தன” என ஓர் இளம் சகோதரி எழுதினாள்.—சங். 34:8.
5 நம் அபூரணத்திற்கும் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற விருப்பத்திற்கும் இடையே நாம் அனைவரும் போராடி வருகிறோம். (ரோ. 7:21-23) கடினமாக உழைக்க மனமில்லாதிருக்கும் இவ்வுலகின் மனப்பான்மையை நாம் எதிர்க்க வேண்டும். (மத். 16:22, 23) அவ்வாறு எதிர்த்து வெற்றி பெறுவதற்கு யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியைத் தந்து நமக்கு உதவுவார். (கலா. 5:16, 17) கடவுளுடைய நீதியான புதிய உலகில் தப்பிப்பிழைக்க காத்திருக்கும் நாம், ராஜ்ய அக்கறைகளையும் பிறருடைய அக்கறைகளையும் நம்முடைய அக்கறைகளுக்கு மேலாக வைப்பதன் மூலம் இயேசுவின் சிந்தையை பின்பற்றுவோமாக.—மத். 6:33; ரோ. 15:1-3.
[கேள்விகள்]
1. இயேசு எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டினார்?
2. என்ன பிரச்சினையை அநேக கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகிறார்கள், இதை சமாளிக்க எது அவர்களுக்கு உதவலாம்?
3. போதிப்பதில் இயேசுவிற்கு இருந்த ஆர்வத்தை நாம் எப்படி பின்பற்றலாம்?
4. கிறிஸ்துவின் சிந்தையை பின்பற்ற துணைப் பயனியர் சேவை நமக்கு எப்படி உதவலாம்?
5. இயேசுவின் சிந்தையை பின்பற்ற நாம் ஏன் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்?